தேடுதல்

மணவிலக்கு மணவிலக்கு  

மகிழ்வின் மந்திரம் : மணவிலக்குப் பெற்றவர்களுக்கு மறைப்பணி

பிரிவினை என்பது, நல்லிணக்கத்திற்குரிய அனைத்து நியாயமான முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், கடைசி முயற்சியாகக் கைக்கொள்ளப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 6ம் பிரிவில், திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும், திருஅவை வழங்கக்கூடிய மேய்ப்புப்பணி சார்ந்த உதவிகளைக் குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பிரிவு 6ல், 'பழைய காயங்கள்' என்ற தலைப்பில், குடும்பங்களில் உருவாகும் சில பிரச்சனைகள் பற்றி 2 பத்திகளில் பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மண முறிவு மற்றும் மண விலக்கிற்குப்பின் உடன் செல்லும் பணி', என்ற தலைப்பில், 6 பத்திகளில் விளக்கியுள்ளதில், முதல் பத்தியின் (241) கருத்துச் சுருக்கம் இதோ:

சில வேளைகளில், ஒருவரின் மனித மாண்பு, மற்றும் குழந்தைகளின் நலன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, தம்பதியருள் ஒருவரின் அத்துமீறியத் தேவைகளுக்கு அடிபணியாமல் இருக்கவேண்டியுள்ளது. மேலும், தீவிர அநீதிகள், வன்முறை, மற்றும் தொடந்துகொண்டிருக்கும் தவறான நடத்தைகளைத் தடுக்கவும் வேண்டியுள்ளது. இத்தகைய நேரங்களில், பிரிதல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிறது. அத்துமீறல் நடவடிக்கைகள் மற்றும் வன்முறை, அவமானம் மற்றும் சுரண்டல், கவனிப்பின்றி ஒதுக்குதல் மற்றும் பாராமுகம், போன்றவற்றால் உருவாகும் கடுமையான காயங்களினால்  பாதிக்கப்படக்கூடிய வாழ்க்கைத்துணை, அல்லது சிறு குழந்தைகளை காப்பாற்றுவதற்கு, பிரிவினை என்பது, தார்மீக ரீதியாக அத்தியாவசியமாகிறது. பிரிதல் என்பது, நல்லிணக்கத்திற்குரிய அனைத்து நியாயமான முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், கடைசி முயற்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். (அன்பின் மகிழ்வு 241)

06 August 2021, 11:59