தேடுதல்

உறவினரின் மரணத்தை தாங்க முடியாத நிலை உறவினரின் மரணத்தை தாங்க முடியாத நிலை  

மகிழ்வின் மந்திரம் : இறந்தவருக்கு நம் சோகம் தேவையில்லை

பார்க்க முடியாதவைகளைப் பார்க்கவும், ஒலியற்றவைகளைக் கேட்கவும் தூண்டுதலைத் தருவதில் தன்னை ஈடுபடுத்துவது அன்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 'மேய்ப்புப்பணி சார்ந்த சில கண்ணோட்டங்கள்' என்ற 6ம் பிரிவின்கீழ், 255ம் பத்தியில், வாழ்க்கைத்துணை ஒருவர் உயிரிழக்கும்போது, அதிலும் இளவயதில் மரணமடையும்போது ஏற்படும் கடும் துயரிலிருந்து மற்றொருவர் மீண்டுவருவதற்கு, திருஅவை எவ்விதம் உதவமுடியும் என்பது குறித்து கூறியுள்ள எண்ணங்கள் இதோ:

பொதுவாக, ஒருவரின் இறப்பினால் பிறக்கும் சோகம் மறைய நீண்ட காலம் ஆகும். இந்நேரத்தில் அருள்பணியாளரின் உதவி தேவைப்படுகிறது. நம் அன்புக்குரியவர் ஏன் இறக்கவேண்டும், ஒருவர் இறக்கும்வேளையில் அவரின் உணர்வுகள் எத்தகையதாக இருந்தன, என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. உண்மையான, பொறுமை நிறை செபம், மற்றும் உள்மன விடுதலையின் வழியில் அமைதி திரும்புகிறது. அன்புக்குரியவரை இழந்தவருக்கு, வாழ்வில் வேறு பணிகள் உள்ளன, இறந்தவருக்கு செலுத்தப்படும் அஞ்சலி என்ற பெயரில், இவர் சோகத்திலேயே தொடர்வது எவ்வகையிலும் இறந்தவருக்கு உதவப்போவதில்லை என்ற உண்மைகள் உணரவைக்கப்பட வேண்டும். இறந்தவருக்கு நம் சோகம் தேவையில்லை, மற்றும் நாம் நம்மை சோகத்தால் அழித்துக்கொள்வதை அவர் எதிர்பார்ப்பதுமில்லை. அவரையே நினைத்து நம் வாழ்வை அழித்துக்கொள்வது நம் அன்பின் சரியான வெளிப்பாடு அல்ல, மாறாக, அவர் பிறிதொரு இடத்தில் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன், அவரை, தொடர்ந்து அன்புகூர்வதே சரியான முறையாகும். நம்மோடு உடலளவில் அவர் உடனிருக்கவில்லையெனினும், மரணத்தின் அனைத்து சக்திகளின் முன்னிலையிலும், அன்பின் வலிமை மரணசக்தியைவிட குறைந்ததல்ல. பார்க்க முடியாதவைகளைப் பார்க்கவும், ஒலியற்றவைகளைக் கேட்கவும் தூண்டுதலைத் தருவதில் தன்னை ஈடுபடுத்துவது அன்பு. நம் அன்புக்குரியவர்கள் இறப்பிற்கு முன் இருந்த நிலைகளைக் கற்பனைச் செய்து பார்ப்பதையல்ல, மாறாக, அவர்கள் இப்போது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதை குறிப்பது இது.

உயிர்த்த இயேசுவை  மகதலா மரியா, பற்றித் தழுவ முயன்றபோது இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே" (யோவா 20:17) என்ற கூறுகிறார். இவை, இன்னொரு விதமான சந்திப்பை நோக்கி மரியாவை அழைத்துச் செல்லும் வார்த்தைகள். (அன்பின் மகிழ்வு 255)

20 August 2021, 14:37