தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பு, வறியோருக்கென உருவாக்கியுள்ள வீடுகள்  பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பு, வறியோருக்கென உருவாக்கியுள்ள வீடுகள்  

பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தேவை

பிலிப்பீன்ஸ் நாட்டில் பொதுத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அடுத்துவரும் சில மாதங்களில், இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தற்போதையை அரசுத்தலைவர் ரொத்ரிகோ துத்தெர்த்தே அவர்கள் ஈடுபடவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2022ம் ஆண்டு மே மாதத்தில், பிலிப்பீன்ஸ் நாட்டில் பொதுத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அடுத்துவரும் சில மாதங்களில், இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தற்போதையை அரசுத்தலைவர் ரொத்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் ஈடுபடவேண்டுமென அந்நாட்டு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரசுத்தலைவர் துத்தெர்த்தே அவர்கள் அண்மையில் வழங்கிய தொலைக்காட்சி உரையில், போதைப்பொருளுக்கு எதிரான போரில் தான் அடைந்த வெற்றிகளைக் குறித்து உரையாற்றியதை சுட்டிக்காட்டி பேசிய, பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் ஆயர் Jose Colin Bagaforo அவர்கள், இந்தப் போரினால் தங்கள் நாடு அடைந்திருக்கும் துயரங்களைத் துடைக்க அரசுத்தலைவர் இனி வரும் மாதங்களிலாவது முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாடு, கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக பல்வேறு சரிவுகளைச் சந்தித்துள்ள இவ்வேளையில், இந்நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, முன்னேற்றப் பாதையில் இந்நாட்டை நடத்திச் செல்வது, அரசுத்தலைவரின் மிக முக்கிய பணியாக இருக்கவேண்டும் என்று, ஆயர் Bagaforo அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற துத்தெர்த்தே அவர்கள், போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரிலும், நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரிலும், தன கருத்துக்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களை, மிக வன்மையான முறையில் அடக்கியதை மக்கள் மறக்கவில்லை என்று, பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் செயலர் அருள்பணி Antonio Labiao அவர்கள் கூறினார்.

இனிவரும் 9 மாதங்களில், பிலிப்பீன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு காயங்களை குணமாக்குவதும், மக்களை ஒன்றிணைப்பதும், அரசுத்தலைவருக்கும், தற்போதைய அரசுக்கும் முன் இருக்கும் முக்கிய பணி என்று, அருள்பணி Labiao அவர்கள் எடுத்துரைத்தார்.

29 July 2021, 14:30