தேடுதல்

Vatican News
கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்  

ஆகஸ்ட் 10, கருக்கலைப்பு சட்டத்திற்காக துயருறும் நாள்

இந்தியாவில், கத்தோலிக்கர் அனைவரும், மனித வாழ்வைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாள், இவ்வாண்டு ஆகஸ்ட் 10ம் தேதி இடம்பெறும்வேளை, கருவிலே குழந்தைகள் கொல்லப்படுவதை நினைத்து, அந்நாளில் நம் துயரங்களை வெளிப்படுத்துவோம் என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்தியத் திருஅவையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிறைவு நாளை முன்னிட்டு, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் அனைவருக்கும் மடல் ஒன்றை அனுப்பியுள்ள, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஆகஸ்ட் 10, வருகிற செவ்வாய்க்கிழமையை, துயருறும் தேசிய நாளாகக் கடைபிடித்து, இந்திய சமுதாயத்தில், வாழ்வை ஆதரிக்கும் மனநிலையை உருவாக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

இம்மாதம் 10ம் தேதியின் முக்கியத்துவத்தையும், இந்நாளில் மேற்கொள்ளப்படவேண்டிய சில முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் தன் மடலில் விளக்கியுள்ள, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியாவில், கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்குப்பின், வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், நாட்டின் கத்தோலிக்கர் அனைவரும், மனித வாழ்வைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்நாள் பற்றி கருத்து தெரிவித்துள்ள, கல்யாண் ஆயர் Thomas Elavanal அவர்கள், வாழ்வைப் படைத்தவர் கடவுள், அது, அவரின் கண்களில் விலைமதிப்பற்றது, மற்றும், வாழ்வு புனிதமானது, எனவே, மனித வாழ்வு தாயின் கருவில் உருவான நேரம் முதல், இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம், தாய் கர்ப்பம் தரித்த 20 வாரங்கள் வரை, கருவை கலைப்பதற்கு அனுமதியளித்திருந்தது. இச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப்பின், 2021ம் ஆண்டு மார்ச் மாதம், அக்காலக்கெடு 24 வாரங்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

07 August 2021, 14:25