தேடுதல்

Vatican News
புனித தூதரின் அரண்மனை, உரோம் புனித தூதரின் அரண்மனை, உரோம் 

திருத்தந்தையர் வரலாறு: மீண்டும் மீண்டும் தலைமைப் பதவி போட்டிகள்

திருத்தந்தை லியோவை தலைமைப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, திருத்தந்தை பெனடிக்ட்டை தன்னோடு ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் பேரரசர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை 12ம் யோவான் ஆயர் பேரவையின் கண்டனத்துக்கு உள்ளாகி, திருத்தந்தை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், அவருக்குப் பதிலாக பொதுநிலையினர் லியோ என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இரண்டே நாட்களில் பேரரசர் Otto வின்  ஆதரவுடன் அவர் திருத்தந்தையாகப் பதவியேற்றதும், பின்னர் பேரரசர் Otto   உரோம் நகரை விட்டு வெளியேறியதும் திருத்தந்தை 12ம் யோவான் திருஅவை தலைமைப் பீடத்தைக் கைப்பற்றி, புதிய திருத்தந்தை லியோவை வெளியேற்றியதும், அதன்பின் 964ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதி திருத்தந்தை 12ம் யோவான் உயிரிழந்ததும் குறித்து நாம் ஏற்கனவே நோக்கியுள்ளோம். ஒரே நேரத்தில் இருதிருத்தந்தையர்கள், அதாவது இருவருமே அங்கீகரிக்கப்பட்ட திருத்தந்தையர்களாக இருந்த காலம்  இத்தோடு முடிவடைந்துவிடவில்லை.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை எட்டாம் லியோ, திருத்தந்தை 12ம் யோவானால் திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தாலும், அவரையும் திருத்தந்தையாகவே பேரரசரும் பல திருஅவை அதிகாரிகளும் ஏற்றிருந்தனர். எனவே திருத்தந்தை 12ம் யோவானின் மரணத்திற்குப்பின் இவர்தான் தலைமைப்  பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். ஆனால், உரோமை அருள்பணியாளர்கள் இணைந்து, பெனடிக்ட்  என்ற கர்தினாலை அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். திருத்தந்தை லியோ பதவி விலக்கப்பட்டு திருஅவையிலிருந்தும் புறம்பாக்கப்பட்டதால் ஏற்கனவே கோபத்திலிருந்த பேரரசர் Otto வேறு ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மேலும் கோபமுற்றவராய் உடனே உரோம் நகர் திரும்பினார். அவருடன் திருத்தந்தை லியோவும் உரோம்  நகர் வந்தார். புதிய திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட கர்தினால் பெனடிக்ட், விசாரணைக்கென திருத்தந்தை லியோவின்முன் கொண்டுவரப்பட்டு, பெனடிக்டின் பாப்பிறை அதிகாரத்தைக் குறிக்கும் கழுத்துப் பட்டையை, திருத்தந்தை லியோவே தன் கைகளால் கழற்றி எடுத்தார். ஆகவே, இது நடந்த அதே 964ம் ஆண்டு ஜுலை மாதம் முதல், திருத்தந்தை லியோ அதிகாரப்பூர்வமாக திருத்தந்தையானார். 964ம் ஆண்டு, அதிகாரப்பூர்வ திருத்தந்தையான எட்டாம் லியோ அவர்கள், ஒரு வருட காலத்திற்குள், அதாவது 965ம் ஆண்டு மார்ச் மாதமே காலமானார்.

இப்போது, பதவி நீக்கம் செய்யப்பட திருத்தந்தை  5ம் பெனடிக்ட் குறித்து கொஞ்சம் பார்ப்போம். முந்தைய திருத்தந்தையர்கள் 12ம் யோவானும், எட்டாம் லியோவும் பதவியிறக்கம் செய்யப்பட்டது, மீண்டும் திருப்பீட தலைமையை கைப்பற்றி, பொறுப்பிலிருந்த  திருத்தந்தையை வெளியேற்றியது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டிருந்த பேரரசர் Otto ஒரு காரியம் செய்தார். அதாவது, திருத்தந்தை லியோவை தலைமைப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, திருத்தந்தை பெனடிக்ட்டை தன்னோடு ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். உரோம் நகரில் இருந்தால்தானே, பதவி மோதல்களும், பதவியிறக்கங்களும் இடம்பெறும் என அவர் எண்ணியதே அதற்கு காரணம். அப்போது ஜெர்மனியின் Hamburg-Bremen பேராயராக இருந்த Adaldag வசம் திருத்தந்தை பெனடிக்ட்டை ஒப்படைத்தார் பேரரசர். திருத்தந்தைக்குரிய மரியாதையைக் கொடுத்து 5ம் பெனடிக்ட்டை நடத்தினார் பேராயர். ஜெர்மனியின் பல அருள்பணியாளர்களும் அவரை திருத்தந்தையாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால், இவரின் ஆயுட்காலம் அதிகம் நீடிக்கவில்லை. 965ம் ஆண்டு மார்ச் மாதம் திருத்தந்தை எட்டாம் லியோ காலமான மூன்று மாதங்களுக்குப்பின் திருத்தந்தை பெனடிக்ட்டும் Hamburg நகரில் காலமாகி, அங்குள்ள பேராலயத்தில் முதலில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் இவர் உடல் உரோம் நகருக்கு கொண்டுவரப்பட்டது.

