தேடுதல்

நினிவே கிறிஸ்தவ கோவில்களுக்கு பாதுகாப்பு நினிவே கிறிஸ்தவ கோவில்களுக்கு பாதுகாப்பு  

ஈராக் கிறிஸ்தவர்களுக்கு மேலும் பாதுகாப்பு தேவை

பேராயர் Warda : ஈராக் நாட்டில், கிறிஸ்தவத்தை அழிக்கும் முயற்சிகள் இனிமேல் எப்போதும் இடம்பெறக்கூடாது என்பதை மனதில் கொண்டு, ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில், கிறிஸ்தவர்களை அழிப்பதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு ஆற்றப்பட்டுவரும் உதவிகள் குறித்து நன்றியை வெளியிடும் அதேவேளை, இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாமலிருக்க மேலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார், ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Bashar Warda.

Knights of Columbus, ACN என்ற கத்தோலிக்க உதவி அமைப்பு, அமெரிக்க ஆயர்கள் பேரவை, என பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்களின் உதவியுடன், அண்மை ஆண்டுகளில் வட ஈராக்கின் மக்கள், தங்களை கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்று கூறிய பேராயர் Warda அவர்கள், ஏர்பில் உயர்மறைமாவட்டம் வழியாக மட்டுமே, 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளதாகத் தெரிவித்தார்.

2014ம் ஆண்டில் ISIS தீவிரவாதிகள் வட ஈராக்கின் மோசூல் நகரையும், நினிவே சமவெளியையும் ஆக்ரமித்ததிலிருந்து, அங்கிருந்து வெளியேறிய 13,000 குடும்பங்களுக்கும் உதவிசெய்த தலத்திருஅவை, 9,000 குடும்பங்கள், 2016ல் நினிவே சமவெளிக்கு திரும்பிவந்தும், 2,600 குடும்பங்கள் ஏர்பில் நகரிலேயே தங்கியும், ஏனையோர் நாட்டைவிட்டே வெளியேறியுள்ள நிலையிலும், அவர்களிடையே உதவிப்பணிகளைத்  தொடர்ந்து ஆற்றிவருகின்றது.

ஈராக் நாட்டில், கிறிஸ்தவத்தை அழிக்கும் முயற்சிகள் இனிமேல் எப்போதும் இடம்பெறக்கூடாது என்பதை மனதில் கொண்டு, ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், பேராயர் Warda.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் இடம்பெற்ற அனைத்துலக மத விடுதலை கருத்தரங்கில் உரையாற்றியது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பேராயர் Warda அவர்கள்,  ஈராக்கிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு உணவு, உறைவிடம், மருந்து என அடிப்படை உதவிகளை வழங்கிவரும் அதேவேளை, வேலை வாய்ப்புக்களையும், கல்வித் திட்டங்களையும் உருவாக்கி நாட்டின் நிலையானதன்மைக்கு வழிவகுத்து வருவதாகவும் எடுத்துரைத்தார்.

தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறி தற்போது திரும்பி வந்துள்ள மக்கள், அங்கேயே தொடர்ந்து இருக்கவேண்டுமானால், அவர்களின் மாண்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், கல்தேய வழிபாட்டுமுறை பேராயர்.

ஈராக் கிறிஸ்தவர்கள், உலக சமுதாயத்தால் மறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யப்பட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், பேராயர் Warda.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2021, 15:05