தேடுதல்

 பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் 

அரசியல் வாழ்வில் மனசாட்சியோடு பங்குபெறுங்கள்

நாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், இளையோர், நன்கு உருவாக்கப்பட்டுள்ள, அதே வேளையில், தகுந்த முறையில் விவரங்களை அறிந்துள்ள மனசாட்சியின் உதவியைக் கொண்டு, தேர்தலில் பங்கேற்கவேண்டும் - பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாட்டின் அரசியல் வாழ்வில் மனசாட்சியோடு பங்குபெறுங்கள், குறிப்பாக, இன்னும் எட்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பங்கேற்க, இப்போதே உங்கள் பெயர்களை, வாக்காளர்களாக பதிவுசெய்யுங்கள் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர், இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவ்வாண்டு, டிசம்பர் 1ம் தேதி தன் பணியைத் துவங்கவிருக்கும், Caloocan ஆயர் பாப்லோ விர்ஜீலியோ டேவிட் (Pablo Virgilio David) அவர்கள், 18 முதல், 35 வயதுக்குட்பட்ட இளையோர் மீது கவனம் செலுத்தி, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், இளையோர், நன்கு உருவாக்கப்பட்டுள்ள, அதே வேளையில், தகுந்த முறையில் விவரங்களை அறிந்துள்ள மனசாட்சியின் உதவியைக் கொண்டு, தேர்தலில் பங்கேற்கவேண்டும் என்று ஆயர் டேவிட் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், மணிலா உயர் மறைமாவட்டத்தின் உதவி ஆயராகப் பணியாற்றும் ஆயர் Broderick Pabillo அவர்கள், 2022ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களையொட்டி பேசுகையில், மக்கள், இயேசு கிறிஸ்துவின் விழுமியங்களைப் பின்பற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இளையோர் சந்திக்கும் பிரச்சனைகள் பெருமளவு கூடியுள்ளன என்று கூறிய ஆயர் Pabillo அவர்கள், இளையோரின் கல்வி, வேலை வாய்ப்பு, பாதுகாப்பான, அமைதியான சமுதாயம் ஆகியவற்றை உறுதிசெய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய சமுதாயத்திற்குத் தேவையானத் தலைவர்கள், மக்கள்மீது அக்கறை கொண்ட, பரிவுள்ள தலைவர்களே தவிர, எந்நேரமும், மக்களை வேட்டையாடும் தலைவர்கள் அல்ல என்பதை, ஆயர் Pabillo அவர்கள், வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல்கள், பொதுவாக, மே மாதத்தின் இரண்டாம் திங்களன்று நடைபெறும் என்றும், வருகிற ஆண்டு மே 9ம் தேதி தேர்தல்கள் நடைபெறும் என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது.(Fides)

22 July 2021, 14:30