தேடுதல்

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. (திருப்பாடல் 16:11) வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. (திருப்பாடல் 16:11) 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 3

ஆண்டவரே என் உரிமைச் சொத்து, அவரே எனக்கு அறிவுரை வழங்குபவர் என்ற உண்மைகளை, மனதார நம்பி வாழ்வோர், நிறைவான மகிழ்ச்சியும், பேரின்பமும் அடைவர் என்பதை, 16ம் திருப்பாடலின் வழியே, தாவீது, நமக்கு ஆணித்தரமாகச் சொல்லித்தந்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 3

திருப்பாடல்கள் நூல் முழுவதிலும், மன்னர் தாவீது, ஆண்டவரை, பல உருவகங்கள் வழியாக குறிப்பிட்டுள்ளார். அவர் பயன்படுத்தியுள்ள உருவகங்களில் ஒருசில, இதோ:

  • ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி - திருப்பாடல் 3:3
  • கடவுளே என் கேடயம்... கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி - திருப்பாடல் 7:10-11
  • ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; ... நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். - திருப்பாடல் 18:2
  • ஆண்டவரே என் ஆயர் - திருப்பாடல் 23:1

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு - திருப்பாடல் 27:1

இவ்வாறு, ஆண்டவரை, பல்வேறு உருவகங்கள் வழியே விவரிக்கும் மன்னர் தாவீது, 16ம் திருப்பாடலின் 5ம் இறைவாக்கியத்தில், தனக்கும் ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவை, ஆழமான பொருள்கொண்ட மூன்று உருவகங்கள் வழியே சித்திரித்துள்ளார்: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே (திருப்பாடல் 16:5)

ஆண்டவரை தன் உரிமைச்சொத்தாகக் கொண்டாடும் உரிமை, குருத்துவப் பணியாற்ற தெரிவுசெய்யப்பட்ட, ஆரோனுக்கு மட்டுமே வழங்கப்பட்ட உரிமை. ஆண்டவர், இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி அழைத்துச் சென்றவேளையில், மக்கள் அனைவருக்கும் அந்த நாட்டை வழங்குவதாகக் கூறினார். ஆனால், அவர் ஆரோனிடம் கூறியதை, நாம், எண்ணிக்கை நூல், 18ம் பிரிவில் இவ்வாறு வாசிக்கிறோம்: மேலும் ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை; இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே. (எண்ணிக்கை 18:20)

ஆண்டவரை தன் உரிமைச்சொத்தாக, பங்காகக் கொண்டிருப்பவருக்கு, வேறு உடைமைகள் தேவையில்லை; அவருக்கு அனைத்து நலன்களும் வந்துசேரும் என்பதை உணர்த்தவே, ஆண்டவர், தன்னையே, ஆரோனின் உரிமைச்சொத்தாக, வழங்கினார். இந்த எண்ணத்தைச் சிந்திக்கும்போது, 'மகனைப் பெறுவோர், மற்ற அனைத்தையும் பெறுவர்' என்ற தலைப்பில் இணையதளத்தில் அவ்வப்போது வலம்வரும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

செல்வந்தர் ஒருவரும், அவரது இளவயது மகனும், உலகப்புகழ்பெற்ற ஓவியர்களின் அரிதான ஓவியங்களை தேடிக்கண்டுபிடித்து சேர்த்துவைப்பதில், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்கள் வாழ்ந்த இல்லத்தின் அனைத்து சுவர்களிலும் அந்த ஓவியங்கள் மாட்டப்பட்டு, அது, ஓர் ஓவிய அருங்காட்சியகமாகத் திகழ்ந்தது.

அவர்கள் வாழ்ந்த நாட்டில், திடீரென போர் மூண்டதால், இளையவர், போர்க்களத்திற்கு பணியாற்றச் சென்றார். ஒரு சில நாள்களில், அவர், ஏனைய வீரர்களைக் காக்கும் பணியில், தன் உயிரை இழந்தார். செய்தியறிந்த தந்தை, மிகவும் மனமுடைந்து போனார். உள்ளூரில் வாழ்ந்த ஓர் ஓவியரின் உதவியுடன், தன் மகனின் ஓவியத்தை உருவாக்கி, அதை, அவ்வில்லத்தில் மாட்டப்பட்டிருந்த புகழ்பெற்ற ஓவியங்கள் நடுவே மிக முக்கியமான இடத்தில் மாட்டிவைத்தார். ஒவ்வொருநாளும், அந்த ஓவியத்தின் முன் அமர்ந்து, தன் மகனுடன் உரையாடிவந்தார், அத்தந்தை. ஒரு சில வாரங்களில், மகனின் பிரிவுத்துயர் தாளாமல், அவர் மரணமடைந்தார்.

