தேடுதல்

"வாழ்வு தரும் உணவு நானே" - யோவான் 6:35 "வாழ்வு தரும் உணவு நானே" - யோவான் 6:35 

பொதுக்காலம் 18ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவும், நம் தேவைகளை இறைவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், உருக்கமாக மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 18ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக, நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் கோவிட் பெருந்தொற்று என்ற வேதனையிலிருந்து, நம் கவனம் சற்று விடுபட்டு, ஜூலை 23ம் தேதி முதல், ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிகழ்ந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்மீது திரும்பியுள்ளது. இத்தகையச் சூழலில், இன்று நாம், ஆகஸ்ட் மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானதும், ஜப்பான் நாட்டின் வேறு இரு நகரங்களில் நிகழ்ந்தவை, நம்மை, ஒவ்வோர் ஆண்டும், வேதனையில் ஆழ்த்துகின்றன.

ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாள்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, அணுகுண்டுகளை வீசி, பல்லாயிரம் அப்பாவி மக்களை கொன்றுகுவித்த நினைவுகள், இன்னும் மனித சமுதாயத்தின் மனசாட்சியைக் காயப்படுத்திவருகின்றன. இக்கொடுமையான தாக்குதல்களில் இறந்தோர் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா அமைதிப்பூங்காவில், "Let all the souls here rest in peace; for we shall not repeat the evil" அதாவது, "இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் அமைதியில் இளைப்பாறட்டும்; ஏனெனில், தீமையை மீண்டும் செய்யமாட்டோம்" என்ற சொற்கள், கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

1945ம் ஆண்டுக்குப்பின், அணுகுண்டுகளை வீசி, மக்களை நேரடியாகக் கொல்லும் தீமை நடைபெறவில்லை, உண்மைதான். ஆனால், அணுஆயுத சோதனைகள், பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும் நடத்தப்பட்டு, அதன் ஆபத்தான விளைவுகளை, பூமித்தாயும், அப்பாவி மனிதர்களும் இன்றும் சந்தித்துவருகின்றனர். அணுசக்தியை, ஆயுதமாக மாற்றி, அழிவுக்குப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தச் சக்தியை, மின்சக்தியாக மாற்றும் அணு உலைகள், உலகின் பல நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. இங்கும், அழிவுகள் தொடர்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு (1945) அழிவுகள், இரஷ்யாவின் செர்னோபிள், (1986), மற்றும், ஜப்பானின் புக்குஷிமா (2011) அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகள், ஆகியவற்றைக் கண்டபின்னரும், உலக அரசுகள், அணுசக்தியை இன்னும் நம்பியுள்ளனவே என்ற கவலையை, இறைவனிடம் ஏந்திவருகிறோம், இந்த ஞாயிறு வழிபாட்டில்.

அணுசக்தியையும், அணுஉலைகளையும் பற்றிய சிந்தனைகள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவையா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை, இன்று, பெருமளவில் ஆக்ரமித்து, அதேவேளையில், அச்சுறுத்திவரும் ஓர் ஆபத்தை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விவிலியத்தின் துணைகொண்டு சிந்திப்பதற்கு, ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம்.

அணுசக்தியைப் பற்றிய இரு எண்ணங்களை நாம் இன்று புரிந்துகொள்வது, பயனுள்ள முயற்சியாக அமையும். அணுசக்தியைப் பாதுகாக்க, அரசுகள், மக்களிடம் பொய்களைக் கூறி ஏமாற்றுகின்றன என்பது, முதல் எண்ணம். அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிய உண்மைகள், மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்று சான்றுகள் பல உள்ளன. ஹிரோஷிமா, மற்றும், நாகசாகியில், அமெரிக்க அரசு, அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள், சங்கடமான கேள்விகளை எழுப்பினர். அக்கேள்விகளுக்கு விடையளிக்கும்வண்ணம், இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர, அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று, James Conant, Harvey Bundy, Henry Stimson என்ற மூவர், அரசின் சார்பில் பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல், இன்றுவரை, மனசாட்சியுள்ள அமெரிக்க மக்கள், அந்தப் பொய்யை, சீரணிக்கமுடியாமல் தவிக்கின்றனர்.