    திருத்தந்தை எட்டாம் லியோவின் மரணத்திற்குப்பின்; உரோம் நகர மக்கள் கேட்ட போதும் திருத்தந்தை பெனடிக்ட்டை  உரோம் நகருக்கு அனுப்பாமல் ஜெர்மனியிலேயே, அவர் சாகும் வரை வைத்திருந்த பேரரசர் Otto, தற்போது தனக்கு வேண்டியவரான Narni நகர் ஆயர் யோவானை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தார். இவர் முன்னாள் அரசியல் ஆதிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே அருள்பணி வாழ்வைத் தேர்ந்து கொண்டவர். அவர் பேரரசால் பாப்பிறைப் பொறுப்பிற்கு முன்னிறுத்தப்பட்டதால், உரோமைய பிரபுக்கள் பலர் இதனை எதிர்த்தனர். 965ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி 13ம் யோவான் என்ற பெயரில் இவர் திருத்தந்தையானார். ஆனால், அதே ஆண்டு டிசம்பர் மாதமே, பிரபக்கள் ஒன்றிணைந்து அவரை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அருகில் உள்ள Castle Sant’Angelo என்ற கட்டடத்தினுள் சிறை வைத்தனர். அங்கிருந்து தப்பிய திருத்தந்தை, Capuaவின் இளவரசர் Pandulfடம் தஞ்சம் புகுந்தார். 966ம் ஆண்டு பேரரசர் Otto உரோமைக்கு வருவதாக கேள்விப்பட்ட உரோமை மக்கள், பேரரசரின் கோபத்திற்கு உள்ளாக வேண்டாம் என எண்ணி, திருத்தந்தை 13ம் யோவான் உரோமுக்குத் திரும்ப அனுமதி அளித்தனர். நவம்பர் 14ல் உரோம் திரும்பினார் திருத்தந்தை. டிசம்பரில் உரோமுக்கு வந்த பேரரசர், திருத்தந்தைக்கு எதிராகச் செயல்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். சிலர் தூக்கிலிடப்பட்டனர், சிலர் நாடு கடத்தப்பட்டனர்.

967ம் ஆண்டு, Otto மன்னரின் 13 வயதான மகன் இரண்டாம் Otto உரோம் நகர் வந்தார். இவர் இணைப் பேரரசராக முடிசூட்டப்பட்டார். பின்னர் திருத்தந்தையே முன்னின்று Byzantine இளவரசி Theophanoவுக்கும் இளவரசர் இரண்டாம் Ottoவுக்கும் திருமணம் பேசி, அதை 972ம் ஆண்டு ஏப்ரல் 14ல் நடத்தியும் கொடுத்தார். இத்திருத்தந்தை பல கோவில்களுக்கும் துறவுமடங்களுக்கும், குறிப்பாக Cluny துறவு சபைக்கும் பல சலுகைகளை வாரி வழங்கினார். திருத்தந்தை 13ம் யோவான், 972ம் ஆண்டு செப்டம்பர் 6ந்தேதி காலமானார். அடுத்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கர்தினால் பெனடிக்ட். ஆனால், பேரரசரின் அங்கீகாரத்தை உடனடியாகப் பெறமுடியாததால் இவர் 973ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி வரை, அதாவது ஏறத்தாழ 4 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவர் திருத்தந்தையானபின், சில பிரபக்களும் திருத்தொண்டர் ஏழாம் போனிபாஸும், அவருக்கு எதிராக கிளம்பி புரட்சி செய்தனர். இவர்கள் தலைமையிலான குழு, திருத்தந்தை ஆறாம் பெனடிக்டை கட்டாயமாக எடுத்துச் சென்று Castle Sant’Angelo கட்டடத்தில் சிறைவைத்தனர். இந்த Castle Sant’Angelo  என்பது, கி.பி.130ம்(135) ஆண்டுகளில் பேரரசர் Adriano, மற்றும் அவரின் குடும்ப அங்கத்தினர்களுக்கான கல்லறைக் கூடமாகக் கட்டப்பட்டது. இன்றும் அது கம்பீரமாக உரோமையில் வத்திக்கான் வானொலித் தலைமையகத்திற்கு எதிர்புறத்தில் உள்ளது. இக்கட்டடத்தில் சிறைவைக்கப்பட்ட திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட், இரண்டே மாதங்களில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். திருத்தந்தை சிறைவைக்கப்பட்டதை கேள்வியுற்ற பேரரசர் இரண்டாம் Otto, உடனே Sicco என்பவரை அனுப்பி, திருத்தந்தையை விடுவிக்க உத்தரவிட்டார். பேரரசரின் பிரதிநிதி வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடனேயே திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட்டை Castle Sant'Angelo கட்டடத்துக்குள்ளேயே கொன்றுவிட்டனர் எதிரிகள். இவ்வாறு 974ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார் திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட்.

