தேடுதல்

ஆடுகளை பேணிக்காக்கும் ஆயர்கள் ஆடுகளை பேணிக்காக்கும் ஆயர்கள் 

பொதுக்காலம் 16ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! - எரேமியா 23: 1

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 16ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

முதல் உலகப்போரின் கொடுமைகளை நேரடியாக உணர்ந்த கவிஞர்களில் ஒருவரான, வில்லியம் பட்லர் ஏட்ஸ் (William Butler Yeats) அவர்கள், 1919ம் ஆண்டு, அதாவது, முதல் உலகப்போர் முடிவடைந்திருந்த நேரத்தில், 'இரண்டாம் வருகை' (The Second Coming) என்ற தலைப்பில் கவிதையொன்றை வெளியிட்டார். அக்கவிதை, நம் சிந்தனைகளைத் துவக்க உதவியாக உள்ளது.

முதல் உலகப்போர் முடிவுற்றதன் முதல் நூற்றாண்டை 2019ம் ஆண்டு நினைவுகூர்ந்தோம். அதே 2019ம் ஆண்டின் இறுதியில் துவங்கி, இன்னும் முடியாமல் தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று என்ற மற்றொரு போருடன் இணைத்து, இக்கவிதையை இன்று சிந்திக்கிறோம். இக்கவிதையில், கவிஞர் ஏட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கூர்மையான எண்ணங்கள், நாம் வாழும் இன்றையச் சூழலுக்கும் மிகப் பொருத்தமாகத் தெரிகின்றன. இதோ, அக்கவிதையின் ஒரு சில வரிகள்:

  • "சுற்றிலும் பலவும் வீழ்கின்றன; மையம் எதையும் தாங்க இயலவில்லை;
  • அராஜகம் இவ்வுலகில் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது
  • இரத்தம் தோய்ந்த வெள்ளம் எங்கும் பாய்கிறது
  • மாசற்ற நிலை மூழ்கடிக்கப்பட்டுள்ளது
  • மிகச் சிறந்தவர்கள், தங்கள் கொள்கைப் பிடிப்பை இழந்துள்ள வேளையில்,

மிக மோசமானவர்கள், வெறியின் உச்சத்தில் உள்ளனர்"

மையமாக, நடுநிலையோடு செயலாற்றவேண்டிய உலக அரசுகள் பல, தட்டுத்தடுமாறி வீழ்கின்றனவோ என்ற உணர்வு, அண்மைய சில மாதங்களில், அடிக்கடி எழுகிறது. நடுநிலை தவறியுள்ள அரசுகளின் பிரித்தாளும் சதிகள், மக்களை, பலநிலைகளில் பிளவுபடுத்தியுள்ளன. "ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப, மக்கள், பிளவுபட்டு, அதேவேளையில், ஒரு கிருமிக்குப் பயந்து, இல்லங்களில் அடைபட்டிருப்பது, அரசியல் தலைவர்களுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

தலைவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் மீது, 'சமூக விரோதிகள்' என்ற பழி சுமத்தப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றினால் பல்வேறு தடைகள், முழு அடைப்புக்கள் காரணமாக, மக்கள், வீடுகளில் தங்களையே சிறைபடுத்திக்கொண்ட வேளையில், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்களை வேட்டையாடி, அவர்களை, நலவசதிகள் குறைந்த சிறைகளில் அடைப்பதில், அரசுகள் மிகவும் தீவிரமாய் இறங்கியுள்ளன. இந்த வேட்டையின் மொத்த வடிவமாக, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு நேர்ந்த கொடுமையை, தற்போது, உலகமே அறிந்துள்ளது.

"சக்தியே சரியானது" அல்லது, "சக்திமிகுந்தோரே சரியானவர்கள்" (Might is Right) என்ற தவறானக் கருத்தை சரியென்று நிலைநாட்ட முயன்றுவரும் தலைவர்களை, இஞ்ஞாயிறு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகம், வன்மையாகக் கண்டனம் செய்கிறது. ஆண்டவரின் கூற்றாக, இறைவாக்கினர் எரேமியா பதிவுசெய்துள்ள கடினமான சொற்கள், இஞ்ஞாயிறன்று, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில், பீடத்திலிருந்து அறிக்கையிடப்படும்போது, அதை, இவ்வுலகிற்கு, இறைவன் வழங்கும் ஓர் எச்சரிக்கையாக நாம் எண்ணிப்பார்க்கலாம். மக்களை அழித்துச் சிதறடிக்கும் தலைவர்களுக்கு, ஆண்டவர் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

இறைவாக்கினர் எரேமியா 23: 1-2

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!... நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.

கண்டனம், தண்டனை என்ற கருத்துக்களோடு இறைவனின் சொற்கள் முடிவடையவில்லை. நம்பிக்கை தரும் சொற்களையும் இறைவன் கூறியுள்ளார்:

நம்பிக்கை தரும் இச்சொற்களைத் தொடர்ந்து, "நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன்" என்று, இறைவன் அளிக்கும் வாக்கு, இயேசுவின் வடிவில் வந்த நல்லாயன் என்பதை, நாம் உறுதியாக நம்புகிறோம்.

ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர்" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். (எரேமியா 23: 5-6)

ஞானம், நீதி, நேர்மை ஆகிய உன்னதப் பண்புகளைக் கொண்ட ஆயரான இயேசு, ஒரு 'தளிர்' போல, மென்மையான உள்ளமும் கொண்டிருந்தார் என்பதை, இன்றைய நற்செய்தி (மாற்கு 6: 30-34) விவரிக்கின்றது.

நற்செய்திப் பணிக்கென இயேசு தன் சீடர்களை அனுப்பிய நிகழ்வை, சென்ற வாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் தொடர்ச்சியை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். தங்கள் அருள்பணியிலிருந்து திரும்பிவந்த சீடர்கள், தங்களுக்கு நிகழ்ந்தவற்றை, ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டபோது, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' (மாற்கு 6: 31) என்று இயேசு கூறுகிறார். உலகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, இயேசு கூறியச் சொற்கள், புதிரானதாக, பொருளற்றதாகத் தெரிகின்றன.

மக்கள் மத்தியில் ஆர்வமாக, ஆரவாரமாகப் பணிபுரிந்து திரும்பி வந்துள்ள சீடர்களை, பாலைநிலத்திற்குப் போய் ஒய்வெடுக்கச் சொன்னதற்குப்பதில், "சீடர்களே, பிரமாதம், இன்னும் பல இடங்களுக்குச் சென்று போதியுங்கள், அருஞ்செயல்களை ஆற்றுங்கள்" என்று இயேசு உற்சாகப்படுத்தி, மீண்டும் அவர்களை, அருள்பணிக்கு அனுப்பியிருக்க வேண்டாமா? என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

தன்னலம் மிக்க ஒரு தலைவன், தன்னுடைய சீடர்களுக்கு, இவ்விதக் கட்டளையைத் தந்திருப்பார். அத்தலைவனுக்குத் தேவையானதெல்லாம், அவரது பேரும், புகழும், மக்கள் மத்தியில் மீண்டும், மீண்டும் ஒலிக்கவேண்டும் என்பது மட்டுமே. தன் சுயநலத் தேவைக்காக, தொண்டர்களைப் பயன்படுத்திவிட்டு, தேவைகள் நிறைவடைந்ததும், தொண்டர்களைத் தூக்கியெறியும் எத்தனைத் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம்?

இத்தகைய சுயநலத் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, இறைவன் அனுப்பியவரே இயேசு. அந்த நல்லாயன், தன் சீடர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தார் என்பதை, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்ற சொற்கள் தெளிவாக்குகின்றன.

நல்லாயன் இயேசுவுக்கு, தன் பணிகளும், கொள்கைகளும் முக்கியம்தான். ஆனால், அதே வேளை, அப்பணிகளைச் செய்யும் சீடர்களும் மிகவும் முக்கியம். எனவே, பணிசெய்து திரும்பியுள்ள சீடர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை ஓய்வெடுக்கும்படி பணிக்கிறார் இயேசு.

உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துயிர் தரும் மருந்து ஓய்வு. உடல் ஓய்வெடுக்கும் நேரத்தில் நமது உள்ளம் விழித்தெழுவதற்கும், நாம் செய்த வேலைகளை, நமது அன்றைய நாளை அலசிப்பார்ப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது, அல்லது, வாய்ப்புக்களை உருவாக்கிக்கொண்டு, வாழ்வை ஆய்வுசெய்வது, பல வழிகளில் பயனளிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த ஆய்வுக்கு நேரம் ஒதுக்கினால், பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகிடைக்கும். இதைத்தான், லொயோலாவின் புனித இக்னேசியஸ், தன் ஆன்மீகப் பயிற்சிகள் வழியே கற்றுத்தந்துள்ளார்.

புனித இக்னேசியஸ் கற்றுத்தந்த ஆன்மீகப் பயிற்சிகளில், ஒவ்வொரு நாளும், பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை ஒதுக்கி, அந்நாளைப் பற்றிய ஆன்மீகத்தேடலை மேற்கொள்வது, ஒரு முக்கியக் கூறாக அமைந்துள்ளது. 'ஆன்மீக ஆய்வு' என்ற இந்த பயிற்சிக்கு, புனித இக்னேசியஸ், மிக முக்கியமான இடம் கொடுத்திருந்தார். புனித இக்னேசியஸ் கற்றுத்தந்த இந்த ஆன்மீக ஆய்வு, இயேசு சபையினருக்கும், துறவிகளுக்கும் மட்டும் தேவைப்படும் வழிமுறை அல்ல. நம் அனைவருக்குமே தேவையான ஒரு சிறந்த பாடம்.

காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கப்போகும்வரை, பல வேலைகளால், நமது நாள் நிறைந்துவிடுகிறது. ‘இராக்கெட்’ வேகத்தில், மிகத்துரிதமாக இயங்கும் இவ்வுலகில், உண்பது, குளிப்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் நேரம் ஒதுக்க இயலாமல், சுழன்று, சுழன்று, வேலைகள் செய்கிறோம்.

