தேடுதல்

Vatican News
தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர்கள்  உருவாக்கியுள்ள படம் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர்கள் உருவாக்கியுள்ள படம்  

ஸ்டான் சுவாமியின், அரசு படுகொலையை எதிர்த்து 'முழக்கம் செய்வோம்'

மனித உரிமைக்காப்பாளர்கள் கூறுவது போன்று, ஸ்டான் சுவாமியின் இறப்பு, ஒரு நிறுவனப் படுகொலை, பாசிச ஒன்றிய அரசின் படுகொலை - தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்குனர் அருள்பணி மார்ட்டின் யோசு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாசிச ஒன்றிய அரசால், நீதிமன்றக் காவலில் படுகொலை செய்யப்பட்ட, குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்த, மற்றும், விளிம்புநிலை மாந்தரின் இறைவாக்கினராகத் திகழ்ந்த, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம், ஜூலை 11, இஞ்ஞாயிறன்று, 'முழக்கம் செய்வோம்' என்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இயேசு சபை அருள்பணி ஸ்டான் அவர்களது இறப்பிற்கு நீதி கேட்டும், UAPA சட்டத்தை நீக்கக்கோரியும், தேசியப் புலனாய்வு முகமையைக் கலைக்கக்கோரியும், அச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் 14 மனித உரிமைக் காப்பாளர்களைக் காப்பாற்றக்கோரியும், இந்நிகழ்வில் வலியுறுத்தப்படவுள்ளது.

இஞ்ஞாயிறன்று ஒவ்வொருவரும், தங்களது முகநூல் (Facebook), படவரி (Instagram), கீச்சகம் (Twitter), புலனம் (WhatsApp) ஆகியவற்றில், இந்நிகழ்வுக்கென்று, இளைஞர்கள் உருவாக்கியுள்ள காட்சிப்படத்தைப் பதிவுசெய்து, அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த, தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வு பற்றி தகவல்களை வெளியிட்டுள்ள, தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம், தமிழக இளம் கத்தோலிக்க மாணாக்கர், மற்றும், இளம் மாணாக்கர் இயக்கத்தின் இயக்குனர் அருள்பணி மார்ட்டின் யோசு அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன், ஆலய வளாகத்திற்கு வெளியே, ‘முழக்கம் செய்வோம்’ என்ற அஞ்சலி நிகழ்வை, பதாகைகளுடன் முன்னெடுக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தி அமைதிப் பேரணியை மேற்கொள்ளலாம், ஆலய வளாகத்திற்கு வெளியே நின்று முழக்கமிடலாம் என்று கூறியுள்ள அருள்பணி மார்ட்டின் யோசு அவர்கள், மனித உரிமைக்காப்பாளர்கள் உரைப்பது போன்று, ஸ்டான் சுவாமியின் இறப்பு, ஒரு நிறுவனப் படுகொலை, பாசிச ஒன்றிய அரசின் படுகொலை என்று குறிப்பிட்டுள்ளார். (Ind.Sec./Tamil)

10 July 2021, 15:40