தேடுதல்

பத்திரிகையாளர்களுடன் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Luis Raphael Sako பத்திரிகையாளர்களுடன் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Luis Raphael Sako 

ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை பேரவைப் பெயர் மாற்றம்

ஈராக் மற்றும், சிரியாவில், பல இலட்சக்கணக்கான மக்கள், மின்சாரம், உணவு, மற்றும் குடிநீர் இன்றி வாடும் நிலை உருவாகும் அச்சத்தை வெளியிட்டுள்ளது, அனைத்துலக வல்லுனர்கள் குழு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கல்தேய வழிபாட்டுமுறை பேரவையின் பெயரிலிருந்து 'பாபிலோன்' என்ற நகரின் பெயர் நீக்கப்பட்டதற்குரிய விளக்கத்தை வழங்கியுள்ளனர், கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் மாமன்றத்தின் தந்தையர்கள்.

'பாபிலோனின் கல்தேய வழிபாட்டுமுறை பேரவை' என்று இதுவரை அழைக்கப்பட்ட இந்த அவையின் பெயரிலிருந்து பாபிலோன் என்ற பெயரை, இம்மாதம் பாக்தாத்தில் கூடிய ஆயர் மாமன்றம் அகற்றியது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்த கல்தேய ஆயர்கள், பாபிலோனுக்கும் கிறிஸ்தவ சபைக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்த வரலாற்றுச் சான்றுகள் இல்லாமையால், இப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

பாபிலோனியப் பேரரசின் தலைநகராகவும், தற்போது ஈராக்கிய இஸ்லாமியர்களின் நகராகவும் இருக்கும் பாபிலோன், எப்போதுமே கல்தேய வழிபாட்டுமுறையின் தலைமையிடமாக இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லையென அறிவித்த ஆயர்கள், மெசபத்தோமியா பகுதிக்கு கிறிஸ்தவம் வரும் முன்னரே பாபிலோன் நகர் அழிவுக்குள்ளாகியுள்ளது என தெரிவித்தார்.

16ம் நூற்றாண்டில் கிழக்கு நாடுகளின் அசீரியன் கிறிஸ்தவ சபையின் ஒரு பிரிவு உரோமைத் திருஅவையுடன் ஒன்றிப்பை வெளியிட்டு இணைந்தபோதுதான் கல்தேய வழிபாட்டுமுறை பேரவை துவக்கப்பட்டபோதிலும், 1724ம் ஆண்டில்தான் முதுபெரும்தந்தை மூன்றாம் Youssef  அவர்களால் பாபிலோன் என்ற பெயர், கல்தேய வழிபாட்டுமுறை பேரவை இணைக்கப்பட்டது என, கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் விளக்கமளித்தனர்.

இதற்கிடையே, பருவநிலை மாற்றத்தின் காரணமாக, ஈராக் மற்றும் சிரியாவில், பல இலட்சக்கணக்கான மக்கள், மின்சாரம், உணவு, மற்றும் குடிநீர் இன்றி வாடும் நிலை உருவாகும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது, அனைத்துலக வல்லுனர்கள் குழு.

சிரியாவில் குறைந்தபட்சம் 50 இலட்சம் மக்களும், ஈராக்கில் 70 இலட்சத்திற்கும் அதிகமானோரும் பற்றாக்குறைகளால் அவதியுறும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறும் வல்லுநர்கள், அப்பகுதியில் 400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள், பயன்படுத்தப்படமுடியாத அளவிற்கு வறண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈராக், மற்றும் சிரியாவில் மட்டுமல்ல, லெபனான் நாட்டிலும் மருந்துப்பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துவருவதாகவும், வல்லுனர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். (Fides, AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2021, 14:39