அதேபோல், நமது குடும்ப உறவுகளுக்குத் தேவையான நேரமும் ஈடுபாடும் தருகிறோமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இப்படி இயந்திரமாக இயங்கும் நாம், ஒவ்வொரு நாளும், பத்து நிமிடங்கள் அமைதியில் அமர்ந்து, அந்த நாளைச் சீர்தூக்கிப் பார்த்தால், பல தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உருவானால், அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய, இந்த ஆன்மீக ஆய்வு பயன்தரும். இறைவனுடன் நாம் செலவிடும் இந்த சில மணித்துளிகள், நம்முடைய நலனையும், நம் குடும்பத்தின் நலனையும், நிச்சயம் மேம்படுத்தும்.

மின்காந்தத் திறனை உலகறியச் செய்த Michael Faraday அவர்கள், ஒரு முறை, அறிவியல் வல்லுனர்கள் கூட்டமொன்றில், ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார். அவரது உரை முடிந்ததும், அனைவரும் எழுந்து நின்று, நீண்டநேரம் கரவொலி எழுப்பினர். இங்கிலாந்து அரசனான ஏழாம் எட்வர்ட் அவர்கள், அப்போது Walesன் இளவரசராக இருந்தார். அவரும் அக்கூட்டத்தில் பங்கேற்று, அறிவியல்  மேதை Faraday அவர்களைப் புகழ்ந்தார். கரவொலி மீண்டும் அரங்கத்தை நிறைத்தது. திடீரென, அரங்கத்தில் அமைதி நிலவியது. ஏனெனில், மேதை Faraday அவர்கள், அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச்சென்றார். அரங்கத்திற்கு அருகிலிருந்த ஒரு கோவிலில், அப்போது, நண்பகல் செபத்திற்காக மணி ஒலித்திருந்தது. இளவரசரும், இன்னும் பிற அறிவியல் வல்லுனர்களும் தன்னைச் சுற்றியிருந்தாலும், Faraday அவர்கள், அந்த நேரத்தை, இறைவனுக்கென ஒதுக்கியதால், கூட்டத்திலிருந்து, புகழ் மழையிலிருந்து விலகி, இறைவனை நாடிச்சென்றார். நம் அனைவருக்கும் தேவையான ஒரு பாடம் இது.

என்னதான், பணிகள் இருந்தாலும், எவ்வளவுதான் பேரும் புகழும் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் இறைவனைத் தேடிச்செல்லும் நேரங்கள், நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும் இருந்தால், இன்னும் நாம் உயர்வடைய வழியுண்டு. இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, தன் பணிவாழ்வில் ஒவ்வொரு நாளும், இறைவனுக்கு நேரம் ஒதுக்கினார் என்பதை அறிவோம். அதே பாடத்தை, தன் சீடர்களுக்கு வழங்கவே, அவர்களிடம்,  'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று கனிவுடன் கூறினார்.

பாலைநிலத்தில், தனிமையைத் தேடிச்செல்வது அங்கேயேத் தங்குவதற்கு அல்ல. மாறாக, தனிமையில் பெற்ற இறையனுபவத்தை, மக்களோடு பகிர்ந்துகொள்ளவே அந்தத் தனிமை. இதை நமக்குச் சொல்லித்தருகிறது, இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதி. பாலைநிலத்திற்கு, இயேசுவும், மற்ற சீடர்களும் சென்றுள்ளனர் என்பதை அறிந்துகொண்ட மக்கள், அங்கும் அவர்களைத் தேடிச்சென்றனர். பாலைநிலமென்றும் பாராமல், தங்களைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், இயேசு நடந்துகொண்டது, நமக்கு, மீண்டும் ஒரு பாடமாக அமைகிறது. இயேசு கரையில் இறங்கியபோது, பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். (மாற்கு 6: 34) என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.

பணிகளில் மூழ்கியதால், உண்ணவும் நேரமின்றி தவித்த சீடர்களுடன் பாலைநிலத்தை நாடிச்சென்ற இயேசு, அங்கும் மக்கள் தங்களைத் தேடிவந்துள்ளனர் என்பதை அறிந்ததும்,  தனது தேவைகளையும், தன் சீடர்களின் தேவைகளையும் புறந்தள்ளி, மீண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியைத்துவக்கினார் என்று, இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.

இரண்டு சிந்தனைகளை இன்று நாம் மனதில் ஆழப்பதிப்போம். வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, அதை, இறைவனுக்கு வழங்க முயல்வோம். இரண்டாவதாக, நமது ஆன்மீகத் தேவைகளுக்காக நேரம் ஒதுக்கும் சூழல்களிலும், அடுத்தவர் தேவை அதிகம் என்பதை நாம் உணர்ந்தால், நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் கனிவையும், தாராளமனதையும் இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

17 July 2021, 14:15