தேடுதல்

அமெரிக்காவுக்கு வந்துள்ள ஆப்கான் புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவுக்கு வந்துள்ள ஆப்கான் புலம்பெயர்ந்தோர்  

ஆப்கான் புலம்பெயர்தோரை EU திறந்த கரங்களோடு வரவேற்க..

லிபியா மற்றும், EU நாடுகளின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில், மக்கள் பல நேரங்களில், சுரண்டப்படுகின்றனர் - கர்தினால் Hollerich

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய ஆட்சிக்கு அஞ்சி, நாட்டைவிட்டு வெளியேறும் அந்நாட்டு மக்களை, மனதார வரவேற்குமாறு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார், ஐரோப்பிய கர்தினால் ஒருவர்.

ஆப்கானிஸ்தான் மக்கள் மீது திருஅவை கொண்டிருக்கும் அக்கறை குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவையின் (COMECE) தலைவரான, லக்சம்பர்க் பேராயர், கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், இவ்வாறு ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள நாடுகளில் புலம்பெயர்ந்தோர் முகாம்களை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள கர்தினால் Hollerich அவர்கள், அந்த நாடுகளின் அரசியல், உறுதியற்றது, மற்றும்,  அந்நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதமும் நிலவுகிறது என்று கூறினார்.

எடுத்துக்காட்டாக, லிபியா மற்றும், EU நாடுகளின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில், மக்கள் பல நேரங்களில் நெறிமுறையின்றி நடத்தப்படுகின்றனர், மற்றும், சுரண்டப்படுகின்றனர் என்று, கர்தினால் Hollerich அவர்கள் எடுத்துரைத்தார்.

தங்கள் நாட்டில் உயிருக்கு அஞ்சி, ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்ற ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்களை, அனைத்து ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும், திறந்த கரங்களோடு வரவேற்கவேண்டும் என்று, கர்தினால் Hollerich அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஆகஸ்ட் 31, வருகிற செவ்வாய்க்கிழமைக்குள், அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள், ஆப்கானிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாண்ட்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகள், ஆப்கானிலிருந்து மக்களை வெளியேற்றும் விமானப்பணிகளை நிறுத்தியுள்ளன என்று கூறப்படுகின்றது.

மேலும், ஆகஸ்ட் 26, இவ்வியாழனன்று, காபூல் விமான நிலையம் அருகே ஒரு குண்டும், அடுத்த சில நிமிடங்களில், அருகில் உள்ள பயணியர் விடுதியில் மற்றொரு குண்டும் வெடித்தன. இவற்றில், 13 அமெரிக்க ஐக்கிய நாட்டு துருப்புகள் உட்பட ஏறத்தாழ 90 குடிமக்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும், 140க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2021, 15:12