மகிழ்வின் மந்திரம் : குடும்பங்கள் வளர திருஅவை நிறுவனங்களின் உதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், அவைகள் வளரவும், பங்குத்தளங்கள், இயக்கங்கள், பள்ளிகள்,மற்றும் ஏனைய திருஅவை நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் உதவ முடியும். தங்கள் பகுதிகளிலேயே வாழும் குடும்பங்களைச் சந்தித்தல், தம்பதியருக்கு சிறு தியானங்களை ஏற்பாடு செய்தல், குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து வல்லுனர்களின் கருத்துப் பரிமாற்றம், வீடுகளுக்குச் சென்று அவர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதித்தல் போன்றவைகள் வழியாக, குடும்பங்கள் எதிர்நோக்கும், போதைப்பழக்கம், குடும்ப வன்முறைகள், திருமண வாழ்வில் நம்பிக்கைத் துரோகம், குழந்தைகளால் வரும் பிரச்சனைகள் போன்றவைகளை அகற்ற உதவமுடியும். குடும்பங்களின் தேவைகள் குறித்து உணர்வுப்பூர்வமாக நெருங்கி உதவவேண்டிய பங்குத்தளங்கள், தேவைப்பட்டால், வல்லுனர்களின் உதவியையும் நாடவேண்டும். அனுபவம்மிக்க தம்பதியரும், இதில் தங்கள் இறைவேண்டல், அர்ப்பணப் பணி, பயிற்சி, அனுபவப் பகிர்வு ஆகியவைகள் வழியாக உதவ முடியும். இத்தகைய முறையில் இளம் தம்பதியர் தாராளமனதுடன் செயல்படவும், தங்கள் விசுவாசத்தைப் பகிரவும், திருமண வாழ்வைப் பலப்படுத்தி வளரவும் உதவ முடியும்.
பல தம்பதியர் தங்கள் திருமணத்திற்குப் பின்னர், கிறிஸ்தவ சமுதாயத்திலிருந்து விலகிச் செல்கின்றனர் என்பதும் உண்மை. பலவேளைகளில், அவர்கள் திரும்பிவரும்போது, கிறிஸ்தவத் திருமண வாழ்வின் முக்கிய கூறுகள் குறித்தும், நம் பங்குத்தளம் அவர்களுக்கு வழங்கவல்ல உதவிகள் குறித்தும் நாம் எடுத்துரைக்க தவறிவிடுவதுண்டு. இத்தம்பதியரின் குழந்தைகளின் திருமுழுக்கு, திருநற்கருணை அருட்சாதனத்தை முதன்முறையாகப் பெறுதல், தங்கள் உறவினர்களின் திருமணம், மற்றும் அடக்கச்சடங்கு போன்ற திருவழிப்பாடுகளில் இந்த தம்பதியர் பெரும்பாலும் கலந்துகொள்வர். அத்தகைய வேளைகளில், அவ்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவேண்டும். குடும்பங்களின் சூழல்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாட, வீடுகளை மந்திரிக்கச் செல்லுதல், அபபகுதியில் அன்னை மரியா திருவுருவச் சிலைகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்று செபித்தல் போன்றவைகளும் உதவலாம். இளம் தம்பதியரின் வீடுகளுக்கு அனுபவம்மிக்க தம்பதியர் சென்று, சந்தித்து வழிகாட்டுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். இன்றையச் சூழல்களில், அனைத்துக் குடும்பங்களும் பங்குத்தளச் சந்திப்புகளில் கலந்துகொள்வது இயலாததுதான், இருப்பினும், நம் பணிகள் ஒரு சிறு குழுக்களுக்கு என்று மட்டும் குறுக்கிக் கொள்ளப்பட முடியாதவை. இந்நாட்களில், குடும்பங்களுக்கான மேய்ப்புப்பணி அக்கறை என்பது, அடிப்படையில் மறைப்பணி சார்ந்ததாக, அவர்கள் இருக்கும் இடங்களை நாடிச்செல்வதாக இருக்கவேண்டும். முதன்மை நிலைக்கு வருபவைகளைத் தவிர, மற்றவற்றை புறக்கணிக்கும் தொழிற்சாலைகள்போல் நாம் செயல்பட முடியாது. (அன்பின் மகிழ்வு 229,230)