தேடுதல்

மணவிலக்குப்பெற்ற தம்பதியர் மணவிலக்குப்பெற்ற தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம்: பிளவுபடும் குடும்பத்தின் துயரநிலை

குடும்பப் பிளவு, ஏழ்மையில் இருக்கும் தம்பதியருக்கு மிகவும் வேதனைதருவதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் புதியதொரு வாழ்வைத் துவக்குவதற்கு வளங்களைக் குறைவாகவே கொண்டிருப்பார்கள் (அன்பின் மகிழ்வு 242)

மேரி தெரேசா: வத்திக்கான் 

பிரிந்துவாழ்கின்ற, மணவிலக்குப்பெற்ற, அல்லது, கைவிடப்பட்ட தம்பதியருக்கு திருஅவை ஆற்றவேண்டிய கடமைகள் என்ன என்பதுபற்றி, ஆயர்கள் மாமன்றத் தந்தையர் பரிந்துரைத்துள்ள கருத்துக்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், (பிரிவு 6ல், மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள் -  'திருமண முறிவு மற்றும், மணவிலக்கு') 242ம் பத்தியில் வழங்கப்பட்டுள்ளன.

பிரிந்துவாழ்கின்ற, மணவிலக்குப்பெற்ற, அல்லது, கைவிடப்பட்ட தம்பதியருக்கு ஆற்றப்படும் மேய்ப்புப்பணிக்கு, தெளிந்துதேர்தல் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக, இந்நிலைகளை, அநீதியான முறையில் எதிர்கொண்ட தம்பதியர், அல்லது, தங்களது வாழ்க்கைத் துணைவர்களின் வழியே அடைந்த கொடுமைகளால் கட்டாயமாகப் பிரிந்துவாழ்கின்ற தம்பதியரின் துன்பங்களுக்கு மதிப்புகொடுக்கப்படுவது அவசியம். அநீதியால் அடைந்த துன்பங்களை மறப்பது எளிதானதல்ல, ஆயினும் இறையருள் அதனை இயலக்கூடியதாக்குகிறது. மறைமாவட்டங்களில் சிறப்பு உளவியல் மையங்களை அமைத்து, அவற்றின் வழியாக, பிரிந்துவாழும் தம்பதியரை மீண்டும் சேர்த்துவைக்கவும், அவர்களிடையே ஒப்புரவை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், மணவிலக்குப் பெற்று, மறுமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் தம்பதியர்,  பலநேரங்களில் திருமண வாழ்வின் பிரமாணிக்கத்திற்குச் சான்று பகர்கின்றனர். இவர்கள், இந்த வாழ்வு நிலையைப் பேணிக்காப்பதற்கு, திருநற்கருணையில் சக்திபெறுமாறு ஊக்குவிக்கப்படவேண்டும். இத்தகைய தம்பதியர், குறிப்பாக, பிள்ளைகளைப் பாரமரிப்பதில், அல்லது, கடும் நிதிப் பிரச்சனையில் இருக்கும்போது, அவர்களுக்கு, அவர்கள் வாழ்கின்ற கிறிஸ்தவ சமுதாயமும், மேய்ப்பர்களும் உதவவேண்டும். குடும்பப் பிளவு, ஏழ்மையில் இருக்கும் தம்பதியருக்கு மிகவும் வேதனைதருவதாக இருக்கும். ஏனெனில், அவர்கள் புதியதொரு வாழ்வைத் துவக்குவதற்கு வளங்களைக் குறைவாகவே கொண்டிருப்பார்கள். ஏழை ஒருவர், பாதுகாப்பான குடும்பச் சூழலிலிருந்து நீக்கப்படும்போது, தான் கைவிடப்பட்டநிலையை, கூடுதலாக அனுபவிப்பார். (அன்பின் மகிழ்வு 242)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2021, 08:49