தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

ஆப்கானுக்காக திருத்தந்தையின் செப விண்ணப்பம் குறித்து...

புறக்கணிப்பு மனநிலையைக் களைய, இந்த உலகினர் ஒவ்வொருவரும் ஏதாவது செய்யவேண்டும், சிறு குழுக்களாக, அமைதியை விதைக்கவேண்டும் – சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர் ரிக்கார்தி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கான் மக்களுக்காக, உண்ணாநோன்பு, மற்றும் இறைவேண்டல் ஆகியவற்றுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பம், தொலைதூரத்தில் கடுந்துயர்களை அடையும் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாய் உள்ளது என்று, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் நிறுவனர், அந்த்ரேயா ரிக்கார்தி அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 29, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் மக்களுக்காக, உண்ணாநோன்பு, மற்றும் இறைவேண்டலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பு குறித்து, வத்திக்கான் செய்திகளுக்கு, பேட்டியளித்த ரிக்கார்தி அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இறைவேண்டலும், உண்ணாநோன்பும், காலத்திற்கு ஒவ்வாத நடைமுறை பழக்கங்கள் அல்ல என்றுரைத்த ரிக்கார்தி அவர்கள், நாம் நம் ஆலயங்களில் அமைதிக்காக மிகச்சிறிதளவே இறைவேண்டல் செய்கிறோம் எனவும், ஆப்கானிஸ்தான், அல்லது, வட மொசாம்பிக்கில் துன்புறும் 8 இலட்சம் புலம்பெயர்ந்தோர், அல்லது, மறக்கப்பட்டுள்ள பல போர்கள் முடிவடைவதற்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், எப்போதாவதுதான் நாம் செபிக்கின்றோம் எனவும் கூறினார்.

இறைவேண்டல், நமக்குச் சக்தியைக் கொடுக்கிறது எனவும், இறைவேண்டலும், உண்ணாநோன்பும் தொடர்ந்து ஆற்றப்பட நாம் வலியுறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறிய ரிக்கார்தி அவர்கள், தொலைதூரத்தில் இடம்பெறும் போர்களுக்குத் தீர்வுகளைக் காணும் வழிகளை நாம் அறியாதிருக்கிறோம் எனவும் எடுத்துரைத்தார்.

பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண திறனற்றவர்களாய் உணர்வது, புறக்கணிப்பு மனநிலையிலிருந்து வருவதாகவும், இதனைக் களைய, இந்த உலகினர்  ஒவ்வொருவரும் ஏதாவது செய்யவேண்டும் என்றும், சிறு குழுக்களாக, அமைதியை விதைக்கவேண்டும் என்றும், ரிக்கார்தி அவர்கள் எடுத்துரைத்தார். 

31 August 2021, 15:07