தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள கியூபா நாட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள கியூபா நாட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டம் 

கியூபா நாட்டு மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஆயர்கள்

கடந்த பல ஆண்டுகளாக, கியூபா ஆயர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களும், இவ்விரு நாடுகளுக்கும் இடையே, கலாச்சார, மற்றும் வர்த்தக முயற்சிகள் உருவாக பெரிதும் உதவியுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கியூபா நாட்டு மக்களும், அவர்கள் சார்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள அந்நாட்டு மக்களும் மேற்கொண்டுவரும் போராட்டங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையும் தன்னை இணைத்துக்கொள்கிறது என்று, இப்பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

மோதல்களாலும், அடக்குமுறைச் சட்டங்களாலும் மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணமுடியாது, மாறாக, எதிர்தரப்புகளில் இருப்போர், ஒருவருக்கொருவர் செவிமடுத்து, உரையாடல்களை மேற்கொள்வதன் வழியில் மட்டுமே, நாட்டின் நலன் உறுதி செய்யப்படும் என்று, கியூபா ஆயர்கள், அண்மையில் விடுத்த ஓர் அறிக்கையை தாங்களும் வரவேற்பதாக, அமெரிக்க ஆயர்கள் சார்பில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள, இப்பேரவையின் தலைவர், லாஸ் ஆஞ்செலஸ் பேராயர், ஹோஸே கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக, கியூபா ஆயர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களும், இவ்விரு நாடுகளுக்கும் இடையே, கலாச்சார, மற்றும் வர்த்தக முயற்சிகள் உருவாக பெரிதும் உதவியுள்ளனர் என்பதை, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டும் பேராயர் கோமஸ் அவர்கள், தற்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, கியூபா நாட்டில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

1 கோடியே 10 இலட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள கியூபா நாட்டில், 2,88,392 பேர் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், இவர்களில் 1,966 பேர் இறந்துள்ளதாகவும் கூறும் பீதேஸ் செய்தி, இந்த எண்ணிக்கைகள், மக்கள் தொகையுடன் இணைத்து பார்க்கும்போது, அதிக விழுக்காடாக உள்ளன என்று கூறியுள்ளது.

இத்தகையை நலவாழ்வுப் பிரச்சனைகள் உள்ள சூழலில், அந்நாட்டு மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில், அவர்களை, பிறரன்பின் அன்னை மரியா பாதுகாத்து வழிநடத்த, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இறைவேண்டல் செய்வதாகக் கூறி, பேராயர் கோமஸ் அவர்கள், தன் அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2021, 14:26