தேடுதல்

Vatican News
DACA திட்டத்திற்கு ஆதரவாக இளையோரின் போராட்டம் DACA திட்டத்திற்கு ஆதரவாக இளையோரின் போராட்டம்  (2021 Getty Images)

DACA சிறாருக்கு பாதுகாப்பு வழங்க ஆயர்களின் விண்ணப்பம்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், DACA சிறாரின் வாழ்வுக்குப் பாதுகாப்பு வழங்கத் தேவையான சட்டங்களை இயற்றுமாறு, ஆயர்கள், விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சரியான ஆவணங்கள் இன்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துவிடும் சிறாரை மீண்டும் நாட்டை விட்டு வெளியேற்றாமல், அவர்கள் தங்குவதற்கு ஏற்ற விதிமுறைகளை, முன்னாள் அரசுத்தலைவர் பராக் ஒபாமா அவர்கள் வழங்கியது, சட்டப்பூர்வமான செயல் அல்ல என்று, அந்நாட்டு டெக்ஸாஸ் மாநில நீதிபதி ஒருவர் அண்மையில் தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்பு, பல சிறாரை பாதிக்கும் என்பதை அறிந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இச்சிறாரின் வாழ்வுக்குப் பாதுகாப்பு வழங்கத் தேவையான சட்டங்களை இயற்றுமாறு, அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

‘நாட்டில் நுழையும் சிறார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தள்ளிப்போடுதல்’ என்று பொருள்படும் DACA என்ற திட்டம், தற்போது நடைமுறையில் இருப்பதால், பல சிறார் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதை தங்கள் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், இச்சிறாரின் கனவுகளை சிதைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

DACA திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சிறார், 'கனவு காண்பவர்கள்' என்று அழைக்கப்படுவதும், அண்மையில் டெக்ஸாஸ் மாநில நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பினால், 6,50,000 சிறாரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

'கனவு காண்பவர்கள்' என்றழைக்கப்படும் இச்சிறார், மற்றும் இளையோரால், அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயம், இதுவரை, எந்த எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்கவில்லை, மாறாக, இவ்விளையோரின் வருகையால், இந்நாடு, முன்னேற்றம் கண்டுள்ளது என்று, அமெரிக்க ஆயர்களின் சார்பாக விண்ணப்பம் வழங்கியுள்ள்ள வாஷிங்டன் துணை ஆயர் Mario Dorsonville அவர்கள் கூறியுள்ளார்.

DACA திட்டத்தின் கீழ் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 36 இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்றும், குடியுரிமை கேட்டு இவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் அரசினால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் கூறுகின்றன.

21 July 2021, 13:32