தேடுதல்

செபமாலை செபிக்கும் சிறுமி செபமாலை செபிக்கும் சிறுமி 

லெபனோன் நாட்டிற்காக செபமாலை பக்திமுயற்சி

லெபனோன் நாட்டிற்கு மீட்பும், அமைதியும் கிடைப்பதற்குச் செபிப்பதற்காக, பல்வேறு கத்தோலிக்கக் குழுக்கள், மற்றும், குழுமங்களால் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய இறைவேண்டல் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனோன் நாட்டின் புனிதர் Charbel அவர்களின் திருநாளாகிய ஜூலை 24, இச்சனிக்கிழமையன்று, அந்நாட்டிற்காக செபமாலை பக்திமுயற்சி ஒன்றை, உலகளாவிய மறைப்பணி அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

திருத்தந்தை மறைப்பணி கழகம், மற்றும், மறைப்பணி வழிகாட்டல் உலகளாவிய மையம் (CIAM) ஆகிய இரண்டும் இணைந்து, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 6.30 மணிக்கு, உரோம் ஜனிக்குலும் குன்றுப் பகுதியிலுள்ள, CIAM அமைப்பின் அன்னை மரியா ஆலயத்தில் இந்த செபமாலை பக்திமுயற்சியை நடத்தவுள்ளன.

இச்செப நிகழ்வில் உலகினர் அனைவரும் பங்குகொண்டு, லெபனோன் நாட்டின் அமைதிக்காக இறைவனை மன்றாடுவதற்கு உதவியாக, இந்நிகழ்வு, இணைய வலைக்காட்சிகள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில், மத்தியக் கிழக்குப் பகுதிக்காகப் பணியாற்றுவோரின் ஒத்துழைப்புடன், இந்த அமைப்புகள், இச்செப நிகழ்வை நடத்துகின்றன.

உலகளாவிய இறைவேண்டல் இயக்கம்

இந்நிகழ்வு பற்றி பீதேஸ் செய்தியிடம் விளக்கிய, திருத்தந்தை மறைப்பணி கழகத்தின் பொதுச்செயலர் அருள்பணி Dinh Anh Nhue Nguyen அவர்கள், இம்மாதம் முதல் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில், லெபனோன் நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு கூட்டம் நடத்தியதற்குப்பின், உலகளாவிய இறைவேண்டல் இயக்கம் ஆரம்பமானது என்று கூறினார்.

லெபனோன் நாட்டிற்கு மீட்பும், அமைதியும் கிடைப்பதற்குச் செபிப்பதற்காக, பல்வேறு கத்தோலிக்கக் குழுக்கள், மற்றும், குழுமங்களால் ஊக்குவிக்கப்பட்டு, இந்த உலகளாவிய இறைவேண்டல் இயக்கம் தொடங்கப்பட்டது, இதில், திருத்தந்தை மறைப்பணி கழகங்களும் இணைந்துள்ளன எனவும், கப்புச்சின் சபையின் அருள்பணி Nguyen அவர்கள் கூறினார்.

மேலும், இச்சனிக்கிழமை பக்திமுயற்சியின் தொடர்ச்சியாக, வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி வரை, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து லெபனோன் மக்களும், அவர்களின் நண்பர்களும், உரோம் நேரம் மாலை 7.30 மணிக்கு, செபமாலை செபிக்குமாறு, இந்த உலகளாவிய இறைவேண்டல் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இதுவரை லெபனோன் நாட்டிற்காக, 2,30,000 செபமாலை பக்திமுயற்சிகள் நடைபெற்றுள்ளன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

23 July 2021, 14:44