தேடுதல்

“சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) 

பொதுக்காலம் 14ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

முற்சார்பு முடிவுகளால், நாம், வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும், புறக்கணிப்பு என்ற வேதனையான ஓர் உண்மையை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 14ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

மூன்று ஆண்டுகளுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்குக் கீழ், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும், எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

அந்தப் படத்தை சிறிது ஆழமாக ஆய்வுசெய்தபோது, அதன் தவறுகள் வெளிச்சமாயின. அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் என்பதும், புரிந்தது.

இன்னும் சற்று ஆழமாக ஆய்வுசெய்தபோது, அந்தப் படம், வெவ்வேறு தலைப்புக்களோடு, கடந்த எட்டு ஆண்டுகளாக, Whatsapp உலகத்தில் பயணித்துவருகிறது என்பதும் தெரியவந்தது. இந்த ஏழு தலைகொண்ட நாகத்தின் படமும், 'உலக முடிவு வந்துவிட்டது' என்ற எச்சரிக்கையும், தற்போதைய பெருந்தொற்று காலத்தில், மீண்டும் வலம்வந்திருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். கோவிட் பெருந்தொற்றைவிட, அதைப்பற்றிய தவறான தகவல்களும், வதந்திகளும் விரைவாகப் பரவி, மக்களை, கூடுதல் வேதனையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன என்பதை நாம் அறிவோம்.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே, தகவல் பரிமாற்றங்கள், தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையையும், அதனால் விளையக்கூடிய நன்மை, அல்லது, தீமையையும் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற அவசரம், நம்மிடம் அதிகமாகியுள்ளதை எண்ணி, கவலை எழுகிறது. இத்தகைய அவசரப் பரிமாற்றங்களால், வதந்திகளும், பொய்ச் செய்திகளும் அதிகம் பரவுகின்றன.

அண்மையில் (ஜூன் 8, 2021) Katharina Buchholz என்ற பெண்மணி எழுதியிருந்த ஒரு கட்டுரை, சமூக ஊடகங்கள் வழியே எளிதில் பரவும் 'fake news' என்ற பொய் செய்திகளைப் பற்றி கருத்துக்களை வெளியிட்டது. "COVID & WhatsApp Cause Surge of Fake News in India" அதாவது, "இந்தியாவில், பொய்ச் செய்திகள் மிக அதிகமாகப் பரவக் காரணமான கோவிட் மற்றும் WhatsApp" என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒருசில எண்ணங்கள் இதோ:

கோவிட்-19ன் புதிய அலையுடன், பொய்ச் செய்திகளின் அலையும் இந்தியாவை மூழ்கச் செய்துள்ளது. நியூ யார்க் நகரிலும், இந்தியாவின் பூனே நகரிலும் உள்ள சில மருத்துவர்கள் இணைந்து, 'மருத்துவ வலைத்தள ஆய்வு' என்ற இதழில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பரவும் தவறான தகவல்களுக்கு, Whatsapp அதிக காரணம் என்பதைக் கூறியுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி, இந்தியாவில், 30 விழுக்காடு மக்கள் Whatsapp பயன்படுத்துகின்றனர் என்றும், இவர்களுக்கு வந்துசேரும் தகவல்களில் 50 விழுக்காடு தகவல்கள் உண்மையா என்பதை கண்டுபிடிக்காமல், அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்கின்றனர் என்றும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சொல்லப்படும் செய்திகளையும், அவற்றில் உள்ள உண்மைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நமக்குள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் முற்சார்பு முடிவுகளின் (prejudice) அடிப்படையில் அவசரப்பட்டு நாம் செயல்படுவதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. முற்சார்பு முடிவுகளால், நாம் அனைவரும், வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும், வேதனையான ஓர் உண்மையை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... புறக்கணிப்பு! மனித அனுபவங்களிலேயே ஆழமான காயங்களை உருவாக்கவல்லது, புறக்கணிப்பு. அதிலும், காரணம் ஏதுமின்றி, அல்லது, உண்மைகளைச் சொன்ன காரணத்திற்காக, நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.

