தேடுதல்

“ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்” - திருப்பாடல் 17:1 “ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்” - திருப்பாடல் 17:1 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 2

நீதி தேடி கடவுளின் சந்நிதியை நாம் எப்போது, எவ்வாறு நாடுகிறோம்? "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" என்ற சொற்களுடன் ஆரம்பமாகும் 17ம் திருப்பாடல், நமக்குப் பாடங்கள் சொல்லித் தரட்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 2

சென்ற வாரம், 17ம் திருப்பாடலில் நம் விவிலியத்தேடலைத் துவங்கிய வேளையில், இத்திருப்பாடலின் முதல் வரிகளில் கூறப்பட்டுள்ள வழக்கு, நியாயம் என்ற சொற்கள், நம் எண்ணங்களை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நோக்கி திருப்பின. இன்று மீண்டும் அவரைச்சுற்றி நம் நினைவுகள் வலம்வருகின்றன. அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்திய சட்டங்கள்மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று, அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த திருவாளர் Arun Ferreira அவர்கள் கூறியதை, சென்ற விவிலியத்தேடலில் நினைவுகூர்ந்தோம்.

நடுநிலையோடு, இந்திய அறிஞர்கள் வகுத்த சட்டங்கள்மீதும், தான் வாழ்நாளெல்லாம் கடைபிடித்துவந்த உண்மையின்மீதும், நம்பிக்கை கொண்டிருந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், அந்தச் சட்டத்தின் வழியே தனக்கு கட்டாயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தன் சிறைவாழ்வின் துன்பங்களை ஏற்றுக்கொண்டார். இறுதிவரை, அவர், நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்துக்கிடந்த நீதி கிடைக்காமலேயே, அவர், இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

"ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்று தாவீது, 17ம் திருப்பாடலின் ஆரம்பத்தில் எழுப்பிய வேண்டுதலை, அருள்பணி ஸ்டான் அவர்களும், சிறையில் இருந்த ஒன்பது மாதக் காலத்தில், வெவ்வேறு வடிவங்களில் எழுப்பியிருப்பார். அவர் எழுப்பிய வேண்டுதலைக் கேட்ட விண்ணகத்தந்தை, அவருக்கு நியாயம் வழங்கும் வகையில், அவரை, விண்ணகத்திற்கு அழைத்துச்சென்றார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் மரணமடைந்த ஜூலை 5ம் தேதிக்கு அடுத்தநாள், சதிஷ் ஆச்சார்யா (Satish Acharya) என்ற கேலிச்சித்திரக் கலைஞர், அழகான, பொருள்நிறைந்த கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். விண்ணுலகில், தந்தையாம் இறைவன், அருள்பணி ஸ்டான் அவர்களின் தோள்மீது கரத்தை வைத்து, "மகனே, கொடூரமான உலகிலிருந்து உன்னை, பிணையலில் எடுத்துவிட்டேன்" என்று கூறியபடியே, அவரை விண்ணகத்திற்குள் அழைத்துச்சொல்வதுபோல, அச்சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. மும்பைச் சிறையிலிருந்து, தனக்கு, நிபந்தனைகளுடன் கூடிய பிணையலாவது (conditional bail) கிடைக்கும் என்று, ஒன்பது மாதங்களாய் காத்திருந்த 84 வயது நிறைந்த அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, இறுதியில், கடவுள், நிபந்தனையற்ற விடுதலையைப் (unconditional liberty) பெற்றுத்தந்தார்.

அரசின் அநீதிகளைப்பற்றி குரல் எழுப்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்திய நடுவண் அரசால் கொல்லப்பட்டதுபோலவே, ஜெர்ஸ்ட்சி போப்பியெவுஷ்கோ (Jerzy Popielusko) என்ற அருள்பணியாளர், 37 ஆண்டுகளுக்குமுன், போலந்து அரசால் கொல்லப்பட்டார்.

