தேடுதல்

பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் துறந்த அருள்பணி ஸ்டான் சுவாமி பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் துறந்த அருள்பணி ஸ்டான் சுவாமி 

மருத்துவமனையில் உயிரிழந்த அருள்பணி ஸ்டான் சுவாமி

இராஞ்சியில் பூர்வீகக் குடிமக்களிடையே பணியாற்றியபோது, பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இறைபதம் சேர்ந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மும்பை உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில், மே மாதம் 28ம் தேதி முதல் மும்பையின் திருக்குடும்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜூலை 5ம் தேதி, திங்கள்கிழமையன்று, இந்திய நேரம் பிற்பகல் 1 மணி 24 நிமிடங்களுக்கு இறைபதம் சேர்ந்தார்.

பழங்குடியினர், தலித் மக்கள், மற்றும் வாழ்வின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், வாழ்வு மேம்பாட்டிற்காகவும் உழைத்துவந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இராஞ்சியில் பூர்வீகக் குடிமக்களிடையே பணியாற்றிவந்தபோது, NIA எனும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 9ம் தேதி முதல் மும்பை டலோஜா சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கடினமான சட்ட போராட்டங்களுக்குப்பின் மே மாதம் 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

84 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி சனிக்கிழமை இரவு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மே மாதம் 28ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மருத்துமனையில் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதியளித்த மும்பை உயர்நீதிமன்றம், அருள்பணியாளரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாததைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை வழங்க ஜூலை 5ம் தேதி வரை கால நீட்டிப்பை வழங்கியது, அந்த கால நீட்டிப்பின் இறுதி நாளில் இறைபதம் சேர்ந்தார், சமூக நடவடிக்கையாளர், அருள்பணி ஸ்டான் சுவாமி.

பார்க்கின்சன் என்ற நரம்புத்தளர்ச்சி நோயாலும், செவித்திறன் குறைவாலும், வயது தொடர்புடைய ஏனைய நலப்பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது, மே 29ம் தேதி தெரியவந்தது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் அடக்கச் சடங்கு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இந்திய இயேசு சபை தலைவர், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் டி சூசா அவர்கள் அறிவித்துள்ளார்.

அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் வாழ்க்கை குறிப்பு

இந்திய நடுவண் அரசின் வெறித்தனமான பழிவாங்கும் முயற்சியின் விளைவாக, 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், ஜூலை 5, இத்திங்களன்று இறைவனடி சேர்ந்தார்.

1937ம் ஆண்டு, ஏப்ரல் 26ம் தேதி, தமிழ்நாட்டின் திருச்சிமாவட்டத்தில், விரகாலூர் என்ற ஊரில் பிறந்த ஸ்டான் அவர்கள், தன் 20வது வயதில் இயேசு சபையில் இணைந்து, 1970ம் ஆண்டு, தன் 33வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

கடந்த 51 ஆண்டுகளாக அவர் ஆற்றிவந்த பணிகள் அனைத்தும் சமுதாய அக்கறை கொண்ட பணிகளாகவே இருந்தன. 1971ம் ஆண்டு ஜாம்ஷெட்பூர் மற்றும் சாய்பாசா பகுதிகளில் சமுதாயப் பணிகளைத் துவக்கிய அருள்பணி ஸ்டான் அவர்கள், 1975ம் ஆண்டு முதல், 1991ம் ஆண்டு முடிய, பெங்களூரு இந்திய சமுதாய நிறுவனத்தில் பணியாற்றினார். 1993ம் ஆண்டு முதல் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றிவந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், 2002ம் ஆண்டு, இராஞ்சி நகரில் Bagaicha என்ற மையத்தை உருவாக்கி, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியினரின் உரிமைகளுக்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், பயிற்சிப் பாசறைகள், சட்ட வழி போராட்டங்களை மேற்கொண்டார்.

பழங்குடியினரின் நிலங்களை, இந்திய நடுவண் அரசு, செல்வம் மிகுந்த சுறாமீன்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து வந்ததை எதிர்த்து, பழங்குடியின இளையோரை ஒருங்கிணைத்து, அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வந்தார் அருள்பணி ஸ்டான். மாநில அரசு, இவ்விளையோரை எவ்வித ஆதாரமும் இன்றி, சிறைகளில் அடைத்தததை எதிர்த்து, பொதுநல வழக்குகளை அருள்பணி ஸ்டான் அவர்கள் தொடுத்தார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் நீதி வழி போராட்டங்களை நிறுத்த இயலாத நடுவண் அரசு, அவரை, 2018ம் ஆண்டு சனவரி மாதம், புனேயில் நிகழ்ந்த பீமா கோரேகான் வன்முறை நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, அவருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதென்ற பொய் வழக்கைப் புனைந்து, 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி மும்பையின் டலோஜா சிறையில் அடைத்தது. எவ்வித ஆதாரமும் இன்றி, இந்திய தேசிய புலனாய்வுத் துறை இவர் மீது சுமத்திய குற்றங்களை நிரூபிக்க இயலாத போதும், இவருக்கு பிணையலில் விடுதலை அளிக்க மறுத்தது.

பார்க்கின்சன்ஸ் எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோய், இதயம் தொடாபான குறைபாடுகள், செவித்திறன் குறைவு என்ற பல்வேறு குறைபாடுகளுடன் போராடிவந்த 84 வயதான அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், குடிப்பதற்கு உறுஞ்சுக்குழல் பொருத்தப்பட்ட ஒரு கிண்ணம், குளிரிலிருந்து காத்துக்கொள்ளத தேவையான உடைகள் ஆகியவற்றை கேட்டபோது, அவற்றை முதலில் மறுத்தனர், சிறை அதிகாரிகள். பல மாதங்கள் சென்றே, இந்த உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டன.

அருள்பணி ஸ்டான் அவர்களின் உடல்நலம் வெகுவாக தளர்ந்திருந்ததை கவனத்தில் கொண்டு, மும்பை உயர்நீதி மன்றம், அவர், மும்பையின் திருக்குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உத்தரவு வழங்கியது. மே 29ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் இருந்ததென கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஜூலை 3, இச்சனிக்கிழமை முதல் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி, ஜூலை 5, இத்திங்களன்று காலை அவர் இறைவனடி சேர்ந்தார்.

05 July 2021, 14:51