தேடுதல்

ஒப்புரவில் இணைந்திருக்கும் இளம் தம்பதியர் ஒப்புரவில் இணைந்திருக்கும் இளம் தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : மன்னிப்பும், ஒப்புரவும், அடித்தளங்கள்

அருளின் துணைகொண்டு, மன்னிப்பும், ஒப்புரவும் ஏற்படும்போது, பிரச்சனைகள் நிறைந்த திருமண உறவில் தீர்வுகள் உருவாகின்றன. (அன்பின் மகிழ்வு 236)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும், திருஅவை வழங்கக்கூடிய மேய்ப்புப்பணி சார்ந்த உதவிகளைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 6ம் பிரிவில் வழங்கியுள்ள கருத்துக்களை நாம் சிந்தித்து வருகிறோம். இப்பிரிவின், 235ம் பத்தியில், திருமண வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளை, திருத்தந்தை பின்வருமாறு தொகுத்துக் வழங்கியுள்ளார்:

"பிரச்சனைகள், ஏறத்தாழ, ஒவ்வொரு திருமண வாழ்விலும் ஏற்படுகின்றன. புதிதாக திருமணம் புரிந்தோர், தங்களுக்குள் நிலவும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும், தம்பதியரின் பெற்றோர் அவர்கள் மீது கொண்டுள்ள தாக்கங்களிலிருந்து தங்களையே விடுவித்துக்கொள்வதற்கும் கற்றுக்கொள்வது அவசியம். ஒரு குழந்தையின் வரவு, புதுவகையான, உணர்ச்சிப்பூர்வமான சவால்களை முன்வைக்கிறது. சிறு குழந்தைகளை வளர்க்கும்போது, தம்பதியர், தங்கள் வாழ்வுமுறையை மாற்றுவது அவசியமாகிறது. அதேவண்ணம், பிள்ளைகள், வளர் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், அவர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே உரசல்களும், இறுக்கமானச் சூழல்களும் உருவாகின்றன. வேலை கிடைத்து, அல்லது, திருமணம் புரிந்து, பிள்ளைகள் வீட்டைவிட்டுக் கிளம்பியபின், 'காலியானக் கூடாக'த் தெரியும் இல்லத்தில், தம்பதியர், தங்களுக்குள் இருக்கும் உறவை மீண்டும் புதிதாக வரையறுத்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். முதிர் வயதடையும் பெற்றோரைப் பேணுவதில், கடினமான முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கும். இச்சூழல்கள் அனைத்தும், கலக்கம், குற்ற உணர்வு, மனத்தளர்ச்சி மற்றும் சோர்வு ஆகியவற்றை உருவாக்கி, திருமண உறவில் மிக ஆழமான பின்விளைவுகளை உருவாக்கும்." (235)

ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாகக்கூடிய பிரச்சனைகளை, 235ம் பத்தியில், இவ்வாறு,  சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, 236ம் பத்தியில், பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய மருந்துகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"தம்பதியரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் தனிப்பட்ட பிரச்சனைகளும் உள்ளன. இவை, பலவேளைகளில், பொருளாதாரம், பணியிடங்களில் ஏற்படும் தொல்லைகள் ஆகிய வடிவங்களில் வெளிப்படும். குடும்ப வாழ்வைக் குலைக்கும் எதிர்பாராதச் சூழல்களில், மன்னிப்பும், ஒப்புரவும், தேவைப்படுகின்றன. அடுத்தவரை மன்னிப்பதற்கு உறுதிபூணும் தருணத்தில், அவரது தவறுக்கு, தானும் ஏதோ ஒருவகையில் காரணமாய் இருந்திருக்கலாம் என்பதை ஆய்வுசெய்வது நல்லது. தம்பதியர், ஒருவரையொருவர் குற்றம்சாட்டும்போது, குடும்பங்கள் பிளவுபடுகின்றன. அருளின் துணைகொண்டு, மன்னிப்பும், ஒப்புரவும் ஏற்படும்போது, பிரச்சனைகள் நிறைந்த திருமண உறவில் தீர்வுகள் உருவாகின்றன. ஒருவரையொருவர் மன்னித்தல், மன்னிப்பு பெறுதல் ஆகியவை, குடும்ப வாழ்வின் அடிப்படை அனுபவங்கள். அருளின் துணைகொண்டு உருவாகும் ஒப்புரவில், உறவினர்கள் ஆற்றும் உதவிகளும், ஒரு சில வேளைகளில், தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள் வழங்கும் உதவிகளும் தேவைப்படுகின்றன." (அன்பின் மகிழ்வு 235, 236)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2021, 13:33