அவர் மரணமடைந்த ஒருசில மாதங்களுக்குப்பின், அந்த இல்லத்தில் இருந்த ஓவியங்கள், ஏலத்திற்கு விடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த இல்லத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த ஓவியங்கள், விலைமதிப்பற்றவை என்பதை உணர்நதிருந்த பெரும் செல்வந்தர்கள், அந்த ஏலத்தில் பங்கேற்க, பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தனர்.

ஏலம் விடுபவர், மேடையேறியதும், முதலில், அவ்வில்லத்தில் மாட்டப்பட்டிருந்த மகனின் ஓவியத்தை ஏலம்விடத் துவங்கினார். வந்திருந்தவர்கள், அந்த ஓவியத்தை, கடைசியில் ஏலத்திற்கு விடுமாறும், முதலில், அரிதான ஓவியங்களுடன் ஏலத்தைத் துவக்குமாறும் வற்புறுத்தினர். ஆனால், ஏலம் விடுபவரோ, முதலில் மகனின் ஓவியம்தான் ஏலத்திற்கு விடப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார். அவர் அந்த ஓவியத்தின் விலையை எவ்வளவோ குறைத்து சொல்லியும், அதை வாங்க ஒருவரும் முன்வரவில்லை. அந்த இளையவரை சிறுவயது முதல் வளர்ந்துவந்த பணியாளர் ஒருவர், அந்த ஓவியத்தை, தன் இல்லத்திற்கு கொண்டுசெல்ல விழைந்தார். எனவே, அவர், தன்னிடம் இருந்த சிறிதளவு பணத்தைக் கொடுத்து, அந்த ஓவியத்தை வாங்கினார்.

அந்த ஓவியம் விற்றுப்போனதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மற்றவர்கள், ஏனைய புகழ்பெற்ற ஓவியங்களின் ஏலத்திற்கு தயாராக இருந்தனர். அப்போது, ஏலம் விடுபவர், "ஏலம் முடிந்துவிட்டது" என்று அறிவித்தார். கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் ஒருசிலர் ஆத்திரமடைந்து, காரணம் கேட்டனர். அப்போது, ஏலம் விட்டவர், அந்த செல்வந்தர், இறப்பதற்கு முன் எழுதி வைத்த உயிலை எடுத்து வாசித்தார்: "இந்த இல்லத்தில் உள்ள அனைத்து ஓவியங்களும் ஏலம் விடப்படும் நிலையில், என் மகனின் ஓவியம் முதலில் ஏலம் விடப்படவேண்டும். அந்த ஓவியத்தை வாங்குபவருக்கு, இல்லத்திலுள்ள அனைத்து ஓவியங்களும் உரிமைச் சொத்தாகும்" என்று அந்த உயிலில் எழுதியிருந்தது. “மகனைப் பெறுவோர், மற்ற அனைத்தையும் பெறுவர்”.

ஆண்டவரை உரிமைச்சொத்தாகப் பெற்றால், அது, அனைத்தையும் பெறுவதற்குச் சமம் என்பதை உணர்ந்திருந்த மன்னர் தாவீது, ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே (திருப்பாடல் 16:5) என்று அறிக்கையிடுகிறார். ஆண்டவரை உரிமைச்சொத்தாகக் கொண்டிருந்ததால், தனக்கு வந்துசேர்ந்த நன்மைகளை, மன்னர் தாவீது, 6ம் இறைவாக்கியத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே. (திருப்பாடல் 16:6)

இதைத்தொடர்ந்து, 16ம் திருப்பாடலின் 7ம் இறைவாக்கியத்தில், தனக்கு அறிவுரை வழங்கும் ஆசானாக ஆண்டவரை உருவகித்துப் பேசுகிறார் தாவீது. "எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது." (திருப்பாடல் 16:7)

ஆண்டவரை, அறிவுரை வழங்குபவராக உருவகித்துப் பேசும் தாவீதின் கூற்று, யோவான் நற்செய்தியில் பதிவாகியுள்ள மற்றொரு கூற்றை நினைவுக்குக் கொணர்கிறது. தன் சீடர்களுடன் இறுதி இரவுணவை அருந்தியபோது, அங்கு நிலவிய துயரமான, இறுக்கமானச் சூழலில், சீடர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், இயேசு, அவர்களிடம், தூய ஆவியாரை அறிமுகப்படுத்துகிறார். அவ்வேளையில், தூய ஆவியாராகிய ஆண்டவர் மட்டுமே ‘அனைத்தையும் கற்றுத் தருபவர்’ என்பதை, இயேசு தன் சீடர்களிடம் தெளிவாகக் கூறியுள்ளார்: என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். (யோவான் 14:26)

