தேடுதல்

கந்தமால் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது கந்தமால் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது  

அன்பு, மன்னிப்பின் துணையுடன் கந்தமால் கிறிஸ்தவர்கள்

நமக்கு வரும் துன்பங்கள், நம்மை தூய்மைப்படுத்தி புனிதப்படுத்துவதால், அவைகளை நாம் நன்றியுள்ள இதயத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன்னர், 2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வரலாறு காணாத வன்முறைகளிலிருந்து தப்பியுள்ளோர், அன்பு மற்றும் மன்னிப்பின் துணைகொண்டு வாழ்வை முன்னோக்கி எடுத்துச்செல்வதாக அறிவித்துள்ளனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு, மற்றும், அன்பின் துணைகொண்டு எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுபடமுடியும் என்பதை, தன் அனுபவம் வழியாக தான் கற்றுக்கொண்டதாக உரைத்த அருள்சகோதரி மீனா பார்வா அவர்கள், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களை, தான் மன்னித்துள்ளதாகவும், பிற மதத் தீவிரவாதிகளால் அதிக அளவில் தங்களின் துறவுசபைக்கு வழங்கப்பட்ட துன்பங்களால், தங்கள் விசுவாசம் மேலும் ஆழப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

13 ஆண்டுகளுக்கு முன்னர் கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை நினைத்துப் பார்க்கும்போது, நம் வாழ்வில் வரும் அனைத்துச் சவால்களும் நம்மை மேம்படுத்துவதற்குத்தானே ஒழிய, நம்மை கீழ்நோக்கி இழுத்துச் செல்வதற்கல்ல என்பதைக் கற்றுள்ளோம், ஏனெனில், நாம் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், மனவுறுதியுடனும், புரிந்துகொள்ளுதலுடனும் செயல்பட வேண்டியதை கற்றுத்தருகின்றன என்றார், அருள்சகோதரி மீனா.

நமக்கு வரும் துன்பங்கள் நம்மைத் தூய்மைப்படுத்தி புனிதப்படுத்துவதால், அவைகளை நாம் நன்றியுள்ள இதயத்துடன் ஏற்றுக்கொளளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அவர்.

அமைதி, நீதி, சரிநிகர்தன்மை ஆகியவைகளுக்காகவும், மாண்பு மற்றும் மதிப்புடன் வாழ்வதற்கு இருக்கும் உரிமைகளுக்காகவும் கடந்த 13 ஆண்டுகளாக கந்தமாலில் போராடிவரும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்காக கொல்லப்பட்ட கந்தமால் மறைசாட்சிகளை நன்றியுடன் நினைவுகூர்வதாகவும், அவர்களை இழந்து துன்புறும் குடும்பங்களுக்கு அக்கறையையும் ஆறுதலையும் வழங்குவதாகவும், அருள்சகோதரி மீனா அவர்கள் எடுத்துரைத்தார்.

கந்தமால் கலவரத்தின்போது, பிறமதத் தீவிரவாதிகளால், பாலியல் வன்கொடுமைகளை அடைந்த அருள்சகோதரி மீனா அவர்கள், அதன்பின் சட்டம் பயின்று, தற்போது ஒடிசா வழக்கறிஞர்கள் அவையில் அங்கத்தினராக, அநீதி இழைக்கப்பட்ட மக்கள் சார்பாக உழைத்துவருகிறார். (AsiaNews)

 

24 August 2021, 14:57