1947ம் ஆண்டு, போலந்து நாட்டில் பிறந்த ஜெர்ஸ்ட்சி அவர்கள், அருள்பணியாளராகப் பணியைத் துவக்கியபோது, போலந்து நாட்டை, வதைத்துவந்த,  கம்யூனிச ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து, கோவில்களில், மறையுரைகளில் குரல்கொடுத்தார். அவரை மௌனமாக்க, கம்யூனிச அரசு மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே, 1983ம் ஆண்டு, அவர்மீது பொய்குற்றம் சுமத்தி, சிறையில் அடைத்தது, கம்யூனிச அரசு. அதை எதிர்த்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்தால், அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையடைந்து வெளியேறிய அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்களை, ஒரு கார் விபத்தில் சிக்கவைத்து கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியுற்றது. இறுதியில், 1984ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கம்யூனிச அதிரடிப் படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், அவரைக் கடத்திச்சென்று, அடித்தே கொன்றனர்.

சென்ற விவிலியத்தேடலில், நாம், அருள்பணி ஸ்டான் அவர்களைப்பற்றி சிந்தித்த வேளையில், அவருக்கு மீண்டும், மீண்டும் மறுக்கப்பட்ட பிணையல், போபால் நகரில் ஏற்பட்ட நச்சுவாயு விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு வெகு எளிதில் கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டோம். அந்த போபால் விபத்திற்கும், அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்களுக்கும் உள்ள ஒப்புமைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

  • அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு, 1984.

போபால் விபத்து நிகழ்ந்த ஆண்டு 1984.

1984ம் ஆண்டு நடைபெற்ற இவ்விரு துயர நிகழ்வுகளுக்கு, 26 ஆண்டுகள் சென்று, 2010ம் ஆண்டு, இருவேறு வகையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. போபால் விபத்தில், 8 பேரை குற்றவாளிகள் என்று, 2010ம் ஆண்டு, ஜூன் 7ம் தேதி, திங்களன்று, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு முந்தைய நாள், ஜூன் 6ம் தேதி, ஞாயிறன்று, அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, அருளாளர் என்ற தீர்ப்பை வழங்கி, பெருமைப்படுத்தியது.

இவ்வாண்டு, ஜூலை 5ம் தேதி இறையடி சேர்ந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள்மீது சுமத்தப்பட்ட பொய்குற்றத்திலிருந்தும், அதனால் அவருடைய பெயருக்கு ஏற்பட்டக் களங்கத்தையும் நீக்கும் முயற்சியை, இந்தியாவில் பணியாற்றும் இயேசு சபையினர், துவக்கியிருப்பதாக, ஆகஸ்ட் 19, கடந்த வியாழனன்று, Live Law என்ற இணையவழி இதழில் வெளியான ஒரு செய்தி கூறுகின்றது. தன் வாழ்நாளெல்லாம், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும், அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழங்குடியின இளையோரின் விடுதலைக்காகவும் போராடிவந்தவர், அருள்பணி ஸ்டான் சுவாமி. இறுதியில், அவரே, அந்த இளைஞர்களைப்போல், அநீதியான முறையில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார். தற்போது, அவர், தீவிரவாதிகளுடன் தொடர்பற்றவர், வன்முறைகளைத் தூண்டாதவர் என்பதை, இந்திய நீதிமன்றங்களே அறிவித்து, அவரது பெயர்மீது சுமத்தப்பட்டக் களங்கத்தை நீக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்திய இயேசு சபையினர், தங்கள் முயற்சிகளைத் துவக்கியுள்ளனர்.

போபால் நச்சுவாயு விபத்து, அருள்பணியாளர் ஜெர்ஸ்ட்சி அவர்களின் கொலை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கொலை என்ற மூன்று துயர நிகழ்வுகளிலும், உலக அளவில், மனிதர்கள் நடுவில், நீதி, நியாயம் கிடைத்துள்ளதா என்பது பெரும் கேள்விக்குறியே. ஆனால், இந்த துயர நிகழ்வுகளின்போது, ஒரு சில நல்லவைகளும் நடந்திருக்கின்றன என்பது நமது நம்பிக்கை.

போலந்து நாட்டில் அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்கள் கொலையுண்ட செய்தி, பலரை, இறைவன் பக்கம் இழுத்து வந்துள்ளதென்பது தெளிவாகிறது. இவரது சாவுக்கு சட்டப்படி நீதி கிடைத்ததா? தெரியவில்லை. ஆனால், இவரது சாவினால் பல்லாயிரம் பேருக்கு நிறை வாழ்வு, இறை வாழ்வு கிடைத்தது என்பதை, அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு அருளாளர் என்ற நிலையை, திருஅவை வழங்கியுள்ளது. அதேபோல், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு திருஅவை பின்னொரு காலத்தில், அங்கீகாரம் வழங்கலாம், வழங்காமலும் போகலாம். ஆனால், அவரது  வாழ்வும், மரணமும், பல இளையோருக்கு, பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பது உறுதி.