தன்னைப் புறக்கணித்து, தனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இஸ்ரயேல் மக்களைப்பற்றி, இறைவாக்கினர் எசேக்கியேலிடம், இறைவனே முறையிடுகிறார் என்பதை, முதல் வாசகம் கூறுகிறது. தன் சொந்த ஊருக்குச் சென்ற இயேசுவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

சொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு செய்த முதல் செயல், தொழுகைக்கூடத்தில் கற்பித்தது! இயேசு பேச ஆரம்பித்ததும், அங்கு உருவான மகிழ்வானச் சூழலை நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு விவரிக்கிறார: அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!” என்றார்கள்.  (மாற்கு 6:2)

நேரம் செல்லச் செல்ல, மக்களின் வியப்பு, விடைபெற்றது, தயக்கங்கள் தோன்றின. அவ்வுணர்வுகள், இயேசுவைப் புறக்கணிக்க வழிவகுத்தன. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், மக்கள் இயேசுவைப்பற்றி கொண்டிருந்த முற்சார்பு முடிவுகள்! வழக்கு ஆரம்பமாகுமுன்னரே, தீர்ப்பு வழங்குவதைத்தான், முற்சார்பு முடிவுகள் (Prejudice) என்று கூறுகிறோம்.

“இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள் (மாற்கு 6:3) என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

இயேசு பேச ஆரம்பித்ததும், அவர் என்ன சொன்னார் என்பதை மக்கள் கவனித்தனர். எனவே, மகிழ்வும், வியப்பும் அடைந்தனர். ஆனால், விரைவில், அவர்கள் எண்ணங்கள் மாறின. ‘என்ன சொன்னார்’ என்பதிலிருந்து, 'யார் சொன்னார்' என்று ஊர் மக்கள் சிந்திக்க ஆரம்பித்ததும், அவர்கள் வியப்பு, தயக்கமாகவும், வெறுப்பாகவும் மாறியது.

சொல்லப்படும் கருத்தை விட்டுவிட்டு, சொல்பவர் யார் என்பதில் நம் கவனம் திரும்பும்போது, இந்தப் பிரச்சனை உருவாகும். அதிலும், சொல்பவரது குடும்பம், குலம், செய்யும் தொழில் ஆகியவற்றைக்குறித்து முற்சார்பு முடிவுகளை நாம் எடுத்திருந்தால், பிரச்சனை பெரிதாகி, சொல்லப்பட்ட கருத்துக்களுடன், சொல்பவரும் சேர்த்து ஒதுக்கப்படுவார்.

இயேசு தன் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்ற காலக்கட்டத்தில், அவர் புகழ் ஓரளவு பரவியிருந்தது. ஆயினும், ஊர்மக்கள் அவரை இன்னும் பழையவராக, தங்களுக்கு பழக்கமானவராக எண்ணியதால், தடைச்சுவர்கள் எழுந்தன. நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலரின் உயர்ந்த அம்சங்களைக் காண்பதற்கு, நமது நெருக்கமே ஒரு தடையாகிவிடும். "ஓ, இவர்தானே" என்ற முத்திரைகள் எளிதில் நம் கைவசம் இருக்கும். இயேசுவுக்கும் இத்தகைய 'ரெடிமேட்' முத்திரைகள் குத்தப்பட்டன. "இவர் தச்சர் அல்லவா?, இவர் மரியாவின் மகன்தானே!" என்று, ஊர்மக்கள் எடுத்திருந்த முற்சார்பு முடிவுகள், அவரையும், அவர் சொன்ன உண்மைகளையும் ஒதுக்கிவைத்தன.

ஒருவரது பிறப்பையும், அவர் செய்யும் தொழிலையும் வைத்து, நாம் எடுக்கும் அவசரமான, அவலமான முடிவுகள், எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை, நாம் விளக்கத் தேவையில்லை. இத்தகைய முற்சார்பு முடிவுகளுக்கு இயேசுவே பலியானார் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் ஓர் எச்சரிக்கை!

