தேடுதல்

பிள்ளையைத் தேற்றும் பெற்றோர் பிள்ளையைத் தேற்றும் பெற்றோர் 

மகிழ்வின் மந்திரம்: பிள்ளைகள் ஆளுமையில் வளர பெற்றோரின் பங்கு

நம் பிள்ளைகளின் ஆன்மா எங்கே நிலைகொண்டுள்ளது என்பதை நாம் உண்மையிலேயே அறிந்திருக்கிறோமா?, அதை அறிந்துகொள்வதற்கு நாம் விரும்புகிறோமா? – பெற்றோரிடம், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவின்கீழ், நம் பிள்ளைகள் எங்கே? என்ற தலைப்பில், பிள்ளைகள், உண்மையான சுதந்திரத்திலும், நன்னெறியிலும் வளர, பெற்றோரின் பங்கு என்ன என்பதுபற்றி, 261ம் பத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள்...   

பெற்றோர், தங்கள் கருத்தை, பிள்ளைகள் மீது திணிப்பது, கல்வி ஆகாது. அதேநேரம், பிள்ளைகள் எதிர்கொள்ளும் அனைத்துச் சூழல்களையும் நம்மால் கட்டுப்படுத்தவும் முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் தனித்துவத்தை ஆக்ரமித்து தங்களின் கருத்துக்களைத் திணிப்பதைவிட, பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான செயல்களைத்  துவக்குவது மிகவும் முக்கியம். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒவ்வோர் அசைவையும் அறிவதிலும், கட்டுப்படுத்துவதிலுமே எப்போதும் குறியாய் இருந்தால், அவர்கள் பிள்ளைகளின் தனித்துவத்தை ஆதிக்கம் செலுத்தவே தேடுவார்கள். பிள்ளைகள், சவால்களைச் சந்திப்பதற்கு கற்றுக்கொடுப்பது, மற்றும், அவர்களை உறுதிப்படுத்தும் முறை, இதுவல்ல. மாறாக, சுதந்திரம், ஆளுமை, நன்னெறிகள், மற்றும், உண்மையான தன்னுரிமை ஆகியவற்றில் பிள்ளைகள் வளர உதவிசெய்ய, பெற்றோருக்கு அன்போடுகூடிய திறமை இருக்கவேண்டியது மிக முக்கியம். பெற்றோர் இவ்வாறு உதவிபுரிவதால் மட்டுமே, பிள்ளைகள், இன்னல்களை எதிர்கொள்ளும்போது அவற்றை அறிவோடும், விவேகத்தோடும் கையாளக் கற்றுக்கொள்வார்கள். நம் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள்? அல்லது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யாரோடு இருக்கிறார்கள்? என்பது அல்ல, ஆனால், அவர்கள், தங்கள் நம்பிக்கைகள், இலக்குகள், ஆசைகள், மற்றும், கனவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்கின்றார்களா? என்பதே, இங்கு கேட்கப்படவேண்டிய உண்மையான கேள்வி. நம் பிள்ளைகள், தங்களின் வாழ்வுப் பயணத்தில், உண்மையிலேயே ஊன்றி இருக்கின்றார்களா? அவர்களின் ஆன்மா எங்கே நிலைகொண்டுள்ளது என்பதை நாம் உண்மையிலேயே அறிந்திருக்கிறோமா?, எல்லாவற்றிற்கும் மேலாக, அவற்றை அறிந்துகொள்வதற்கு நாம் விரும்புகிறோமா? என்ற கேள்விகளை நான் பெற்றோரிடம் கேட்க விழைகிறேன். இவ்வாறு திருத்தந்தை, 261ம் பத்தியை நிறைவுசெய்துள்ளார். (அன்பின் மகிழ்வு 261)

26 August 2021, 14:52