தேடுதல்

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் மக்கள் 

ஆப்கானிஸ்தானில் காரித்தாஸ் ஆற்றிவரும் பணிகள்

ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகச்சிறியதாக இருந்தாலும், ஏழைகள், மற்றும் துயருறுவோருக்கென கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறிப்பிடும்படியானவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இருபத்தோரு ஆண்டுகளாய் நடைபெற்றுவரும் மோதல்களால் மனித உயிர் இழப்புக்களையும், பொருள் இழப்புக்களையும் அடைந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் துருப்புக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாடு, வேதனை நிறைந்த படுகுழியில் வீழ்ந்துள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளது, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது, ஆப்கானிஸ்தானில், தாலிபான் இஸ்லாமிய குழு, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அண்மைய மோதல்களாலும், ஆட்சி மாறுதல்களாழும், ஏழை மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறும் இத்தாலியக் காரித்தாஸ் அமைப்பு, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில் வாழும் மக்களின் இன்றையச் சூழல்கள் குறித்து ஆய்வுகளைத் துவக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகச்சிறியதாக இருந்தாலும், ஏழைகள், மற்றும் துயருறுவோருக்கென கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறிப்பிடும்படியானவை எனக்கூறும் காரித்தாஸ் அமைப்பு, அவசர கால உதவிகள், புணரமைப்புப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாட்டுடன், ஆபிகானிஸ்தானில் உழைத்து வருவதாகத் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானின் Ghor பள்ளத்தாக்குப் பகுதியில் 4 கல்வி நிலையங்களைக் கட்டவும், Panshir பள்ளத்தாக்குப் பகுதிக்கு, புலம்பெயர்நத 483 குடும்பங்கள் திரும்பிவரவும், ஏழைகள் மற்றும் இயலாமையில் வாடுவோருக்கு என 100 தங்கும் முகாம் கட்டவும், உதவியுள்ளது  காரித்தாஸ் அமைப்பு.

தற்போதுள்ள அசாதாரணச் சூழல்கள் தங்களின் இருப்பு குறித்த சந்தேகங்களை விதைத்துள்ளதாகவும், ஆப்கான் கிறிஸ்தவர்களின் நிலைபற்றிய அச்சம் வளர்ந்துள்ளதாகவும், இத்தாலிய காரித்தாஸ், மேலும் கவலையை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2021, 13:58