உலகின் நீதிமன்றங்களில் உண்மையான, நீதியான தீர்ப்பு கிடைக்காமல், மனிதர்கள், அதிலும் முக்கியமாக, நீதியை விலைகொடுத்து வாங்கமுடியாத ஏழைகள், அணுகும் நீதி மன்றம்... கடவுளின் சந்நிதி.

நீதி தேடி கடவுளின் சந்நிதியை நாம் எப்போது, எவ்வாறு நாடுகிறோம்? அவநம்பிக்கையின், தோல்வியின் உச்சத்தில் இறைவனை நாடுகிறோமா அல்லது நடக்கும் அனைத்திற்கும் அந்த ஆண்டவனே நாயகன் என்ற நம்பிக்கையோடு நாடுகிறோமா? "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்ற சொற்களுடன் ஆரம்பமாகும் 17ம் திருப்பாடல், நமக்குப் பாடங்கள் சொல்லித் தரட்டும்.

இத்திருப்பாடலுக்கு, “மாசற்றவனின் மன்றாட்டு” என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், இத்திருப்பாடல், ஒரு சில பதிப்புகளில், Prayer of the innocent man என்றும், வேறு சில பதிப்புகளில், Prayer of the perfect man என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தத் திருப்பாடல் “மாசற்றவனின் மன்றாட்டு” அல்லது “உன்னதமான, மனிதனின் மன்றாட்டு” என்று கூறப்படுகிறது. இந்த உன்னதமான மனிதன் இயேசு என்றும், இயேசுவின் மனநிலையை முன்னறிவிக்கும்வண்ணம், தாவீது, இந்தத் திருப்பாடலைப் பாடியிருக்கலாம் என்றும், விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இயேசு, திருப்பாடல்களை, தன் வாழ்வில் பயன்படுத்தினார் என்பதை ஏற்கனவே அறிவோம். கல்வாரியில், சிலுவையில் அறையப்பட்டு, விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் மரணப்போராட்டம் நிகழ்த்திய அவ்வேளையிலும், இயேசு, திருப்பாடல்களைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம் (காண்க. திருப்பாடல் 22:1; 31:5). அந்தக் கோணத்திலிருந்து பார்க்கையில், இயேசு, நிச்சயம், 17ம் திருப்பாடலை, பல வேளைகளில், தன் வேண்டுதலாக எழுப்பியிருப்பார்.

பெரும்பாலான திருப்பாடல்களில் காணப்படும் முன் குறிப்பைப்போல், 17ம் திருப்பாடலிலும், 'தாவீதின் மன்றாட்டு' என்ற முன்குறிப்பு இடம்பெற்றுள்ளது. திருப்பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ள 150 பாடல்களில், 'தாவீதின் புகழ்ப்பா', 'தாவீதின் அறப்பாடல்', அல்லது, 'தாவீதின் கழுவாய்ப் பாடல்' என்ற முன்குறிப்புகள் பல திருப்பாடல்களின் முன்குறிப்பாக இடம்பெற்றுள்ளன. 17 மற்றும் 86 ஆகிய இரு திருப்பாடல்களில் மட்டுமே, 'தாவீதின் மன்றாட்டு' என்ற முன்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

'தாவீதின் மன்றாட்டு' என்ற சிறப்பான முன்குறிப்பைப் பெற்றுள்ள 17ம் திருப்பாடலின் முதல் இறைவாக்கியத்தில், “ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்” என்று தாவீது தன் மன்றாட்டைத் துவக்கியுள்ளார். இதில், 'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' (திருப்பாடல் 17:1) என்று அவர் கூறியிருப்பது, ஆங்கிலத்தில், "Attend to my cry", அதாவது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று ஆண்டவரிடம் தாவீது கூறுவதுபோல் அமைந்துள்ளது.

17ம் திருப்பாடலின் முதல் இறைவாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ‘அழுகை’ என்ற சொல்லுக்கு, Charles Spurgeon என்ற விவிலிய மறையுரையாளர் கூறியுள்ள அழகானதொரு விளக்கத்துடன், நாம், அடுத்தவாரத் தேடலை ஆரம்பிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2021, 14:39