 974ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பெனடிக்ட் உயிரிழந்த பின்னர், பேரரசரின் பிரதிநிதி Siccoவினால் ஆதரிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர் திருத்தந்தை 7ம் பெனடிக்ட். இவருக்கு எதிராக, எதிர் திருத்தந்தையாக உருவெடுத்தார் ஏழாம் போனிபாஸ் என்பவர். ஆனால், இவர் விரட்டி அடிக்கப்பட்டார். இருப்பினும் ஏழாம் போனிபாஸின் ஆதரவாளர்கள் திருத்தந்தை 7ம் பெனடிக்ட்க்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தமையால், பேரரசர் இரண்டாம் Ottoவின் படைகள் வந்து திருத்தந்தைக்கு உதவவேண்டியிருந்தது. திருத்தந்தை 7ம் பெனடிக்ட், தன் ஒன்பதாண்டு பணிக்காலத்தில், துறவுமட வாழ்வுக்கு மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்தார். இதைத் தாண்டி அதிகமான விவரங்கள் வரலாற்றில் இவரைப்பற்றி இல்லை.

 983ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தந்தை 7ம் பெனடிக்ட் இறந்தபின் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்பட்டவர் திருத்தந்தை 14ம் யோவான். இவர் பதவியேற்ற சில நாட்களிலேயே இளம் பேரரசர் இரண்டாம் Otto உரோம் நகரில் காலமானார். பேரரசர் இரண்டாம் Ottoவின் மரணம் குறித்துக் கேள்விப்பட்ட எதிர் திருத்தந்தை, அதாவது உண்மையான திருத்தந்தையை எதிர்த்து, தானே திருத்தந்தை என்று அறிவித்திருந்த ஏழாம் போனிபாஸ், கான்ஸ்தாந்திநோபிளிலிருந்து உரோம்நகர் திரும்பினார். அரசு அதிகாரம் காலியாக இருந்த அந்த நேரத்தைப் பயன்படுத்தி திருத்தந்தை 14ம் யோவானை சிறைப்பிடித்தார். மீண்டும் Castle Sant'Angelo இருட்டறைகள் திறக்கப்பட்டன. அங்கே உண்மை திருத்தந்தை 14ம் யோவானை தள்ளிய ஏழாம் போனிபாஸ், தானே திருத்தந்தை என பிரகடனப்படுத்தி, முடிசூட்டிக் கொண்டார். திருஅவை வரலாற்றில் இவர் திருத்தந்தையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனினும், ஆதரவாளர்களின் துணையுடன் இவரின் ஆக்ரமிப்பு தொடர்ந்தது. அதேவேளை, சிறைவைக்கப்பட்ட திருத்தந்தை 14ம் யோவான், 4 மாதங்களில், அதாவது 984ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி காலமானார். இவர் பசிக்கொடுமையால் உயிரிழந்தாரா, அல்லது ஏழாம் போனிபாஸின் கட்டளையின் பேரில் கொல்லப்பட்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஏழாம் போனிபாஸ், தன்னை திருத்தந்தையாக அறிவித்து, தலைமைப் பீடத்தை ஆக்ரமித்தபோது, அவரை எவரும் எதிர்க்க முடியவில்லை. பேரரசரும் மரணமடைந்திருந்த காலம் அது. இருப்பினும், இவரின் தலைமைக்காலம்  அதிகம் நீடிக்கவில்லை. 11 மாதங்கள் அநீதியான முறையில் அப்பதவியைக் கொண்டிருந்து, 985ம் ஆண்டு ஜுலை மாதம் காலமானார். இவரின் மரணத்திற்குபின் 985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பொறுப்பேற்றார் திருத்தந்தை 15ம் யோவான். சில ஏடுகள் இவரை 16ம் யோவான் என்றும் குறிப்பிடுகின்றன. ஏனெனில், எதிர் திருத்தந்தை ஏழாம் போனிபாஸ், முறையாக தேர்ந்தெடுக்கப்படாமல் தலைமைப் பொறுப்பை எடுத்ததால், திருத்தந்தை 14ம் யோவானின் மணத்திற்குப்பின் ஒரு நான்கு மாதங்கள் 15ம் யோவான் என்று ஒருவர், திருத்தந்தையாக இருந்தார் என சில ஏடுகள் கூறுவதற்கு, போதுமான வரலாற்றுச் சான்றுகள் இன்மையால், 985ம் ஆண்டு தலைமைப்பொறுப்புக்கு வந்தவரையே நாம் திருத்தந்தை 15ம் யோவான் என வைத்துக்கொள்வோம். திருத்தந்தை 15ம் யோவானுடன் நம் பயணத்தை அடுத்தவாரம் தொடர்வோம்.

14 July 2021, 14:20