தேடுதல்

Spin Boldak எல்லையை மூடியுள்ள தாலிபான்கள் Spin Boldak எல்லையை மூடியுள்ள தாலிபான்கள் 

பங்களாதேஷ் அரசின் தாலிபான் உறவு குறித்து கவலை

இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு, பங்களாதேஷ் ஆகும். 2011ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, இந்நாட்டின் 16 கோடி மக்களுள், 0.4 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பிற்கும், பங்களாதேஷ் அரசுக்கும் இடையே நிலவும் உறவு, பங்களாதேஷ் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் செயல்பாடுகளுக்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கும் என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

ஆப்கான் மக்களின் அரசை, தாலிபான் அமைப்பு உருவாக்கினால், அந்த அரசை  பங்களாதேஷ் வரவேற்கும் என்றும், அம்மக்களுக்காக பங்களாதேஷின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் என்றும், பங்களாதேஷ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் A.K. Abdul Momen அவர்கள், ஆகஸ்ட் 16, இத்திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளியிட்டுள்ள பங்களாதேஷ் திருஅவை அதிகாரிகள், தாலிபான்களோடு தொடர்பை வைத்துக்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும், உள்ளூர் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு உரமூட்டுவதாய் அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.   

பங்களாதேஷ் அரசின் இந்த அறிவிப்பு குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழுவின் செயலராகப் பணியாற்றும், திருச்சிலுவை சபையின் அருள்பணி Liton H. Gomes அவர்கள், சனநாயகம், மற்றும், சனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஆகியவற்றுக்கு, திருஅவை எப்போதும் ஆதரவாக இருக்கின்றது, ஆனால், தாலிபான் போன்ற மதத் தீவிரவாதக் குழுவோடு உள்ள உறவை ஏற்காது என்று கூறியுள்ளார்.

தீவிரவாதம் தலைதூக்குவது குறித்து விழிப்போடு இருக்கவும், ஆப்கானிஸ்தானை தாலிபான் மீண்டும் ஆக்ரமிப்பதற்கு எதிராக, உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவும் வேண்டும் என்று, பங்களாதேஷ் அரசை வலியுறுத்திக் கூறியுள்ள அருள்பணி Gomes அவர்கள், கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், எவரும், எந்தவித தீவிரவாத அரசுக்கும் ஆதரவளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

பங்களாதேஷ் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும், பல்சமய உரையாடல் பணிக்குழுவின் செயலராகப் பணியாற்றும், அருள்பணி Patrick Gomes அவர்களும், ஆப்கானில் தாலிபான் ஆட்சிசெய்வதை ஏற்பதால் வரும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு பங்களாதேஷ் ஆகும். பன்மைக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் இந்நாடு, பல ஆண்டுகளாக, இஸ்லாமியத் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, இந்நாட்டின் ஏறத்தாழ 16 கோடி மக்களுள், 0.4 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். (UCAN)   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2021, 15:16