மக்களின் முற்சார்பு முடிவுகளால், தான் புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இயேசு, பொருள் செறிந்த வார்த்தைகளைச் சொன்னார்: “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) இயேசு கூறிய இந்தப் பொன்னான வார்த்தைகள், அன்றுமுதல் இன்றுவரை, பல்வேறு சூழல்களில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தன் பிறப்பையும், தொழிலையும் வைத்து, தன்னை, குறைவாக மதிப்பீடு செய்திருந்த தன் ஊர்மக்களிடம், இயேசு, தன்னை ஓர் இறைவாக்கினராக ஒப்புமைப்படுத்திப் பேசினார். இயேசுவின் அடையாளம், பிறப்பினாலோ, அவர் செய்த தொழிலாலோ வரவில்லை. இறைவாக்கினராக, இறைவனின் வாக்காக வாழ்ந்ததே, அவருக்குரிய தனித்துவமான அடையாளம் என்பதை, தன் சொந்த ஊர் மக்களுக்கும், நமக்கும் நினைவுறுத்துகிறார் இயேசு.

இறைவாக்கினராக வாழ்வது, அன்றும், இன்றும், என்றும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினர் சந்திக்கும் மிகப்பெரும் சவால், தன் மனசாட்சியின் வழியாகப் பேசும் இறைவனின் குரலுக்கு, எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும், செவிமடுத்து வாழ்வது. இதனால், இறைவாக்கினர், தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், தனித்தே நிற்கவேண்டியிருக்கும். பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராக தனித்துநிற்பது, இறைவாக்கினர்கள் தேர்ந்துகொண்ட குறுகலான, கடினமான வழி.

இன்றைய உலகம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - ஊரோடு ஒத்துவாழ்வது. வாழ்க்கையின் குறிக்கோள், மனசாட்சியின் தூண்டுதல் போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, அல்லது, புதைத்துவிட்டு, பலரும் போகும் பாதையிலேயே பயணம் செய்யத்தூண்டுகிறது, இவ்வுலகம். தனித்து நிற்பதால், மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகிவிடுவோம், எனவே, கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என்று, பலவழிகளில் பாடங்கள் சொல்லித்தருகிறது, இவ்வுலகம். உலகம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து விலகி, தங்கள் குறிக்கோளை அடைய, தங்கள் மனசாட்சியின் குரலுக்குப் பணிய, தங்களுக்கென பாதைகளை உருவாக்கிக் கொள்ளும் பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இன்றும், இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தனியொரு பாதையை அமைத்து, இறைவாக்கினராக வாழ்ந்த திருத்தூதர் பவுல், உடலில் தைத்த முள்ளைப்போல் தன்னை வதைக்கும் ஒரு பெருங்குறையைப் பற்றி, இன்றைய 2ம் வாசகத்தில் (2 கொரிந்தியர் 12: 7-10) பேசுகிறார். அந்தக் குறையை நீக்கும்படி அவர் இறைவனை வேண்டியபோது, இறைவன் அவரிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" (2 கொரி. 12:9) என்று கூறியதையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார். திருத்தூதர் பவுலைப்போல பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இறைவனின் அருளை மட்டுமே நம்பி வாழ்ந்ததையும், அவ்வண்ணம் வாழ, நம்மைத் தூண்டிவருவதையும், இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.

பலரும் செல்லாத பாதைகளில், தனித்து தங்கள் பயணத்தை மேற்கொண்ட வீர உள்ளங்களுக்கு...

அப்பயணங்களின் வழியே, புதிய பாதைகளை அடுத்தத் தலைமுறைகளுக்கு வகுத்துத் தந்த வழிகாட்டிகளுக்கு...

உலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி, இறைவன் காட்டும் வழியில் சென்றதால் புறக்கணிக்கப்பட்ட புண்ணியவான்களுக்கு...

வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் (எசே. 2: 4-5) இறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு...

இன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் நமக்கு ஓர் எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் (மாற்கு 6:6) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் வாசிக்கிறோம். அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு முடிவுகளை அகற்றி, மூடப்பட்டக் கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.

03 July 2021, 13:39