தேடுதல்

வறியோருக்கு உணவு வழங்கும் பணியில் ஆயர் தியோடோர் மாஸ்கரீனஸ் வறியோருக்கு உணவு வழங்கும் பணியில் ஆயர் தியோடோர் மாஸ்கரீனஸ்  

மதமாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது பொய்யான செய்தி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டவரிடையே பணிபுரிந்து வரும் கத்தோலிக்க திருஅவையின் பெயரைக் கெடுக்கும் வண்ணம், ஒரு சிலர், ஊடகங்களின் துணையுடன் நடத்தும் பொய்யான செய்திப்பரப்பு முயற்சி இது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கிவரும் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் மதமாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன என்று, அப்பகுதியில் வெளியாகும் செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள கூற்றுகள், பொய்யானவை என்று, இம்மாநிலத்தில் பணியாற்றும் இரு ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், மிகவும் தாழ்த்தப்பட்டவரிடையே பணிபுரிந்து வரும் கத்தோலிக்க திருஅவையின் பெயரைக் கெடுக்கும் வண்ணம், ஒரு சிலர், ஊடகங்களின் துணையுடன் நடத்தும் பொய்யான செய்திப்பரப்பு முயற்சி இது என்று இராஞ்சி உயர் மறைமாவட்ட துணை ஆயர், தியோடோர் மாஸ்கரீனஸ் அவர்கள், UCAசெய்தியிடம் கூறினார்.

Khunti மறைமாவட்டத்தில் அமைந்துள்ள Sarangloya கிராமத்து பள்ளியைக் குறித்து, இத்தகைய தவறான செய்தி வெளியானதும், Khunti மறைமாவட்டத்தின் ஆயர் பினய் கந்துல்னா (Binay Kandulna) அவர்களும், ஆயர் மாஸ்கரீனஸ் அவர்களும், இந்த கிராமத்திற்கு சென்று, நேரில் விசாரித்து, தகவல்களை சேகரித்ததாக, ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், மிகவும் பின்தங்கிய மக்களின் நடுவே பணியாற்ற 1936ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனித யோசேப்பு பள்ளி, கத்தோலிக்க மறைப்பணித் தளங்களின் பொறுப்பில் பல ஆண்டுகளாக கல்விப்பணியை மட்டுமே செய்து வந்துள்ளது என்று UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.

கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளை விரும்பாத ஒரு சிலர், மதமாற்றம் என்ற பொய்யான குற்றங்களைச் சுமத்தி திருஅவைக்கு தொடர்ந்து இன்னல்களை விளைவித்து வருகின்றனர் என்றும், குறிப்பாக, 2017ம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலம் மதமாற்றத் தடைச்சட்டத்தை அமல் படுத்தியது முதல், இந்த துன்பங்கள் கூடியுள்ளன என்றும் கூறப்படுகிறது. (UCAN)

29 July 2021, 14:23