தேடுதல்

திருமண தம்பதியர் திருமண தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : எப்பிரச்சனைக்கும் தீர்வு உண்டு

தம்பதியருள் ஒருவர் மற்றவரின் அனைத்துக் கனவுகளையும் நிறைவேற்றமுடியாது என்ற உண்மை நிலையை நாம் உணரவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 6ம் பிரிவில், 237, மற்றும் 238ம் பத்திகளில், திருமண வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளையும், அவற்றில், திருஅவை வழங்கும் மேய்ப்புப்பணி சார்ந்த உதவிகளையும் குறித்து தொகுத்துக் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:
தம்பதியருள் இருவருமே நிறைவுபெறாதவர்களாகவும், தாங்கள் விரும்பியதுபோல் வாழ்க்கை இல்லை எனவும் எண்ணும் நிலை உருவாகும்போது, அங்கு திருமணத்தை முறித்துக்கொள்ள போதிய காரணங்கள் உள்ளன என்றே பலவேளைகளில் எண்ணத் தோன்றுகிறது. இப்படி நாம் எண்ணினால், எந்த ஒரு திருமணமும் நிலையாக இருக்காது. ஏனெனில், ஒரு சிறு மனநிறைவற்ற நிலை, தேவையற்ற அச்சம், கௌரவம் பாதிக்கப்படுதல் போன்ற அந்நேரத்து சுழல்களால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தம்பதியரில் ஒருவருக்கு, அக்கறையின்மை, பொறாமை, பதட்டநிலை போன்றவை எழும்போது, அவைகளை சரிசெய்ய நேரம் தேவைப்படலாம். உடலளவிலும் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இத்தகைய அனைத்துச் சூழல்களும், அன்பை அச்சுறுத்துவதற்குப் பதில், அன்பைப் புதுப்பிக்கவும், அதை உயிரூட்டமுடையதாக மாற்றவும் வாய்ப்பாக அமையவேண்டும்.
இந்நேரங்களில் மற்றவரை, அவரின் குறைகளோடும் தன் வாழ்வின் பங்குதாரராக ஏற்றுக்கொண்டு தொடந்து நடைபோடும் முதிர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தம்பதியருள் ஒருவர், மற்றவரின் அனைத்துக் கனவுகளையும் நிறைவேற்றமுடியாது என்ற உண்மை நிலையை நாம் உணரவேண்டும். எந்த ஒரு புதிய சிக்கலையும் ஏற்று, அதன் வழி அன்பை புதுப்பித்து, ஆழப்படுத்தி, பலப்படுத்தவேண்டும். சிக்கல்கள், பிரச்சனைகள் எழும்போது, அவைகளின் ஆணிவேருக்குச் சென்று பார்க்க அச்சம்கொள்ளாமல், ஒன்றிணைந்து ஆய்வுசெய்து தீர்வுகண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும். இத்தகைய மனம் திறந்த அணுகுமுறையால் எந்த ஒரு பிரச்சனைக்கும் நம்மால் தீர்வு காணமுடியும். ஒப்புரவு என்பது இயலக்கூடியதே என்பதை நம்பும் நாம், முறிந்துபோன திருமணங்களுக்கு மறைப்பணியாற்றுவது அவசரத் தேவையாக உள்ளது என்பதையும் உணரவேண்டும். (அன்பின் மகிழ்வு 237, 238)
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2021, 14:24