அணுகுண்டு தாக்குதல்களைப்பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் அரசுகள் பொய்சொல்லி வருகின்றன. உலகில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகை, ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கமுடியும் என்று கூறப்படுகிறது.

உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் கட்டிவருகின்றன. அரசுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை, அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் பல பொய்களை, அரசுகள், தொடர்ந்து பரப்பிவருகின்றன.

தமிழகத்தின் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள், நமது இரண்டாவது எண்ணத்தை ஆரம்பித்து வைக்கின்றன. அணுசக்திக்கு மாற்றாக, இயற்கை வழங்கும் நீர், காற்று, சூரியஒளி ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படும் சக்திகளை நாம் பயன்படுத்தமுடியும். அவ்விதம் நாம் உருவாக்கும் சக்திகளைக்கொண்டு, நமது அளவானத் தேவைகளை (need), நாம் நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், அளவின்றி வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை (greed) நிறைவுசெய்யும் ஆற்றல், இந்தச் இயற்கைச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.

பேராசைகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் எளிமையான வாழ்வை ஒவ்வொருவரும் பின்பற்றினால், நமக்கு, இத்தனை பொருட்கள் தேவையில்லை. தேவையற்ற அந்தப் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை. அத்தொழிற்சாலைகளை, இரவுபகலாய் இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், இயற்கைச் சக்திகளை நம்பினால், கற்காலத்திற்குத் திரும்பவேண்டியிருக்கும் என்ற எண்ணம், நம்மில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளதால், இயற்கைச் சக்திகளைக் கொண்டு வாழமுடியும் என்ற எண்ணத்தை, எள்ளி நகையாடலாம். ஆனால், அதேவேளை, நம்மில் பெருகியிருக்கும் பேராசைகள், நம்மை கற்காலத்திற்கு இழுத்துச்செல்லும் என்று, ஓர் அறிவியல் மேதை வழங்கியிருக்கும் எச்சரிக்கையையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

அணுசக்தியை, ஆயுதங்களாகப் பயன்படுத்துவதற்கு, ஆரம்பத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்துவந்த, அறிவியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள், விடுத்த எச்சரிக்கை இதோ: “I do not know with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.” - Albert Einstein "மூன்றாம் உலகப்போரில் எவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம் உலகப்போரில், கழிகளும் கற்களும் பயன்படுத்தப்படும்."

அணு உலைகள் என்ற கோவில்களைக் கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது பேராசை வெறிகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் எளிய வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளமுடியும் என்ற கனவை, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நமக்குள் விதைக்கின்றன. எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியை மையப்படுத்தி முதல் வாசகமும், நற்செய்தியும் பேசுகின்றன.

வேற்று உயிரினங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றால், அமைதியாக வாழும். ஆனால், மனிதர்கள் மட்டும் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறினாலும், நிறைவேற்றமுடியாத தங்கள் பேராசையைத் தீர்ப்பதற்கு, வெறிகொண்டு அலைவர்.

சில ஆண்டுகளுக்குமுன், ஓர் அழகான குறும்படம் வெளியானது. இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்றதும், நம்மில் பலர், இந்தக் கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான்; இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நாம் காண்பது, நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அவ்விரு சிறுத்தைகளும், மானும், அழகாக விளையாடுவதாக, அக்காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த அற்புதக் காட்சியின் இறுதியில், திரையில் தோன்றும் வரிகள் இவை: "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி, வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுறுகிறது.

