தேடுதல்

Vatican News
பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னைத் திருத்தலத்தில் அன்னையின் பவனி பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னைத் திருத்தலத்தில் அன்னையின் பவனி   (AFP or licensors)

லூர்து அன்னை திருத்தலத்துடன் இணைந்து செபிக்க வாய்ப்பு

பல்வேறு மொழிகளில், ஜூலை 16ம் தேதி, செபமாலை செபிக்கத் திட்டமிட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னைத் திருத்தலம், முதல் செபமாலையை, தமிழில் செபிக்க உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்றால் உலகின் பல பகுதிகள் இன்னும் பாதிக்கப்பட்டிருக்க, லூர்து நகர் செல்ல ஆவல் இருந்தாலும், தற்போதையச் சூழலில், அங்கு செல்ல இயலாதத் திருப்பயணிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு மொழிகளில், செபமாலை பக்திமுயற்சியை, அகில உலக அளவில், இணையதளம் வழியாக ஏற்பாடு செய்துள்ளது, பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னைத் திருத்தலம்.

ஜூலை மாதம் 16ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று முழுவதும் இணையதளம் வழியாக உலக மக்களுடன் இணைந்து செபிக்கத் திட்டமிட்டுள்ள இந்த மரியன்னைத் திருத்தலம், உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 10.30 மணிக்கு திருப்புகழ் மாலை, மற்றும் அன்னைமரியாவின் 16வது காட்சி குறித்த தியானம், ஆகியவைகளுடன் அந்நாளை துவக்க உள்ளது.

1858ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி, புனித பெர்னதெத் அவர்களுக்கு, அன்னை மரியா வழங்கிய 16வது காட்சி பற்றிய தியானத்திற்குப் பின், ஆசியா, மற்றும் ஓசியானியா பகுதிகளுக்கான அனைத்துலக திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருப்புகழ் மாலையும் இடம்பெறும்.

உள்ளூர் நேரம் 9 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பகல் 12.30 மணிக்கு, முதல் செபமாலை, தமிழில் செபிக்கப்பட்டு, அதன் பின் ஆசியாவிற்கான செபமாலை, ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள் ஆகியவற்றிற்கான திருப்பலி, அகில உலக மரியன்னை செபம்,   மூவேளை செப உரை, 1858ம் ஆண்டு ஜூலைமாதம் 16ம் தேதி இடம்பெற்ற, 18வது காட்சியாக, லூர்து அன்னை மரியாவின் இறுதி காட்சி குறித்த தியானம், பைசன்டைன் வழிபாட்டு முறை திருவழிபாடு ஆகியவைகள் இடம்பெறும்.

உள்ளூர் நேரம் பகல் 1.30 மணிக்குத் துவங்கும் அரபு மொழி செபமாலை செபித்தலைத் தொடர்ந்து, போலந்து, ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் செபமாலை செபிக்கப்பட்டபின், நற்கருணை வழிபாடும், நோயாளிகளுக்கு ஆசீர் வழங்குதலும் இடம்பெறும்.

இத்தாலிய மொழியிலும், போர்த்துக்கீசிய மொழியிலும், செபமாலை செபித்தல், அமெரிக்கக் கண்டத்திற்கான திருப்பலி, மரியன்னை செபம், இறைவேண்டல் பவனி, ஆகியவைகளுக்குப்பின் உள்ளூர் நேரம் இரவு 10.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் 17ம் தேதி அதிகாலை 2 மணிக்குத் துவங்கும் திருப்பலியுடன், மரியன்னையின் இறைவேண்டல் நாள் நிறைவுக்கு வரும்.

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர், மரியன்னை திருத்தல இணையப் பக்கத்தில் இணைந்து, இந்த செப வழிபாட்டில் அனைவரும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

12 July 2021, 14:09