தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமியின் சாமபல் அடங்கிய கலத்திற்கு மரியாதை அருள்பணி ஸ்டான் சுவாமியின் சாமபல் அடங்கிய கலத்திற்கு மரியாதை 

இந்திய இயேசு சபையினர் முன்னெடுக்கும் 'தேசிய நீதி நாள்'

ஜூலை 28 மாலை, 6 மணி முதல், 6.45 முடிய, இந்தியாவின் பல்வேறு ஆலயங்கள், துறவியர் இல்லங்கள், நிறுவனங்கள் அனைத்தின் முன்னிலையில், மக்கள், நீதிகோரும் வாசங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி நிற்பர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் மனித உரிமைகளையும், நீதியையும் நிலைநாட்ட உழைத்துவரும் பல்வேறு அமைப்புக்களுடனும், நல்மனம் கொண்டோருடனும் இணைந்து, இந்திய இயேசு சபை துறவியர், 'தேசிய நீதி நாள்' என்ற பெயரில், ஜூலை 28, வருகிற புதனன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக, இந்திய இயேசு சபை தலைவர், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் டி'சூசா அவர்கள், மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 28 மாலை, இந்திய நேரம், 6 மணி முதல், 6.45 முடிய, இந்தியாவின் பல்வேறு ஆலயங்கள், துறவியர் இல்லங்கள், நிறுவனங்கள் அனைத்தின் முன்னிலையில், கோவிட் பெருந்தொற்று விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மக்கள், நீதிகோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி நிற்கவிருப்பதாக இம்மடலில் கூறப்பட்டுள்ளது.

தமிழக இயேசுசபையினரின் இறுதி மரியாதை

இதற்கிடையே, நடுவண் அரசின் கடுமையான நடவடிக்கைகளால், ஜூலை 5ம் தேதி மும்பையில் உயிரிழந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய கலங்கள், தமிழகத்தில் பணியாற்றும் இயேசு சபையினரின் நிறுவனங்கள் மற்றும் பங்குத்தளங்கள் அனைத்திலும், மக்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வரின் வணக்கம்

ஜூலை 18, இஞ்ஞாயிறன்று, சென்னை லொயோலா கல்லூரியின் மையத்தில் உள்ள ஆலயத்தில் அருள்பணி ஸ்டான் அவர்களின் சாம்பல் கலம் வைக்கப்பட்டிருந்த வேளையில், தமிழக முதல்வர், திருவாளர் ஸ்டாலின் உட்பட, பலர், இந்த அருள்பணியாளருக்கு தங்கள் வணக்கத்தை செலுத்தினர்.

சென்னையைத் தொடர்ந்து, இக்கலம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி-கடலூர், வேலூர், தருமபுரி, சேலம், ஊட்டி, கோவை ஆகிய மறைமாவட்டங்களில் உள்ள இயேசு சபையினரின் நிறுவனங்களில் ஜூலை 27ம் தேதி வரை கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கிடையே, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய மற்றொரு கலம், ஜூலை 22ம் தேதி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் தன் பயணத்தைக் துவக்கியது.

ஆகஸ்ட் 3 – திருச்சியில் நடைபெறும் கூட்டம்

இது, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மறைமாவட்டங்களில் பணியாற்றும் இயேசு சபையினரின் நிறுவனங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முடிய கொண்டு செல்லப்படும்.

இறுதியில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பயின்ற திருச்சி தூய யோசேப்பு கல்வி நிறுவனங்களுக்கு, ஆகஸ்ட் 3ம் தேதி, அவரது சாம்பல் அடங்கிய கலம் கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு, நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில், தலத்திருஅவை அதிகாரிகளும், பொதுத்துறை, மற்றும், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்வர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

21 July 2021, 13:43