பசி என்பது ஓர் அடிப்படைத் தேவை. அந்தத் தேவை நிறைவேறியபின், நாம் நிம்மதி அடையவேண்டும். ஆனால், மனிதர்கள் நிறைவும், நிம்மதியும் அடைவதென்பது மிக, மிக, மிக அரிதாகிவிட்டது. 'போதும்' என்று நிம்மதி அடைவதற்குப் பதில், வேண்டும், இன்னும் வேண்டும் என்ற வெறியை நாம் வளர்த்துவருவதாலேயே, நாம், இத்தனைப் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பசியால் வாடும் இஸ்ரயேல் மக்கள், இறைவனுக்கும், மோசேக்கும் எதிராக முணுமுணுப்பதைக் காண்கிறோம். இறைவன், மோசே வழியாக, அம்மக்களுக்குத் தரும் பதிலுரை இதுதான்: “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப்போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.” (விடுதலைப் பயணம் 16:4)

இறைவன் தந்த இக்கூற்றில், தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும் என்ற சொற்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. வாக்களிக்கப்பட்ட நாட்டில் வளமுடன் வாழ்வதற்குத் தேவையான பாடங்களை, இறைவன், பாலைநிலத்தில், தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார். தன் மக்கள், தேவைகளை மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருக்கவேண்டும், பேராசைகொண்டு, அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருக்கக்கூடாது என்பதே, 'மன்னா' என்ற கொடையின் வழியே இறைவன் கற்றுத்தந்த பாடம். அந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டனரா என்பதை அறிய, இறைவன் வைத்த தேர்வில், வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு. அடுத்த நாளுக்கெனச் சேர்த்தவர்களின் உணவு, புழுவைத்து, நாற்றமெடுத்தது என்று, விடுதலைப் பயணம் 16ம் பிரிவின் பிற்பகுதியில் (வி.பயணம் 16:20) நாம் வாசிக்கிறோம்.

அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைப்பது, மனிதர்கள் மத்தியில் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதைத் தாண்டி, குவித்துவைக்கும் தீராத நோயில் சிக்கித்தவிக்கும் பல நாட்டுத் தலைவர்களை, தலைவிகளைப்பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள், நம்மை வேதனையடையச் செய்கின்றன. ஆயிரமாயிரம் காலணிகளை, நகைகளை, உடைகளைச் சேர்த்துவைத்திருந்த தலைவி, பஞ்சுமெத்தையில், பஞ்சுக்குப் பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கிவைத்திருந்த அரசியல் தலைவர், குளிக்கும் தொட்டியைத் தங்கத்தில் செய்திருந்த அரசுத்தலைவர்... என்று, வரலாறு கூறும் இந்த பட்டியல், நீளமானது. இந்தத் தலைவர்களும், தலைவிகளும் தாங்கள் சேர்த்துவைத்ததில் எதையும் தங்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

குவித்துவைக்கும் பேராசை நோயின் பக்கநோயாக இருப்பது, குறுக்கு வழியைத் தேடும் நோய். இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். தன்னைத் தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் சொற்கள், நாம் அனைவரும் குறுக்கு வழியை விரும்புகிறவர்கள் என்பதை நமக்கு நினைவுறுத்துகின்றன. “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 6:24-26) என்று இயேசு அன்று கூறிய எச்சரிக்கை, குறுக்கு வழிகளில் சுகம் தேடும் அனைவருக்கும் தரப்படும் எச்சரிக்கை.

குறுக்கு வழிகள் என்ற மாயை, பேராசை வெறி, ஆகியவற்றைப் போக்குவதற்கு, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தரும் ஓர் அழகான வழி இதோ: அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். (யோவான் 6:27)

தேவைகளைப் பெருக்கி, பேராசை வெறியர்களாக நாம் மாறினால், ஆண்டவனை ஒதுக்கிவைத்துவிட்டு, அணுசக்திக்குக் கோவில்களை எழுப்பி, அதில் மக்களைப் பலியிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை! பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவும், நம் தேவைகளை இறைவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2021, 14:18