நேர்காணல்: சமூகப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி - பகுதி 2
மேரி தெரேசா: வத்திக்கான்
இம்மாதம் 5ம் தேதி, இறைபதம் சேர்ந்த, மனித உரிமைப் போராளியான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய தேசிய புலனாய்வு முகமையால், அநீதியாகக் குற்றம் சாட்டப்பட்டு மும்பை டலோஜா சிறையில், மனிதப்பண்பற்ற முறையில் நடத்தப்பட்டார் என்பது உலகறிந்த உண்மை. அவரது இறப்பு, இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிள்ளது. இவரது இறப்பு ஒரு நிறுவனக் கொலை என்று பலரும், இந்திய நடுவண் அரசை சாடி வருகின்றனர். இவ்வேளையில், ஸ்டான் சுவாமி அவர்கள் பற்றிய தன் எண்ணங்களை, கடந்தவார நேர்காணல் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், ஸ்டான் அவர்களை, மக்கள் வேதசாட்சியாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்று கூறினார். அதைத் தொடர்ந்து, ஸ்டான் அவர்களது இறப்பு எண்ணற்ற சமூகப் போராளிகளை, குறிப்பாக, இளையோர் போராளிகளை உருவாக்கியுள்ளது என நாம் சொல்லலாம் அல்லவா என்று, அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்களிடம் கேட்டோம். இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், பிறர்க்கெனவே வாழ்ந்த அருள்பணி ஸ்டான் சுவாமி என்ற சிறைப் பறவையோடு ஏறத்தாழ 32 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியிருப்பவர். கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த இவர், உரோம் உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், சமுதாய நீதி, மற்றும், சுற்றுச்சூழல் நீதி செயலகத்தின் இயக்குனராகப் பணியாற்றிவருகிறார்.