தேடுதல்

கோவிட்-19ஆல் கப்பல் தொழிலாளர்கள் அதிகம் பாதிப்பு

கப்பல் பணியாளர்கள் இன்றி, ஒவ்வொருநாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை நம்மால் பெறஇயலாது – ஸ்கலாபிரினி சபையின் அருள்பணி Prigol

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளால் கப்பலில் பணியாற்றுவோர் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளவேளை, பல நேரங்களில், வர்த்தகம் தடைபட்டிருப்பதால், இவர்கள், கப்பல்களிலேயே நீண்டகாலம் தங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பிலிப்பீன்சில், கப்பல் தொழிலாளர்களுக்கென, மறைப்பணியாற்றும், ஸ்கலாபிரினி துறவு சபையின் அருள்பணி Paulo Prigol அவர்கள், ஜூலை 11, இஞ்ஞாயிறன்று, கடல் ஞாயிறு சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு ஆசியச் செய்திகளிடம் பேசியபோது, பிலிப்பீன்சின் மனிலா துறைமுகத்தில் அத்தொழிலாளர்களின் நிலைமையை விளக்கியுள்ளார்.

உலகில் கப்பல்களில் பணியாற்றுவோரில், 27 விழுக்காட்டினர் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்றுரைத்த அருள்பணி Prigol அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, கடல் வர்த்தகத்தை மந்தமாக்கியுள்ளது, இதற்கு, ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் பணியாளர்கள் பலியாகியுள்ளனர் என்று கூறினார்.

பெருந்தொற்று பரவலுக்குமுன்னர், எங்களது மையங்களுக்கு, ஒரு நாளைக்கு 300 பேர் வந்துசென்றனர், ஆனால் தற்போது, அவ்வெண்ணிக்கை, நூறு ஆகக் குறைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும், இரண்டு அல்லது மூன்று பேரே கப்பலைவிட்டு வெளியேறினர் எனவும், அருள்பணி Prigol அவர்கள் கூறியுள்ளார்.

உலகெங்கும் கப்பலில் பணியாற்றும் குழுக்கள் மாறுவதில்லை என்பதையே இந்நிலை வெளிப்படுத்துகின்றது என்றும், பெருந்தொற்றுக்குமுன்னர் அதிகபட்சம் 9 மாதங்கள் அல்லது, அதைவிட கொஞ்சம் அதிக நாள்கள் என்ற ஒப்பந்தத்தில் இவர்கள் பணியாற்றினர், ஆனால், தற்போது அந்த ஒப்பந்தம் 18 முதல் 20 மாதங்கள் வரை நீடிக்கப்படுகின்றது என்றும், அருள்பணி Prigol அவர்கள் கூறியுள்ளார்.  

உலகளவில் இடம்பெறும் வர்த்தகத்தில், ஏறத்தாழ 90 விழுக்காடு கப்பல்கள் வழியாக நடைபெறுகின்றன எனவும், ஏறத்தாழ ஐம்பதாயிரம் கப்பல்கள், இடைவிடாமல் போக்குவரத்தில் உள்ளன, ஆனால் தற்போது இந்த கப்பல் பணியாளர்கள், பெருந்தொற்று கிருமியை பரப்புபவர்களாக நோக்கப்படுகின்றனர் என்று, அருள்பணி Prigol அவர்கள் கூறியுள்ளார்.

கப்பல் பணியாளர்கள் இன்றி, ஒவ்வொருநாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை நம்மால் பெறஇயலாது என்றுரைத்துள்ள, அருள்பணி Prigol அவர்கள், திருஅவையில் கடல் ஞாயிறு சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், கப்பல் பணியாளர்கள் மற்றும், மீனவர்களுக்கு. மறைப்பணியாளர்கள் நன்றிசொல்லும் காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அருள்பணி Paulo Prigol அவர்கள், கடந்த 11 ஆண்டுகளாக,  மனிலா துறைமுகத்தில், ஆன்மீக அருள்பணியாளராகவும், கப்பல் தொழிலாளர்களுக்கு, திருஅவையின் மேய்ப்புப்பணி அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவர், மனிலாவில் மூன்று ‘ஸ்டெல்லா மாரிஸ்’ மையங்களை நடத்துகிறார். இதன் வழியாக, கப்பல் பணியாளர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான பொருளாதார, மற்றும், ஆன்மீக உதவிகளை ஆற்றிவருகிறார். (AsiaNews)

10 July 2021, 15:43