தேடுதல்

Vatican News
டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம்  (AFP or licensors)

டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு கோவில்கள் திறக்கப்படாது

ஒவ்வொரு பங்கும், ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவது தன் கடமை என்றாலும், தற்போதையச் சூழலில், இந்தப் பெருந்தொற்றை அடுத்தவருக்குப் பரப்பாமல் இருப்பதே நம் அனைவரின் தலையாயக் கடமை - டோக்கியோ பேராயர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க வருகைதரும் விளையாட்டு வீரர்கள், அங்குள்ள கத்தோலிக்க கோவில்களுக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு, டோக்கியோ பேராயர் Tarcisio Isao Kikuchi அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அறிவிக்கப்பட்டதும், விளையாட்டுக்களில் கலந்துகொள்ள வருகைதரும் வீரர்கள் மற்றும் பயணிகளுக்குத் தேவையான ஆன்மீக உதவிகளை, டோக்கியோ உயர்மறைமாவட்டம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், அந்நகரில், கோவிட் பேருந்தொற்றின் பரவல் கூடி வந்ததையடுத்து, அந்நகரில் பல்வேறு தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, பேராயர் Kikuchi அவர்கள், தலத்திருஅவையின் சார்பில், இவ்வறிக்கையை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு பங்கும், ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவது தன் கடமை என்றாலும், தற்போதையச் சூழலில், இந்தப் பெருந்தொற்றை அடுத்தவருக்குப் பரப்பாமல் இருப்பதே நம் அனைவரின் தலையாயக் கடமை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பேராயர் Kikuchi அவர்கள் தன் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

டோக்கியோ பெருநகரில், ஜூலை 12, இத்திங்கள் முதல், ஆகஸ்ட் 22ம் தேதி முடிய, கோவிட் பெருந்தொற்று தொடர்பான பல தடை உத்தரவுகள் நடைமுறையில் உள்ளன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

'கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து நம்மையும், பிறரையும் காப்போம்' என்ற கருத்துடன், டோக்கியோ உயர் மறைமாவட்டம் 2020ம் ஆண்டு சனவரி 30ம் தேதி முதல், பல்வேறு தடுப்பு வழிமுறைகளை பின்பற்றிவருகிறது என்று, ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.

3 கோடியே 60 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள டோக்கியோ பெருநகர் பகுதியில், கோவிட் பெருந்தொற்று பரவத் துவங்கிய காலம் முதல் இன்று வரை 2,258 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஜூலை 13, இச்செவ்வாய் நிலவரப்படி, 1,986 பேர் இந்நோயினால் பாதிக்கபப்ட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

டோக்கியோ பெருநகரில், ஜூலை 23ம் தேதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி துவங்கும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும், பார்வையாளரின் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (CNA/ AsiaNews)

14 July 2021, 14:58