தேடுதல்

Vatican News
கல்விக்கூடமாய் விளங்கும் குடும்பம் கல்விக்கூடமாய் விளங்கும் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : 'அன்பின் மகிழ்வு' 7ம் பிரிவு - அறிமுகம்

குழந்தைகள் பெறக்கூடிய 'மேன்மைமிகு' கல்வி, குடும்பங்களில் வழங்கப்படவேண்டும் என்பதை, "Towards a better education of children" என்ற தலைப்பின் வழியே உணர்த்த முயன்றுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கோவிட் பெருந்தொற்றும், அதன் உறவு தொற்றுக்களும் உருவாக்கிவரும் தாக்கங்களிலிருந்து, நம்மைக் காத்துக்கொள்ள, கடந்த 20 மாதங்களாய், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழப் பழகிவருகிறோம். அவற்றில், வீட்டிலிருந்தே வேலைசெய்யும் கட்டாயம் ஏற்பட்டதால், வீடு, அலுவலகமாக மாறியுள்ளது. அதேபோல், நம் குழந்தைகள், கல்விக்கூடங்களுக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளதால், நம் இல்லங்கள், கல்விக்கூடங்களாகவும் மாறியுள்ளன. இல்லங்கள், கல்விக்கூடங்கள் என்பது, உண்மையிலேயே, புதிதாகத் தோன்றிய மாற்றம் அல்ல. மனிதவரலாற்றின் துவக்கத்திலிருந்தே, இல்லங்கள், கல்விக்கூடங்களாக இருந்துவந்துள்ளன. இதை நாம் சரிவர உணராமல் வாழ்ந்துள்ளோம்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதன் பெற்றோரே முதல் ஆசிரியர்கள், அக்குழந்தை, தவழவும், தளிர்நடைபோடவும், கற்றுக்கொணட இல்லமே, அதன் முதல் கல்விக்கூடம். குடும்பங்களில், குழந்தைகள் பெறக்கூடிய, பெறவேண்டிய கல்வியைப்பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில் விளக்கிக்கூறியுள்ளார். இப்பிரிவுக்கு திருத்தந்தை வழங்கியுள்ள தலைப்பு, முதலில் நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

"Towards an education of children", அதாவது, "குழந்தைகளின் கல்வியை நோக்கி" என்று மட்டும் கூறாமல், "Towards a better education of children", அதாவது, "குழந்தைகளின் மேன்மைமிகு கல்வியை நோக்கி" என்று, திருத்தந்தை, இப்பிரிவுக்குத் தலைப்பிட்டுள்ளார். ஒரு குழந்தை, உலகெங்கும் சென்று, பல்வேறு கல்விக்கூடங்களில் பயின்று, பட்டங்கள் பெற்றாலும், அக்குழந்தை பெறக்கூடிய 'மேன்மைமிகு' கல்வி, குடும்பங்களில் வழங்கப்படவேண்டும் என்பதை, இத்தலைப்பின் வழியே உணர்த்த முயன்றுள்ளார், திருத்தந்தை.

பெற்றோர், தங்கள் குழந்தையின் வளர்ச்சியைக் குறித்து விழிப்பாயிருக்கவேண்டும், என்பதை, இப்பிரிவின் துவக்கத்தில், ஓர் அறிவுரையாக வழங்கியுள்ள திருத்தந்தை, அதே வேளையில், மிக அதிகமான கண்காணிப்புடன், குழந்தையை, சுற்றிவளைத்து நெருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, குழந்தைகளின் நன்னெறி உருவாக்கம், கண்டித்து வளர்ப்பதன் பயன், உலக எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பொறுமை காப்பது, பாலியல் கல்வி, மத நம்பிக்கையை வழங்குதல் ஆகிய பகுதிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

24 August 2021, 14:32