தேடுதல்

இந்தியாவில் பெருந்தொற்று தடுப்பூசி வழங்கப்படுகிறது இந்தியாவில் பெருந்தொற்று தடுப்பூசி வழங்கப்படுகிறது 

இந்தியாவில் கோவிட்-19 ஒழிப்புத் திட்டங்களுக்கு உதவி

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அருள்பணியாளர்கள், மற்றும், துறவியரின் மருத்துவ சிகிச்சைக்கும், இந்நோயால் துன்புறும் மக்களுக்குப் பணியாற்றுகையில் அதனால் தாக்கப்பட்ட மற்ற திருஅவை பணியாளர்களுக்கும், ACN அமைப்பு உதவவுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை ஒழிப்பதற்கு முயற்சிக்கும் கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு உதவுவதற்கென்று, ஏறத்தாழ 200 அவசரகாலத் திட்டங்களுக்கு 'தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவி' என்று பொருள்படும் Aid to the Church in Need (ACN) அமைப்பு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில், பெருந்தொற்று பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் துன்புறும், 140க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களில் பணியாற்றும், அருள்பணியாளர்கள், துறவியர், மற்றும் பொதுநிலையினருக்கு உதவுவதற்கென்று, ACN எனப்படும், இந்த பிறரன்பு அமைப்பு இந்த திட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது.

ACN அமைப்பு உதவவுள்ள 42 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பெறுமான இடர்துடைப்பு திட்டத்தில், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான 136 அவசரகாலத் திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், திருப்பலிக்கு வழங்கப்படும் நிதியைக்கொண்டு, அருள்பணியாளர்களுக்கு ஆதரவாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு உதவவும், ACN அமைப்பு தீர்மானித்துள்ளது.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அருள்பணியாளர்கள், மற்றும், துறவியரின் மருத்துவ சிகிச்சைக்கும், பெருந்தொற்றால் துன்புறும் மக்களுக்குப் பணியாற்றுகையில் அதனால் தாக்கப்பட்ட மற்ற திருஅவை பணியாளர்களுக்கும், இந்த திட்டத்தின் வழியாக உதவிகள் வழங்கப்படும் என்றும், அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் பெருந்தொற்று பாதிப்பு குறித்து ACN அமைப்பிடம் பேசிய டெல்லி பேராயர்  அனில் கூட்டோ அவர்கள், வேகமாகப் பரவிவரும் பெருந்தொற்று, நிச்சயமற்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது என்றும், எமது கிறிஸ்தவ நம்பிக்கை மட்டுமே தொடர்ந்து வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றது என்றும் கூறியுள்ளார். (ACN)

31 July 2021, 14:49