தேடுதல்

Vatican News
மெக்சிகோ எல்லையில் புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ எல்லையில் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மாண்போடு நடத்தப்பட...

மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சகம், உலகளாவிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை மதிக்கவேண்டும், மற்றும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆற்றும் சேவைக்குத் தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கக்கூடாது - JRS அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டில் புகலிடம் தேடும் புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் மதிக்கப்படவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவும் வேண்டும் என்று, JRS எனப்படும், உலகளாவிய இயேசு சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு, மெக்சிகோ அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

மெக்சிகோவில், புலம்பெயர்ந்தோர், காவல்துறையால் சூறையாடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளவேளை, அந்நாட்டில், புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோர் நடத்தப்படும் முறைகள்பற்றி புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், JRS அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அடக்குமுறைக்கு கண்டனம்

JRS அமைப்பும், மெக்சிகோவின் Juan Gerardi de Torreón என்ற மனித உரிமைகள் அமைப்பும் இணைந்து, மெக்சிகோ அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள விண்ணப்ப மனுவில், துன்புறுத்தப்படல், குற்றவாளிகளாகத் தீர்ப்பிடப்படல், மற்றும், தடுப்புக்காவல் ஆகிய புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக, கடுமையான கணடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உண்மையில், புலம்பெயர்ந்தோர் விடயத்தில், அரசும், நகராட்சி பாதுகாப்புத் துறையினரும் தலையிடக்கூடாது, ஏனெனில் அவர்களின் தலையீடு, சட்டத்துக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்புகள், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உலகளாவிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும், அந்நாட்டில், மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது, மனித உரிமைப் பணியாளர்கள் ஆற்றும் சேவைகளுக்குத் தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கக் கூடாது  என்று கூறியுள்ள அந்த அமைப்புகள், இம்மாதம் 22ம் தேதி மாலையில், 12 புலம்பெயர்ந்தோர் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டது குறித்து எடுத்துரைத்துள்ளன.

தங்களின் பணம், மற்றும், பொருள்களைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தில், காவல்துறையினர் நான்கு பேர், 22ம் தேதி மாலையில், புலம்பெயர்ந்தோர் மையத்திலிருந்து 12 பேரைப் பிடித்து தாக்கியுள்ளனர். அங்கு இடம்பெறும் வன்முறைகளைப் பதிவுசெய்திருந்த அவர்களின் கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அந்நடவடிக்கையில் தலையிடவந்த மனிதாபிமான தன்னார்வலர்களையும், கொடூரமாய்த் தடுத்துள்ளனர்.

28 July 2021, 13:50