தேடுதல்

கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் 

இந்தியாவில் பழங்குடி இன மக்கள் அடையும் துயர்கள்

பீகார், சோட்டாநாக்பூர், ராய்காட் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களிடையே நம்பிக்கையையும், கல்வியையும், மாண்பையும், வருங்காலத்தையும் வழங்கி பணியாற்றிவரும் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்காவில் பழங்குடியின மக்கள் அடையும் அதே துன்ப துயர்களையும், சவால்களையும், இந்தியாவின் பழங்குடியின மக்களும் அடைந்துவருவதாக கவலையை வெளியிட்டார், இந்தியாவின் ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி, திங்கள்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, பழங்குடியினர் உலக நாளையொட்டி, இணையம் வழி திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியாவில் பழங்குடியின மக்கள் அடைந்துவரும் துயர்களை குறிப்பிட்டதோடு, அவர்களிடையே பணியாற்றி தன் உயிரையும் கையளித்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை தன் செய்தியில் சிறப்பாக நினைவுகூர்ந்து, பாராட்டுக்களை வெளியிட்டார்.

பீகார், சோட்டாநாக்பூர், ராய்காட் (Chotanagpur, Raighad) ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களிடையே நம்பிக்கையையும், கல்வியையும், மாண்பையும், வருங்காலத்தையும் வழங்கி பணியாற்றிவரும் திருஅவை, உலகம் முழுவதும் பழங்குடியினத்தவர் அடைந்துவரும் அநீதிகளையும் சுரண்டல்களையும் அறிந்தே உள்ளது, என மேலும் தெரிவித்தார் கர்தினால் கிரேசியஸ்.

இதற்கிடையே, பழங்குடியினர் உலக தினத்திற்கு தயாரிப்பாக மூன்று நாள் இணையம் வழி கலந்துரையாடல்களை நடத்திய இந்திய ஆயர் பேரவையின் பழங்குடி விவகார துறையின் நிர்வாக செயலர், அருள்பணி Nicholas Baria அவர்கள் பேசுகையில், பழங்குடியினரின் உரிமைகள் அனைத்தும், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும், நடைமுறையில் அவர்களின் நில உரிமைகள், அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் பழங்குடியின மக்களின் பங்கேற்பின்றியே திட்டமிடப்படுகின்றன என்ற கவலையையும் வெளியிட்ட அருள்பணி பாரியா அவர்கள், இதனால் எவ்வித பயனையும் அடையாத பழங்குடியினத்தவர், பெரிய நிறுவனங்களின் திட்டங்களால் தங்கள் குடியிருப்புகளை இழப்பது ஒருபுறம் இருக்க, தொழிற்சாலைகளின் விளைவான தட்ப வெப்ப நிலை மாற்றங்களாலும் பாதிக்கப்படுகின்றனர், என மேலும் தெரிவித்தார். (AsiaNews)

10 August 2021, 15:01