ஆண்டவரை, அறிவுரை வழங்கும் ஆசானாகப் பெற்றிருப்பதால், இரவு பகல் என்று பாராமல், எல்லா நேரங்களிலும் தனக்கு இறைவனின் ஆலோசனைகள் கிடைக்கின்றது என்பதை, "இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது" என்ற சொற்கள் வழியே மன்னர் தாவீது உணர்த்துகிறார்.

ஒரு மனிதராக, ஒரு மன்னராக தான் தவறுகள் புரிந்தபோது, தனது மனச்சான்று, இரவில் எச்சரிக்கை விடுத்தது என்பதையும், அதை, ஆண்டவர் வழங்கும் அறிவுரைகளின் தொடர்ச்சியாக, தான் எண்ணிப்பார்த்ததாகவும், தாவீது, 7ம் இறைவாக்கியத்தில் கூறியுள்ளார்.

இரவும் பகலும் ஆண்டவரின் அறிவுரைகளுக்கு எப்போதும் தான் செவிமடுப்பதை, இத்திருப்பாடலின் 8ம் இறைவாக்கியத்தில், வேறொரு வழியில், கூறியுள்ளார் தாவீது: ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். (திருப்பாடல் 16:8)

மனச்சான்றின் குரலுக்கு இரவிலும் செவிமடுத்து வாழ்ந்த தாவீது, அதன் பயனாக அடைந்த மகிழ்வை, 9ம் இறைவாக்கியத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். (திருப்பாடல் 16:9)

9ம் இறைவாக்கியத்தில், மன்னர் தாவீது, இதயம், உள்ளம், உடல் என்ற மூன்று சொற்களையும், அவற்றுடன், அக்களிப்பு, மகிழ்வு, பாதுகாப்பு என்ற மூன்று சொற்களையும் இணைத்துள்ளது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது. நமது இதயமும், உள்ளமும் மகிழ்வாலும், அக்களிப்பாலும் நிறையும்போது, நம் உடல், எவ்வித நோயுமின்றி பாதுகாப்பாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இவ்வுண்மையை அறிக்கையிடும் இந்த இறை வாக்கியம், நம் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஓர் அறிவரையாக, குறிப்பாக, நாம் வாழும் இந்த பெருந்தொற்று காலத்திற்கு ஏற்றதொரு அறிவுரையாக ஒலிக்கிறது.

ஆண்டவரின் அறிவுரைகளைப் பின்பற்றி, இரவிலும் தன் மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்து, அக்களிப்புடன், மகிழ்வுடன் பாதுகாப்புடன் வாழ்வதாகக் கூறிய தாவீது, மரணத்திற்குப் பின்னரும், பாதாளத்திலும், படுகுழியிலும் தான் வாழப்போவதில்லை என்பதை, 10ம் இறைவாக்கியத்தில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்: என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். (திருப்பாடல் 16:10) 10ம் இறைவாக்கியத்தில், தாவீது கூறியுள்ள இந்த அறிக்கை, இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து அவர் முன்னறிவித்த சொற்கள் என்று, திருத்தூதர்களான புனித பேதுருவும், பவுலும் கூறியுள்ளதை, (காண்க. தி.பணிகள் 2:29-31; 13:35-37) நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம்.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன் (திருப்பாடல் 16:1) என்று, ஒருவித கலக்கத்துடன், அச்சத்துடன், ஆரம்பமான 16ம் திருப்பாடலின் இறுதி இறைவாக்கியம், வாழ்வின் வழியை, நிறைவான மகிழ்ச்சியை, பறைசாற்றுகிறது: வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. (திருப்பாடல் 16:11)

ஆண்டவரைத்தவிர வேறு செல்வம் எனக்கு இல்லை, அவரே என் உரிமைச் சொத்து, அவரே எனக்கு அறிவுரை வழங்குபவர் என்ற உண்மைகளை, மனதார நம்பி வாழ்வோர், நிறைவான மகிழ்ச்சியும், பேரின்பமும் அடைவர் என்பதை, 16ம் திருப்பாடலின் வழியே, தாவீது, நமக்கு ஆணித்தரமாகச் சொல்லித்தந்துள்ளார். இத்தகைய எண்ணங்களை, மன்னர் தாவீதின் உள்ளத்தில் விதைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2021, 14:28