திருத்தந்தை Prešovக்குச் செல்வது, ருத்தேனியன் கத்தோலிக்கருக்கு..
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில், சுலோவாக்கியா நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், அந்நாட்டில் வாழும் ருத்தேனியன் பைசன்டைன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கருக்கு முக்கியம் வாய்ந்ததாக அமையும் என்று, CNA கத்தோலிக்க ஊடகம் கூறியுள்ளது.
சுலோவாக்கியா நாட்டில் வாழும் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ருத்தேனியன் பைசன்டைன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கரில் பெரும்பான்மையினோர் அந்நாட்டின் Prešov நகரில் வாழ்கின்றனர் எனவும், அந்நகருக்கு, திருத்தந்தை செல்வது, அக்கத்தோலிக்கருக்கு முக்கிய ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாய் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், சுலோவாக்கியா, மற்றும், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்ற ருத்தேனியன் பைசன்டின் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர், தாங்கள் திருப்பீடத்தோடு இணைந்ததன் 375ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தனர்.
23 கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளில் ஒன்றான ருத்தேனியன் பைசன்டைன் திருஅவை, ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளாக, ருத்தேனியன் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையாக இருந்துவந்தது. பின்னர் 1646ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி கத்தோலிக்கத் திருஅவையோடு இணைந்தது. Uzhorod நகரின் அரண்மனை ஆலயத்தில் நடைபெற்ற அந்த முக்கிய நிகழ்வில், 63 ருத்தேனியன் அருள்பணியாளர்கள் கையெழுத்திட்டனர்.
ருத்தேனியன் கிறிஸ்தவர்கள் திருப்பீடத்தோடு இணைந்ததன் 350ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1996ம் ஆண்டில், அக்கிறிஸ்தவர்களுக்கு மடல் ஒன்றை எழுதிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்நிகழ்வை நினைத்து தானும் இறைவனுக்கு நன்றி கூறுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
Prešov நகர், 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை ஹங்கேரி முடியாட்சியின்கீழ் இருந்தது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நகருக்குச் செல்லவிருப்பது முக்கிய நிகழ்வாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. (CNA)