தேடுதல்

மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட தம்பதியர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம்: குணப்படுத்தப்படவேண்டிய பழைய காயங்கள்

தம்பதியர் ஒவ்வொருவரும், தங்களது குறைகளும், பக்குவமற்றநிலையும், உறவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை, நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், பிரிவு 6ல் பழைய காயங்கள் என்ற தலைப்பில், உணர்ச்சி அளவில் பக்குவப்படவேண்டிய வயதில், அந்நிலையை அடையாமல் திருமண வாழ்வில் நுழையும் உறுப்பினர்களால், குடும்பங்களில் உருவாகும் பிரச்சனைகள் பற்றி 239, 240ம் பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ள எண்ணங்கள் இதோ.

தம்பதியர், தங்களின் குழந்தைப் பருவத்தில் அல்லது, வளர்இளம்பருவத்தில் மகிழ்ச்சியற்ற சூழலை எதிர்கொண்டதால், உணர்ச்சி அளவில் அவர்களைப் பாதித்துள்ள தனிப்பட்ட பிரச்சனைகள், திருமண வாழ்விலும் எதிரொலிக்கும். இத்தகையோரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் குடும்பங்கள், பிரச்சனைகளை எதிர்கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அதேநேரம், குடும்பத்தில் எல்லாருமே பக்குவமடைந்த நிலையில் இருக்கின்றபோது, பிரச்சனைகள் அடிக்கடி நிகழாது. அவற்றால் உருவாகும் மனவேதனையும் குறைவாகவே இருக்கும். வளர்இளம்பருவம் முடியும் காலத்திலேயே எட்டியிருக்கவேண்டிய பக்குமான ஒருநிலையை, சிலர், நாற்பது வயதை எட்டும்போதுதான் அடைவார்கள். மேலும், உணர்ச்சி அளவில் பக்குமடையவேண்டிய காலத்தில் அந்நிலையை அடையாமல், திருமண வாழ்வில் நுழைபவர்களில், சிலர் குழந்தைத்தனமாக, நடந்துகொள்வர். அவர்கள் தன்னலத்தோடு அன்புகூர்வர், மற்றும், மனம்போனபோக்கில், தன்னையே மையப்படுத்திச் செயல்படுவார்கள். இன்னும் சிலர், வளர்இளம் பருவத்தின் பண்பைக் கொண்டிருப்பார்கள். இவர்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் வெறுமையை, மற்றவர் நிரப்பவேண்டும், மற்றும், தங்களின் ஆசைகளை மற்றவர் நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். பலர், குழந்தைப்பருவத்தில் உணரவேண்டிய வரையறை அற்ற அன்பை உணராமலேயே, அப்பருவத்தைக் கடந்து வந்திருப்பார்கள். அதனால் அவர்களால், மற்றவரை நம்பவும், திறந்தமனதைக் கொண்டிருக்கவும் முடிவதில்லை. ஒருவர், தன் பெற்றோர், மற்றும், உடன்பிறந்தோருடன் மோசமான உறவோடு வளர்ந்து, அது பின்னால் சரிசெய்யப்படாமலே இருந்தால், அந்நிலை திருமணத்திலும் எதிரொலிக்கும். எனவே, தீர்க்கப்படாத இத்தகைய விடயங்கள், திருமணத்திற்குமுன்பே சரிசெய்யப்படவேண்டும். தம்பதியர் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட வரலாற்றோடு திருமண வாழ்வில் நுழைகின்றனர். ஆதலால், திருமணத்தில் பிரச்சனைகள் எழுகின்றபோது, குணப்படுத்தல் தேவைப்படுகின்றது. ஒருவர் ஒருவரை மன்னிக்கவும், மன்னிப்புப்பெறவும் இறையருளை வேண்டுமாறு அவர்கள் வலியுறுத்தப்படவேண்டும். உதவிகள்பெற விருப்பம் தெரிவிக்கவும், திருமணத்தில் உறுதியாய் இருக்கவும், தம்பதியருக்கு கற்றுக்கொடுக்கப்படவேண்டும். ஒருவர் தனது குறைகளும், பக்குவமற்றநிலையும், உறவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை, நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அடுத்தவர் மீதுதான் தவறு இருக்கின்றது என்பதை உணர்ந்தாலும், அடுத்தவர் மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் பிரச்சனை ஒருபோதும் தீர்ந்துவிடாது. மாறாக, பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமெனில், தனது வாழ்வில் எத்தகைய வளர்ச்சியும், குணப்படுத்தலும் தேவைப்படுகின்றன என்பதை, தம்பதியர் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்வது முக்கியம் (அன்பின் மகிழ்வு 239,240)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2021, 13:08