தேடுதல்

தென் சூடானின் Tombura-Yambio ஆயர் Eduardo Hijboro Kussala தென் சூடானின் Tombura-Yambio ஆயர் Eduardo Hijboro Kussala  

தென் சூடானில் வன்முறைகள் நிறுத்தப்பட அழைப்பு

தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளின்றி துன்புறும் மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன – தென் சூடான் ஆயர் Kussala

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் சூடான் குடியரசில் இடம்பெறும் வன்முறை நிறுத்தப்பட்டு, மனிதாபிமான உதவிகள் ஆற்றப்பட வழியமைக்கப்படவேண்டும் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

தென் சூடானின் Tombura பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை பற்றி, கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் இணையதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவுசெய்துள்ள, Tombura-Yambio ஆயர் Eduardo Hijboro Kussala அவர்கள், அவ்வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளின்றி துன்புறும் மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்றும், அப்பகுதி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பொருள்கள் வழங்கப்படுமாறும், ஆயர் Kussala அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய நிலைமை, தனக்கு மிகுந்த கவலையளித்துள்ளது எனவும், ஊட்டச்சத்துக்குறைவு, நோய், மரணம் போன்றவை, ஏழை மக்களில் அதிகம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதாகவும், ஆயர் Kussala அவர்கள் கூறியுள்ளார்.

தென் சூடானில், இவ்வாண்டு ஜூன் மாதம் 19ம் தேதிக்கும், 22ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் இடம்பெற்ற வன்முறையில் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பாதிப் பேர் சிறார்.

03 July 2021, 15:03