தேடுதல்

Vatican News
திருமணப் பந்தம் திருமணப் பந்தம் 

மகிழ்வின் மந்திரம்: மணவிலக்கு ஒரு கொடுந்தீமை

இக்காலத்தில் மணவிலக்கு அதிகரித்துவரும்வேளை, அதனைத் தடுப்பது, தம்பதியரிடையே அன்பை உறுதிப்படுத்துவது, மற்றும், அவர்களின் காயங்களைக் குணப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள், மேய்ப்புப்பணிகளில் முக்கிய இடம்பெறவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

குடும்ப மேய்ப்புப்பணியில், மணவிலக்கு பெற்ற தம்பதியரின் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு, அத்தம்பதியருக்கு உதவுவது பற்றி 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், பிரிவு 6, பத்தி 246ல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்.

தம்பதியரிடையே சண்டைகள் இடம்பெறுவது, திருமண வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதனால், பல நேரங்களில் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குடும்பங்களில், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கொடுமைப்படுத்தும், மற்றும், காயப்படுத்தும் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உளவியல் சுமை, திருமணப் பந்தத்தை உடைக்கும் அளவிற்குச் செல்லும் என்பதை நாம் உணர்கிறோமா? இத்தகைய தீங்கு விளைவிக்கும் அனுபவங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவாது. இதனாலேயே, புதியதொரு பிணைப்பில் நுழைந்துள்ள மணவிலக்குப் பெற்ற பெற்றோரை, கிறிஸ்தவ குழுமங்கள் கைவிடக்கூடாது. அதேநேரம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு, அக்குழுமங்கள் ஆதரவளிக்கவேண்டும். மேலும், இத்தகைய தம்பதியரை, கிறிஸ்தவ குழும வாழ்விலிருந்து ஏதாவது ஒரு வகையில் ஒதுக்கிவைத்துவிட்டால், எவ்வாறு அவர்கள் தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்க முடியும், அவர்கள் அவ்விசுவாசத்திற்குச் சான்றாக விளங்குவதற்கு, நாம் எவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்த முடியும்? இத்தகைய சூழ்நிலைகளில், பிள்ளைகள் ஏற்கனவே சுமக்கவேண்டிய சுமைகளைக் கூடுதலாக்கும் வகையில், நாம் செயல்படாமல் இருக்கவேண்டும். பெற்றோரின் காயங்களைக் குணப்படுத்த உதவுவது, மற்றும், ஆன்மீகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, பிள்ளைகளுக்கும் நன்மைபயக்கும். மணவிலக்கு ஒரு கொடுந்தீமை, மற்றும், அது அதிகரித்து வருவது கவலை தருகின்றது. ஆதலால், தம்பதியரிடையே அன்பை உறுதிப்படுத்தவும், அவர்களின் காயங்கள் குணப்படுத்தப்படவும், இக்காலத்தில் பரவிவரும் மணவிலக்கு நடவடிக்கைகளைத் தடுக்கவும், குடும்பப் மேய்ப்புப்பணிகளில், முக்கியத்துவம் கூடுதலாக அளிக்கப்படவேண்டும்  (அன்பின் மகிழ்வு 246)

12 August 2021, 11:27