தேடுதல்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி 

மறைந்த ஸ்டான் சுவாமி பணிகளுக்கு நீதிபதிகள் புகழாரம்

அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு மருத்துவ பிணையல் கேட்டு, தொடர்ந்து மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட சமயங்களில், எங்களால் ஏன் தீர்ப்புக் கூற இயலாமல் போனது என்பதுபற்றி, எங்களால் இப்போது எதுவும் கூறமுடியாது – மும்பை நீதிபதிகள்

மேரி தெரேசா வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 5ம் தேதி, மும்பையில் தடுப்புக்காவலில் இறைவனடி சேர்ந்த, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை, மும்பை உயர் நீதிமன்றம், அதிகம் பாராட்டியுள்ளதோடு, அப்பணிகளுக்கு, தனது மிகப்பெரும் மரியாதையையும் செலுத்தியுள்ளது.

கடுமையான நோய்களால் தாக்கப்பட்டிருந்த 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு பிணையல் வழங்கப்படவேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனுவை, அவரது மறைவுக்குப்பின், ஜூலை 19, இத்திங்களன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், S.S.Shinde, N.J.Jamadar ஆகிய இருவரும், அருள்பணி ஸ்டான் அவர்களது பணிகளுக்குப் புகழாரம் சூட்டினர்.

அருள்பணி ஸ்டான், மிக உன்னதமான மனிதர்

அவ்விசாரணயின்போது பேசிய நீதிபதி ஷிண்டே அவர்கள், பொதுவாக, அடக்கச்சடங்குகளைப் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் இருப்பதில்லை, ஆனால், அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு ஆற்றப்பட்ட இறுதிமரியாதை நிகழ்வை, வலைக்காட்சி வழியாக நேரடியாகப் பார்த்தேன், அது மிகவும் அருள்நிறைந்ததாக இருந்தது என்று கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள், மிக உன்னதமான மனிதர், அவர் அவ்வளவு சிறந்த சேவையை சமுதாயத்திற்கு ஆற்றியுள்ளார், சட்டமுறைப்படி அவருக்கு எதிராக என்ன கூறப்பட்டிருந்தாலும், அவர் ஆற்றியுள்ள பணிக்கு நாங்கள் மிகுந்த மரியாதை செலுத்துகிறோம் என்று, ஷிண்டே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் Mihir Desai அவர்களிடம், கூறியுள்ள நீதிபதிகள், மருத்துவச் சிகிச்சையின்பேரில் பிணையல் கேட்டு, கடந்த மே மாதம் 28ம் தேதி நீதிமன்றத்தை அணுகினீர்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் உங்களது மன்றாட்டுக்கு நாங்கள் இணங்கவில்லை, ஆனால் அச்சமயத்தில், எங்களது மனங்களில் இழையோடியது என்ன, எங்களால் ஏன் தீர்ப்புக் கூற இயலாமல் போனது என்பதுபற்றி, எங்களால் இப்போது எதுவும் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அவரது மரணம் எங்களை பேச்சிழக்கச் செய்துவிட்டது

அருள்பணி ஸ்டான் அவர்கள், தடுப்புக்காவலில் இறப்பார் என்பதை நீதிமன்றம் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை, வெளியுலகுக்கு நாங்கள் பேச்சற்று நிற்கிறோம், இந்த விவகாரத்தில் இந்த நீதிமன்றத்தின்மீது உங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது என நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள், நீங்கள் மட்டுமே எங்களது நிலைமையை விளக்கிச்சொல்ல முடியும் எனவும், நீதிபதிகள், வழக்கறிஞர் தேசாய் அவர்களிடம் கூறியுள்ளனர்.

மேலும், நோயுற்ற உடல்நிலையை காரணம்காட்டி, தொடர்ந்து விண்ணப்பிக்கப்பட்ட பிணையல் மனு, தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதற்கு, இந்தியாவின் நீதித்துறை அமைப்பு, அருள்பணி ஸ்டான் அவர்களை கைதுசெய்த தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆகியவற்றையும் மும்பை நீதிபதிகள் குறைகூறியுள்ளனர்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் வழக்கைக் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துவந்த இயேசு சபை அருள்பணியாளர் சந்தானம் அவர்கள், மும்பை நீதிபதிகள், அருள்பணி ஸ்டான் அவர்களைக் குறித்து கூறியுள்ள உயர்வான கருத்துக்களுக்கு தன் நன்றியை தெரிவித்தார்.

அவரது மரணம் கொண்டுவந்துள்ள ஒரு விரும்பத்தக்க மாற்றம்

அத்துடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரின் நீண்ட சிறைவாசத்தை தாங்கள் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்பதை, மும்பை நீதிபதிகள் வெளியிட்டிருப்பது, அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணம் கொண்டுவந்துள்ள ஒரு விரும்பத்தக்க மாற்றம் என்று, அருள்பணி சந்தானம் அவர்கள் யூக்கா (UCAN) செய்தியிடம் கூறினார்.

84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் அவர்களது மருத்துவப் பிணையல் மனு இறுதியாக விசாரணைக்கு வரவேண்டிய இம்மாதம் 5ம் தேதி (ஜூலை 5, 2021), மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் உயிர்துறந்தார்.

தமிழகத்தில் பிறந்த, அருள்பணி ஸ்டான் அவர்கள், அடிப்படை வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு, சட்டமுறைப்படியான உரிமைகளை இழந்து வாழ்ந்த பழங்குடி இன மக்கள், தலித்துக்கள் போன்றோரின் உரிமைகளை மீட்டெடுப்பற்கு, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தவர்.  

பார்க்கின்சன்ஸ் எனப்படும் உடல் நடுக்கம் நோயால் தாக்கப்பட்டிருந்த 84 வயது  நிரம்பிய அருள்பணி ஸ்டான் அவர்கள், மும்பை டலோஜா சிறையில், அதிகாரிகளால், மனிதமற்ற முறையில் நடத்தப்பட்டார். இறுதியில் அவர் சிறையில் கோவிட்-19 பெருந்தொற்றாலும் தாக்கப்பட்டார். (UCAN)

21 July 2021, 13:29