தேடுதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சந்தை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சந்தை  (AFP or licensors)

உடன்பிறப்புப் போராட்டம் நரகத்தின் வாயில்களைத் திறந்துவிடும்

ஈராக் முழுமையாக மீள்கட்டமைக்கப்படுவதற்கு நாம் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும், அல்லது, நம் போராட்டங்களை நிரந்தரமாக்கி, நரகத்தின் வாயில்களைத் திறக்கவேண்டும் - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உடன்பிறப்புக்களுக்கு இடையே இடம்பெறும் கலவரங்கள், நரகத்தின் வாயில்களைத் திறந்துவிடும் என்று, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஜூலை 20, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட பக்ரீத் விழாவுக்கென, முஸ்லிம் உடன்பிறப்புக்களுக்கு, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், இவ்விழாவுக்கு முந்திய நாள் மாலையில், பாக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

அன்பு முஸ்லிம் சகோதரர்களே, நமக்கு இரு வழிமுறைகளே உள்ளன என்று கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் நாடு முழுமையாக மீள்கட்டமைக்கப்படுவதற்கு நாம் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும், அல்லது, நம் போராட்டங்களை நிரந்தரமாக்கி, நரகத்தின் வாயில்களைத் திறக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும், நலவாழ்வு ஆகியவற்றில் தற்போது நிலவும் கடினமான நிலைகள், தனிநபர்கள் மற்றும், சமுதாயத்தில் நிலையற்றதன்மையை உருவாக்கியுள்ளன, இத்தகைய சூழலில், ஈராக் நாடு, ஊழல் மற்றும், போரில் பிணையல் கைதியாக ஆக்கப்படாமல் இருப்பதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் முக்கியம் என்று, கர்தினாலின் செய்தி கூறுகிறது.

நன்மை செய்பவர்களும், தீமை செய்பவர்களும் அதனதன் பலனை அனுபவிப்பார்கள் என்று, இஸ்லாமிய வேதநூல் சொல்வதைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள்,  இவற்றில் எதைத் தேர்ந்துகொள்வது என்பதை முடிவுசெய்யவேண்டியது அவரவர் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 19, இத்திங்கள் மாலையில் பாக்தாத்தின், Sadr புறநகரில், மக்கள் நெருக்கடி மிகுந்த புகழ்பெற்ற சந்தையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில், குறைந்தது 35 பேர் இறந்துள்ளனர், மற்றும், 60க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இவ்வாண்டு துவக்கத்திலிருந்து, இந்நகரின் இச்சந்தைப் பகுதியில், இதுவரை மூன்று குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. (Fides)

20 July 2021, 15:15