தேடுதல்

Vatican News
டான்சானியா நாட்டு கைம்பெண்கள் டான்சானியா நாட்டு கைம்பெண்கள் 

மகிழ்வின் மந்திரம்: வாழ்க்கைத் துணைவரின் மறைவு, மிகவும் துயர்தரு

தங்களது வாழ்க்கைத் துணைவரை இழந்து, உறவுகளோடு நேரம் செலவழித்து, பாசத்தைப் பெற இயலாமல் இருப்பவர்கள், குறிப்பாக ஏழைகள் மீது, கிறிஸ்தவ குழுமம், சிறப்பான அக்கறை காட்டவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

குடும்ப வாழ்வில், நெருங்கிய இரத்த உறவுகள், அதிலும் குறிப்பாக, முதிர்ந்தவயதை எட்டும் முன்னரே அவர்கள் இவ்வுலக வாழ்வுக்கு விடைபெற்றுச் செல்லும்போது ஏற்படும் கடுந்துயரத்திலிருந்து மீண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. இச்சூழல்களில் வாழும் குடும்பங்களுக்கு திருஅவை ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணிகள் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 'மேய்ப்புப்பணி சார்ந்த சில கண்ணோட்டங்கள்' என்ற 6ம் பிரிவின்கீழ், 253,254ம் பத்திகளில், கூறியுள்ள கருத்துக்கள் இதோ...

சில நேரங்களில், குடும்ப வாழ்வு, அன்புகூர்பவர் ஒருவரின் இறப்பால் சவால்களைச் சந்திக்கிறது. அவ்வாறு வாழ்கின்ற குடும்பங்களுக்கு நம்பிக்கை ஒளியை வழங்குவதன் வழியாக, நாம் ஆதரவாக இருக்கவேண்டும். மாறாக, துயருறும் இக்குடும்பங்கள் மீது அக்கறையின்றி, இரக்கம் காட்டாமல் இருப்பது, மேய்ப்புப்பணியாற்றுவதற்குள்ள வாய்ப்பை இழப்பது எனவும், நற்செய்தி அறிவிப்புப்பணியின் மற்ற முயற்சிகள் பற்றி சிந்திக்காமல் இருப்பது எனவும் பொருள்கொள்ளலாம். மிகவும் அன்புகூர்ந்த, மற்றும், திருமண வாழ்வின் சரிபாதியாக இருந்த கணவர், அல்லது மனைவியின் இறப்பு கடுந்துயரத்தை ஏற்படுத்துவதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. இயேசுவும், தனது நண்பர் இறந்த செய்தி கேட்டு உள்ளங்குமுறிக் கலங்கினார், மற்றும், கண்ணீர்விட்டு அழுதார் (காண்க.யோவா.11:33, 35). ஒரு குழந்தையை இழந்த பெற்றோரின் கடுந்துயரத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளத் துவங்கவேண்டும்? அச்சமயத்தில், கடந்தகாலத்தையும் வருங்காலத்தையும் மூழ்கடிக்கும் ஒரு பெரும்பிளவு திறக்கப்பட்டுள்ளதாக உணரப்படுகின்றது. சில நேரங்களில் கடவுளைக் குறைசொல்லும் நிலைக்குக்கூட உட்படுகிறோம். அந்நேரங்களில் எத்தனையோ பேர், கடவுள் மீது சினங்கொள்கின்றனர். வாழ்க்கைத் துணைவரின் மறைவு, மிகவும் துயர்தருவது. சிலர், அந்த துயரம் தந்த நேரத்திலிருந்து, தங்களின் பிள்ளைகள் மற்றும், பேரப்பிள்ளைகளைப் பராமரிப்பதில் தங்களது சக்தியைச் செலவழிக்கத் துவங்குகின்றனர். அதுவே தங்களது பணி எனவும், அவர்கள் உணர்கின்றனர். ஆனால், வாழ்க்கைத் துணைவரை இழந்து, தங்களது உறவுகளோடு நேரம் செலவழித்து, பாசத்தைப் பெற இயலாமல் இருப்பவர்கள், குறிப்பாக ஏழைகள் மீது, கிறிஸ்தவ குழுமம், சிறப்பான அக்கறை காட்டவேண்டும். (அன்பின் மகிழ்வு 252,253)

19 August 2021, 13:34