தேடுதல்

திருமணம் திருமணம் 

மகிழ்வின் மந்திரம்: மத சுதந்திரம் மதிக்கப்படுவதன் அவசியம்

தம்பதியரில் ஒருவர் கத்தோலிக்கராகவும், மற்றவர், மத நம்பிக்கையற்றவராகவும் இருக்கும்போது, அத்தம்பதியரும், குடும்பங்களும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர்

மேரி தெரேசா வத்திக்கான்

இக்காலத்தில், பல்வேறு காரணங்களுக்காக மக்களின் புலம்பெயர்வுகளும் குடிபெயர்வுகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே, பல்வேறு மொழிகள், இனங்கள், மத நம்பிக்கைகள், மற்றும், கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் புதிதாகத் திருமண வாழ்வைத் தெரிவுசெய்யும்போது, இனம், மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை பெரும்பாலும் நோக்குவதில்லை. கத்தோலிக்கர், மற்ற மதத்தவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது உருவாகும் சிக்கல்கள் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், பிரிவு 6, பத்தி 248ல் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்

கத்தோலிக்கர், பிற மதத்தவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, குடும்பத்தில்  கிறிஸ்தவ தனித்துவத்தைக் காப்பதிலும், பிள்ளைகளைக் கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்ப்பதிலும், சில குறிப்பிட்ட சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய திருமணங்கள் மறைப்பணி நாடுகளிலும், கிறிஸ்தவ மரபு நாடுகளிலும் அதிகரித்து வருகின்றன. ஆதலால், பல்வேறு சமூக மற்றும், பண்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்ப, மேய்ப்புப்பணிகள் ஆற்றப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத சுதந்திரம் இல்லாத சில நாடுகளில், கிறிஸ்தவ தம்பதியர், திருமணத்திற்காக, மற்ற மதத்திற்கு மாறவேண்டிய கட்டாயநிலைக்கு உட்படுகின்றனர். இதனால் அவர்கள், திருஅவை முறைப்படி திருமணம் புரிந்துகொள்ளவோ, பிள்ளைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கவோ முடிவதில்லை. எனவே, மத சுதந்திரம் மதிக்கப்படவேண்டும் என்ற நம் விண்ணப்பத்தை, மீண்டும் வலியுறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய திருமண வாழ்வைத் தேர்ந்துகொள்வோருக்கு, திருமணத்திற்கு முன்னரே உள்ள காலத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் சிறப்புக் கவனம் தேவைப்படுகின்றது. தம்பதியரில் ஒருவர் கத்தோலிக்கராகவும், மற்றவர், மத நம்பிக்கையற்றவராகவும் இருக்கும்போது, அத்தம்பதியரும், குடும்பங்களும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர். இச்சூழல்களில், நற்செய்திக்குச் சான்றுபகரும் வாழ்வை மேற்கொள்வதன் வழியாக, பிள்ளைகளை கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்க்கமுடியும். (அன்பின் மகிழ்வு 248)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2021, 10:47