'உலகின் அழுகுரல், வறியோரின் அழுகுரல்' – ஆஸ்திரேலிய திருஅவை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆஸ்திரேலியத் தலத்திருஅவை, இனிவரும் காலங்களில், இயற்கையைப் பாதுகாத்து, நீடித்து நிலைக்கும் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், வறியோரை வாழ்விக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், அந்நாட்டு ஆயர் பேரவை, ஆகஸ்ட் 5, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
'உலகின் அழுகுரல், வறியோரின் அழுகுரல்' என்ற தலைப்பில், ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் சமுதாய நீதிப் பணிக்குழு இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்துவரும் ஏழு ஆண்டுகளில், Laudato Si’ திருமடலில் கூறப்பட்டுள்ள ஏழு இலக்குகள் நோக்கி தலத்திருஅவை பயணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வுலகம் முழுவதும் சந்தித்துவரும் சுற்றுச்சூழல் சீரழிவுகள், ஆஸ்திரேலியாவிலும் நிகழ்கிறது என்று கூறிய சமுதாய நீதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் வின்சென்ட் லாங் அவர்கள், இந்த அழிவுகளிலிருந்து மீண்டுவர திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Laudato Si’ திருமடலில் காட்டியுள்ள வழியை பின்பற்றி, ஆஸ்திரேலியத் திருஅவை முயற்சிகள் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
இறைவன் உருவாக்கிய படைப்பை, ஓர் அருளடையாளமாகக் காணவும், அவரது கொடையை வியந்து கொண்டாடவும் ஆஸ்திரேலியக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஆயர் பேரவையின் சமுதாய நீதிப் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்துவரும் ஏழு ஆண்டுகளின் பணிகளை ஒருங்கிணைக்க, ஆஸ்திரேலிய ஆயர் பேரவை, 'நீதி, சுற்றுச்சூழல் மற்றும் அமைதி அலுவலகம்' என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது என்று ஆயர் லாங் அவர்கள் அறிவித்தார்.