தேடுதல்

மணவிலக்கு பெற்ற ஒருவருக்கு ஆறுதலும், ஆலோசனையும்... மணவிலக்கு பெற்ற ஒருவருக்கு ஆறுதலும், ஆலோசனையும்... 

மகிழ்வின் மந்திரம் : மணவிலக்கு பெற்றவர்கள்மீது அக்கறை

மணவிலக்கு பெற்றவர்களை, திருஅவையின் அங்கமாக உணரவைப்பது முக்கியம். திருஅவை என்ற குழுமத்தில் இவர்கள் அங்கங்கள் என்ற உணர்வை இவர்களுக்குத் தரவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டபோது, அம்மடலை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வெளியாயின. "எவரையும் ஒதுக்கிவைக்காமல், அனைவரையும் உள்ளடக்குதல், மற்றும், இரக்கம், ஆகிய அம்சங்களுக்கு, திருத்தந்தை, இம்மடலில், முன்னிலை வழங்கியுள்ளார்" என்ற கருத்தை, ஒருசில இறையியலாளர்கள் கூறியுள்ளனர்.

இம்மடலில் இடம்பெற்றுள்ள 6ம் பிரிவு, அதிலும், குறிப்பாக, மணவிலக்கு பெற்றவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோரை திருஅவை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதுபற்றி திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள், இம்மடலை, இரக்கத்தின் மடலாக உலகிற்கு உணர்த்தியுள்ளது. மணவிலக்கு பெற்றபின், புதியதோர் உறவில் இணைந்திருப்பவர்களை, திருஅவை விலக்கிவைக்காமல், கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒருங்கிணைக்கவேண்டும் என்பதை, 243ம் பத்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்:

"மணவிலக்கு பெற்று, புதியதோர் உறவைத் துவங்கியிருப்பவர்களை, திருஅவையின் அங்கமாக உணரவைப்பது முக்கியம். இவர்களை, திருஅவையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களைப்போல் நடத்தாமல், திருஅவை என்ற குழுமத்தில் இவர்கள் அங்கங்கள் என்ற உணர்வை இவர்களுக்குத் தரவேண்டும். இத்தகையைச் சூழல்களில், கவனமுடன் தெளிந்து தேர்வு செய்வதும், மாண்பு நிறைந்த உடன் பயணித்தலும் தேவை. இவர்களைக் குறித்து பேசும்போதும், இவர்களுடன் பழகும்போதும், ஒதுக்கப்பட்டவர்களைப்போல் இவர்கள் உணரக்கூடாது. கிறிஸ்தவ சமுதாயத்தில் இவர்கள் பங்கேற்க ஊக்கமளிக்கப்படவேண்டும். இத்தகையோருக்கு, கிறிஸ்தவ குழுமம் காட்டும் அக்கறையால், கிறிஸ்தவ நம்பிக்கையோ,  திருமணத்தின் பிரிக்கஇயலா தன்மையின் சாட்சியமோ வலுவிழந்துவிடும் என்று கருதாமல், இது, பிறரன்பின் ஒரு தனிப்பட்ட வெளிப்பாடு என்று கருதப்படவேண்டும்." (அன்பின் மகிழ்வு 243)

10 August 2021, 14:20