தேடுதல்

மகிழ்ந்து விளையாடும் குழந்தைகள் மகிழ்ந்து விளையாடும் குழந்தைகள் 

மகிழ்வின் மந்திரம் : மணமுறிவுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்

சில வழக்குகளில், நேரடியாக, தீர்வுவழங்க அழைக்கப்படும் ஆயர்கள், ஒவ்வொரு விடயத்திலும், விசுவாசிகள் நீதியை எளிதாக அணுகுவதை உறுதிசெய்ய வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள் என்ற தலைப்பில் வழங்கியுள்ள 6ம் பிரிவில், -  'திருமண முறிவு, மற்றும் மணவிலக்கு' என்ற பகுதியில் 244, மற்றும் 245ம் பத்திகளில் கூறியுள்ளவற்றை அவரது வார்த்தைகளில் அப்படியேத் தருகிறோம்:

மணமுறிவு குறித்த வழக்குகள், எளிதாக அணுகக்கூடியதாகவும், நேரத்தை இழுத்தடிக்காததாகவும், முடிந்தால், இலவசமாகவும் நடத்தப்படுவதற்கு வழிவகைச் செய்யப்படவேண்டியது குறித்து, ஆயர் மாமன்றத் தந்தையர் பலர் வலியுறுத்தியுள்ளனர். இதன் நடைமுறை, காலம்தாழ்த்திச் செல்லும்போது, தம்பதியருக்கு, மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலைக் கையாளும் எனது இரண்டு அண்மைய ஆவணங்கள், திருமண செல்லுபடியாகா நிலையை அறிவிப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்கியுள்ளன. ஒரு மேய்ப்பராகவும் தலைவராகவும் மறைமாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆயர், அவருடைய பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட விசுவாசிகளுக்கு நீதி வழங்குபவராக இருப்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த ஆவணங்களைச் செயல்படுத்துவது மறைமாவட்டங்களில் உள்ள ஆயர்களின் பொறுப்பாகும். சில வழக்குகளில் நேரடியாக தீர்வுவழங்க அழைக்கப்படும் ஆயர்கள், ஒவ்வொரு விடயத்திலும், விசுவாசிகள் நீதியை எளிதாக அணுகுவதை உறுதிசெய்ய வேண்டும். திருஅவை அதிகாரிகள், மற்றும் பொதுநிலை விசுவாசிகள் அடங்கிய, போதிய ஊழியர்களைத் தயார் செய்வதும் இதில் அடங்கும். குடும்பங்களுக்குரிய மறைப்பணிகளோடு தொடர்புடைய தகவல், ஆலோசனை, மற்றும் இடையீட்டாளரின் சேவைகள், பிரிந்திருக்கும் தம்பதியர் இருவருக்கும், அல்லது, நெருக்கடியில் இருக்கும் தம்பதியினருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இந்த சேவைகளில், திருமண நடைமுறையின் ஆரம்ப விசாரணைகளை கருத்தில்கொண்டு, தனிநபர்களைச் சந்திப்பதும் அடங்கும். (அன்பின் மகிழ்வு 244)

தம்பதியர் பிரிவதால், அப்பாவிகளாக பலியாகும் குழந்தைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆயர் மாமன்றத் தந்தையர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னர், குழந்தைகளின் நலன்குறித்த அக்கறைக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும். பிரிந்துவாழும் தம்பதியரை நோக்கி நான் இந்த விண்ணப்பத்தை விடுக்கிறேன், 'எக்காரணத்தைக் கொண்டும், எச்சூழலிலும், உங்கள் குழந்தைகளை பிணையக் கைதிகளாக்காதீர்கள். நீங்கள் பிரிவதற்கு பல காரணங்கள், பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால், அதன் காரணமாக, உங்கள் குழந்தைகள் ஏன் துயர்களை சுமக்கவேண்டும், அல்லது, பிணையக்கைதியாக வேண்டும்? தாய் தந்தை பிரிந்திருக்கும் சுழலிலும், எப்போதும், தாய், தங்கள் தந்தையைக்குறித்து உயர்வாகப் பேசுவதையும், தந்தை, தங்கள் தாயைக்குறித்து உயர்வாகப் பேசுவதையும் கேட்டுக்கொண்டு வளரவேண்டும்'. ஒரு குழந்தையின் பாசத்தை வெல்லும் வழிமுறையாக, அல்லது, பழிவாங்கும், அல்லது, தன் பக்க நியாயத்தை நிலைநாட்டும் முயற்சியாக, கணவனோ, மனைவியோ, ஒருவர் மற்றவரை இழிவுபடுத்துவது பொறுப்பற்ற நிலையாகும். அவ்வாறு செய்வது, குழந்தையின் உள்மன அமைதியை பாதிப்பது மட்டுமல்ல, அது ஏற்படுத்தும் காயங்களை ஆற்றுவது கடினமானதாக இருக்கும். (அன்பின் மகிழ்வு 245)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 14:56