தேடுதல்

நித்திய வாழ்வு நித்திய வாழ்வு 

மகிழ்வின் மந்திரம்: இவ்வுலக வாழ்வை நன்றாக வாழ்வதன் பயன்

இறந்த நம் அன்புக்குரியவர்களோடு உறவைக் காத்துக்கொள்வதற்கு ஒரு வழி அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 'மேய்ப்புப்பணி சார்ந்த சில கண்ணோட்டங்கள்' என்ற 6ம் பிரிவின்கீழ், இறுதியாக, அன்புக்குரியவர்களின் இறப்பால், நாம் துயருறும்போது, அந்த இறப்பை நாம் எவ்வாறு ஏற்கவேண்டும், நமது இறப்புக்கு, நாம் எவ்வாறு தயாரிக்கவேண்டும் என்பது குறித்து, 253ம் பத்தி முதல் 258ம் பத்தி வரை எடுத்துரைத்து, அந்தப் பிரிவை நிறைவுசெய்துள்ளார். அந்த 6ம் பிரிவின் இறுதி மூன்று பத்திகளில் (256,257,258), திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ..

நம் வாழ்வு மரணத்தோடு முடிந்துவிடுவதில்லை. திருத்தூதர் புனித பவுலும், தனது மரணம் பற்றிக் குறிப்பிடுகையில், உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்பதே என் ஆவல் (பிலி.1:23) என்று எழுதியுள்ளார். மரணம் நம்மை துயருறச் செய்தாலும், அதற்குப்பின் அழியா வாழ்வு உண்டு என்பதில் நாம் ஆறுதல் அடைகிறோம் என்று, இறந்தோர் அடக்கச்சடங்கு திருவழிபாட்டில் கூறப்படுகிறது. உண்மையில், இறந்த  நம் அன்புக்குரியவர்கள் கடவுளின் நல்ல வலிமையான கரங்களில் உள்ளனர் என்பதை நம் கிறிஸ்தவ நம்பிக்கை உறுதியளிக்கிறது. இறந்த நம் அன்புக்குரியவர்களோடு உறவைக் காத்துக்கொள்வதற்கு ஒரு வழி அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகும். அவர்களுக்காகச் செபிப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் நமக்காக கடவுளிடம் பரிந்துரை செய்கிறார்கள் என்ற உறுதியிலும் ஆகும். சில புனிதர்கள், தாங்கள் இறப்பதற்குமுன், தம் அன்புக்குரியவர்களிடம், அவர்களுக்கு இறையருளைப் பெற்றுத்தர எப்போதும் அருகில் இருப்போம் என்று தேற்றியுள்ளனர். புனித குழந்தைதெரேசாளும், விண்ணகத்திலிருந்து தொடர்ந்து நன்னை செய்வதாக உறுதியளித்தார். புனித தோமினிக்கும், இறப்பிற்குப்பின் திருவருளைப் பெற்றுக்கொடுப்பதில் மிகவும் சக்தியுள்ளவராக இருப்பேன் என்று கூறினார். இவையெல்லாம் அன்பின் பிணைப்புகள் ஆகும். எனவே ஆண்டவரில் துயில்கொள்பவர்கள், ஆன்மீக நலன்களை நம்மோடு பரிமாறிக்கொள்கிறார்கள். இவ்வாறு மரணத்தை நாம் ஏற்றுக்கொண்டால், அதற்கு நம்மையும் தயாரிக்க முடியும். மரணம் நம்மை நெருங்கும் நாள்வரை நம்மோடு வாழ்பவர்கள் மீது அன்பில் வளர, இதுவே வழியாகும். இவ்வாறு, ஏற்கனவே இறந்த நம் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திப்பதற்கு நம்மையே நாம் தயாரிப்போம். எனவே கடந்தகாலத்திலேயே மூழ்கியிருந்து சக்தியை வீணாக்காதிருப்போம். நாம் இவ்வுலகில் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோமோ, அந்த அளவிற்கு, நம் அன்புக்குரியவர்களோடு விண்ணகத்தில், மிகுந்த மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்துகொள்வோம். இந்த உலகத்தில் நாம் எவ்வளவுக்கு பக்குவமடைந்த நிலையில் வளர்கின்றோமோ அந்த அளவிற்கு, அதிகமான கொடைகளை விண்ணக விருந்திற்கு நம்மால் கொண்டுசெல்ல முடியும். (அன்பின் மகிழ்வு 256,257,258)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2021, 14:31